Home விமர்சனம் ஜின் தி பெட் சினிமா விமர்சனம்

ஜின் தி பெட் சினிமா விமர்சனம்

வீட்டில் நாய் வளர்த்தால் நன்றியாக இருக்கும்; பேய் வளர்த்தால் என்னவாகும்? அதுதான் இந்த படத்தின் கதை.

‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ படத்தை, ‘ஆலம்பனா, நான் உங்கள் அடிமை’ என்று சொல்லிக்கொண்டு திரியும் பூதத்தை நினைவுபடுத்தும் திரைக்கதை.

மலேசியாவில் பணிபுரியும் கதாநாயகன் சக்தி ஒரு பெட்டியில் அடைக்கப்பட்ட ‘ஜின்’னை தொடுகிறான். ஜின் என்றால் நல்லது செய்கிற பேய். அதை தொட்ட நேரம் அவனுக்கு 5 லட்ச ரூபாய் பரிசாக கிடைக்கிறது. அதைவைத்து, ஜின்னை ராசியாக நினைக்கிறான்; அதை தமிழ்நாட்டிலிருக்கும் அவனது வீட்டுக்கு எடுத்துப் போகிறான்.

அது அவனது குடும்பத்துக்குள் போனதிலிருந்து சில அசம்பாவிதங்கள் நடக்கிறது. குடும்பத்தார் ‘ஜின் வந்ததால்தான் அப்படியான சம்பவங்கள் நடக்கிறது’ என்கிறார்கள். சக்தி அதை மறுக்கிறான்.

ஒரு கட்டத்தில், அவன் காதலித்து கல்யாணம் செய்து கொண்ட பெண் தாறுமாறாய் தாக்கப்பட்டு ரத்தச்சகதியில் கிடக்கிறாள். அவளை தாக்கியது ஜின்தான் என அவனது குடும்பத்தார் நம்புகிறார்கள். அவனும் நம்ப வேண்டிய கட்டாயம்.

கதை இப்படி பரபரப்பான ரூட்டை பிடித்து வேகமெடுக்கும்போது இன்டர்வல் வருகிறது; கூடவே அந்த பெட்டிக்குள்ளிருந்து ஜின்னும் வெளியில் வருகிறது; ‘நடந்த சம்பவத்துக்கு நான் காரணமில்லை’ என்கிறது.

அப்படியானால் உண்மையில் நடந்தது என்ன என்ன?

அடுத்தடுத்த காட்சிகளில் பதில் கிடைக்கிறது… இயக்கம் டி ஆர் பாலா

சக்தியாக முகேன் ராவ் மென்மையான தாடி மீசையுடனும் குண்டுக் கன்னங்களுடனும் பரபரப்பு தொற்றிக்கொண்ட கண்களுடனும் வருகிறார். காதல் உணர்வை அழகாகவும் ஜின் மீதான நம்பிக்கை, வெறுப்பு, கோபம், பாசம் உள்ளிட்டவற்றை அளவாகவும் காட்டுகிறார்.

நாயகி பவ்யா திரிகாவுக்கு ஹீரோவை காதலித்து மனைவியாவது, வில்லன்களின் ரகசியத்தைத் தெரிந்துகொண்டதால் எதிர்ப்பைச் சம்பாதிப்பது என புதுமையேதுமில்லாத கதாபாத்திரம். புன் சிரிப்பும் துடிப்பான நடிப்புமாய் தன் பங்களிப்பை குறையின்றி செய்திருக்கிறார்.

ஜின்’னுக்கு 700 வருடங்கள் முடங்கிக்கிடந்தபின் உருவம் பெற்று, தீயவர்களை சுளுக்கெடுக்கும் வேலை. பேய் போன்ற தோற்றம் சற்றே மிரட்சி தந்தாலும், அதன் வெகுளித்தனமான குரலும் நடவடிக்கைகளும் மனதைக் கவர்கிறது.

பாலசரவணன் மிகச்சில காட்சிகளில் மட்டுமே சிரிப்பூட்டுகிறார்.

நாயகனின் அப்பாவாக இமான் அண்ணாச்சி, அக்காவாக வினோதினி, பாட்டியாக வடிவுக்கரசி, தொழிலதிபராக நிழல்கள் ரவி, வில்லன்களாக ராதாரவி _  நந்து ஆனந்த் கூட்டணி… அவரவர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பில் சரியாக பயணித்திருக்கிறார்கள்.

திகிலும் திரில்லுமான கதைக்கு விவேக் _ மெர்வின் தந்துள்ள பின்னணி இசை பொருந்திப்போகிறது. பாடல்கள் பெரிதாய் எந்த அதிர்வும் தரவில்லை. ஒளிப்பதிவு கச்சிதம்.

படத்தின் முன்பாதி பொறுமையை சோதிப்பதை பொறுத்துக் கொண்டால், ஜின் முகம் காட்டிய பிறகான பின்பாதியிலிருக்கும் சில சுவாரஸ்யங்களை ரசிக்கலாம். ஹாரர் வாசனையோடு கிரைம் திரில்லராய் கடந்தோடும் கதையோட்டத்தை அனுபவிக்கலாம்.

-சு.கணேஷ்குமார் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்