பார்ப்பவர்களின் மனதுக்கு, ‘வாழ்க்கையில் எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்’ என்ற தெம்பு தருகிற ‘வேம்பு.’
இளம்பெண் வேம்பு சிலம்பக் கலையில் ஆர்வமாக இருந்து, கற்றுக் கொண்டு தேர்ச்சியடைகிறாள். கற்றுக்கொண்டதில் எதையும் சாதிக்காத நிலையில், தான் விரும்பிய மாமன் மகனுடன் திருமணத்துக்கு ஏற்பாடாகிறது. ‘சிலம்பத்தில் எதையாவது சாதிக்கும்வரை கல்யாணம் அது இதுவென எதுவும் வேண்டாம்’ என்ற தன் மனதிலிருக்கும் எண்ணத்தை வெளியில் சொல்லாமல், திருமணத்துக்கு சம்மதிக்கிறாள்.
வாய்த்த கணவன் நல்லவனிலும் நல்லவன். அவள் மனதைப் புரிந்துகொண்டு, அவள் சிலம்பக் கலையில் சாதிக்கும் வரை சராசரி கணவனின் எதிர்பார்ப்புகளை ஒதுக்கி வைப்பதாக சொல்லி, அவளை ஊக்குவிக்கிறான்.
அந்த சந்தோஷம் ஒரு நாள் கூட நீடிக்காத நிலையில் வேம்புவின் கணவன் ஒரு ஆபத்தில் சிக்க, அவனை ‘கண்’ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை அவளை தொற்றிக்கொள்கிறது. இன்னும் சில பிரச்சனைகளும் இறுக்கிப் பிடிக்கிறது.
அதையெல்லாம் அவளால் சமாளிக்க முடிந்ததா, கற்ற கலையில் சிறக்க முடிந்ததா என்பதெல்லாம் கதையோட்டத்தின் மிச்சசொச்சம்…
பாடம் நடத்துவது போலில்லாமல் போகிறபோக்கில் தற்காப்புக் கலையின் அருமை பெருமைகளை திரைக்கதையில் புகுத்தி கவனம் பெறுகிறார் இயக்குநர் ஜஸ்டின் பிரபு.
வேம்புவாக ஷீலா. எளிய கிராமத்துப் பெண்ணுக்கான தோற்றம் இயல்பாக அமைந்திருக்க, மாமன் மீது காட்டும் காதல், கணவனாகிவிட்ட மாமன் வீட்டோடு முடங்கிவிடும்போது அவனை கவனித்துக் கொள்வதில் காட்டும் கரிசனம், வருமான வாய்ப்புக்காக கணவனின் தொழிலைக் கற்றுக்கொள்ளும் துடிப்பு, தான் வசிக்கும் ஊருக்காக சிலம்பப் போட்டியில் பங்கேற்கும் கம்பீரம், தன்னிடமுள்ள திறமைக்கான அங்கீகாரம் தேடிவரும்போது உற்சாகம் என தனக்கான காட்சிகளை உயிரோட்டமான நடிப்பால் நிரப்பியிருக்கிறார்.
புகைப்பட கலைஞராக, போட்டோ ஸ்டுடியோ முதலாளியாக ஹரிகிருஷ்ணன். மனதுக்குப் பிடித்த முறைப்பெண்ணுடன் காதல், கல்யாணம் என குஷியாக கழிப்பதாகட்டும், தனது போட்டோ எடுக்கும் தொழிலை செய்யமுடியாத நிலைக்கு ஆளானபின் மென்சோகம் சுமந்தபடி வலம்வருவதாகட்டும்,
ஒரு விபத்து, அதனால் பாதிப்பு என்றபோதும் ‘இத்தோடு வாழ்க்கை முடிந்துவிட்டது’ என்றெண்ணி புலம்பித் தவிக்காமல் ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்ற நம்பிக்கையோடு இருப்பதாகட்டும், தன்னுடைய நம்பிக்கையை உடனிருப்பவர்களுக்கு கடத்துவதாகட்டும் தனது தனித்துவமான கதாபாத்திரத்தை எளிமையான நடிப்பால் தூக்கிப் பிடித்திருக்கிறார்.
யார் என்ன சொன்னாலும், தன் மகளின் விருப்பங்களுக்கு குறுக்கே நிற்கமாட்டேன் என்றிருக்கிற தந்தை, மக்களுக்கு நிஜமாகவே நல்லது செய்ய வேண்டும் என நினைத்து செயல்படுத்துகிற எம் எல் ஏ, தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளியின் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற முதலாளி என நல்ல மனிதர்களாய் படத்தில் பல கதாபாத்திரங்கள். நிஜத்தில் அவ்வளவாக சாத்தியமில்லாதவற்றை திரையில் பார்ப்பது சந்தோஷத்தின் சதவிகிதத்தை எகிறச் செய்கிறது. அந்த கதாபாத்திரங்களில் நடித்திருக்கிற மாரிமுத்து, கர்ணன் ஜானகி உள்ளிட்டோர் கதாபாத்திரமாகவே மாறியிருப்பது படத்தின் பலத்தைக் கூட்டுகிறது. கதைநாயகனின் தொழில் உதவியாளராக வருகிற சிறுவனின் பங்களிப்பும் மனதில் நிறைகிறது.
ஜஸ்டின் பிரபு வரிகளில் மணிகண்டன் முரளி இசையில் அந்தோணிதாசன் குரலில் ‘உப்பு மாங்கா புளி’ பாடல் ஆட்டம் போடத் தூண்டும். ‘மஞ்சனத்தி ஏ மஞ்சனத்தி’ பாடல் குதூகல மூடுக்கு ரசிகர்களை நகர்த்திப்போகும்.
கதை நிகழ்விடமான கிருஷ்ணகிரியின் மலைப்பகுதி குவித்து வைத்திருக்கும் அழகை, பசுமைப் பரப்பின் நீள அகலத்தை முழுமையாக சுருட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏ குமரன்.
ஆஹாஒஹோவென கொண்டாடும்படியான கதைச்சூழல் இல்லை; பிரமாண்டமான காட்சிகள் இல்லை; வசூலில் பெரியளவில் சாதனை படைக்கும் நடிகர் நடிகைகள் இல்லை; காட்சிகள் பல கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படவில்லை; ஒரே அடியில் ஐம்பது பேரை துவம்சம் செய்யும் ஹீரோயிசம் இல்லை… இருப்பது எளிமையான மனிக்தர்களும் அவர்கள் சந்திக்கும் இயல்பான பிரச்சனைகளும். அந்த பிரச்சனைகளில் சாமானிய மக்களின் மனதுக்கு நெருக்கமான விஷயங்கள் பின்னிப் பிணைந்திருப்பதால் பாராட்டுக்களை அள்ளிக் கொடுப்பது அவசியமாகிறது.
வேம்பு _ தன்னம்பிக்கை தளராதவள்; எளிய மக்களுக்கு எடுத்துக்காட்டு!
-சு.கணேஷ்குமார்

