Home சினிமா ஸ்கூல் சினிமா விமர்சனம்

ஸ்கூல் சினிமா விமர்சனம்

ஹாரர் திரில்லர் கதையில் மாணவ மாணவிகளுக்கும் பெற்றோருக்கும் ஆக்கபூர்வமான கருத்து சொல்லியிருக்கும் படம்.

ஒரு தனியார் பள்ளிக்கூடம். அதில் ஒரு மாணவனும் மாணவியும் மர்மமான முறையில் இறந்துபோகிறார்கள். அதற்கு காரணம் அமானுஷ்ய சக்தி என நம்பப்படுகிறது. அதில் உண்மையும் இருக்கிறது. இன்னொரு பக்கம் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் எழுதிய ‘மைண்ட்செட் ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகம் மாணவர்களிடையே பிரிவினையை, மோதல் போக்கை உருவாக்குகிறது. அதனால் பள்ளியின் பெயர் கெட்டுப்போகிற சூழ்நிலை.

என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது என்பதை கண்டுபிடித்து பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர போலீஸ் தரப்பும், அமானுஷ்ய சக்திகளை கட்டுப்படுத்துகிற சாமியார் ஒருவரும் களமிறங்குகிறார்கள்.

அவர்கள் எதை கண்டுபிடித்தார்கள், சிக்கல்களை எப்படி தீர்க்கிறார்கள் என்பது மீதிக்கதை.

இடைவேளைக்குப் பிறகு வருகிற யோகிபாபுவுக்கு காமெடி பங்களிப்புக்கு வாய்ப்பில்லாத, மாணவ மாணவிகளின் நலன் சார்ந்து செயல்படுகிற ஆசிரியர் வேடம். அதை பொறுப்போடு செய்திருக்கிறார்.

சக ஆசிரியராக வருகிற பூமிகா செயலளவில் யோகிபாபுவின் ஜெராக்ஸாக களமாடி, ‘வாழ்க்கையில் வெற்றியை மட்டுமே துரத்திக்கொண்டு ஓடுவது தவறு’ என்பதை  கம்பீரமாக எடுத்துச் சொல்கிறார்.

தலைமையாசிரியராக வருகிற பக்ஸ் பகவதி பெருமாள் ‘வெற்றியடைவது மட்டுமே வாழ்க்கையில் முக்கியம்’ என்பதை விதவிதமாக வலியுறுத்தி எழுதி, அதை புத்தகமாக்கி, அதனால் மாணவர்களிடையே அடிதடி சம்பவங்கள் உருவாக காரணமாகிறார். யார் எடுத்துச் சொன்னாலும் தன் தவறை ஏற்காமல் கெத்து காட்டி, கடைசியில் உணர்கிறார். நடிப்பில் கவனிக்க வைக்கிறார்.

ஆவி, பேய், பிசாசு என அமானுஷ்ய சக்திகளை அடக்கியாள்கிற சாமியார்கள் எதையெல்லாம் செய்வார்களோ அதையெல்லாம் சரியாகச் செய்திருக்கிறார் படத்தின் இயக்குநர் ஆர் கே வித்யாதரன்.

ஆசைகள் நிறைவேறாமல் இறந்து ஆவியானவர்களை அடிமையாக்கி வைத்துக் கொண்டு கதையின் மையப்புள்ளியாக இருக்கிற பள்ளியின் நற்பெயரைக் கெடுக்கிற மந்திர தந்திர வேலைகளை ஓரளவு மிரட்டலாக செய்திருக்கிறார் நிழல்கள் ரவி.

காவல்துறை உயரதிகாரியாக கே எஸ் ரவிக்குமார், ஆவிகள் விரும்பும்போதெல்லாம் தங்கள் உடம்புக்குள் நுழைந்து அதன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள உதவுகிற ஆசிரியராக கே பி ஒய் யோகி, இன்னும் இரண்டு ஆசிரியைகள் கதையின் தேவையை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

உதவி தலைமை ஆசிரியராக வருகிற சாம்ஸ் செய்யும் காமெடி ரசிக்கும்படி இல்லை.

இசைஞானி இளையராஜா எழுதி இசையமைத்த பாடல்கள் கதையோட்டத்தில் சரியான தருணங்களில் இடம்பெறுகின்றன. பின்னணி இசையில் இளையராஜாவின் தனித்துவம் மிஸ்ஸிங்.

ஆதித்யா கோவிந்தராஜின் ஒளிப்பதிவு நேர்த்தி.

காட்சிகளிலிருக்கிற நாடகத்தனம், சலிப்பூட்டும் படத்தின் நீளம் என குறைகள் அணிவகுத்து நின்றாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், ‘பள்ளியிலும் சரி, வாழ்க்கையிலும் சரி வெற்றி பெறுவதை மட்டுமே லட்சியமாக கொண்டிருப்பது அவசியமற்றது’ என்பதை சரியானமுறையில் எடுத்துச் சொல்லியிருப்பதற்காக இயக்குநர் ஆர் கே வித்யாதரனை பாராட்டலாம்.

ஸ்கூல் _ நடத்தியிருக்கிறது வாழ்க்கைப் பாடம்!

-சு. கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்