கோர்ட் ரூம் டிராமாக்கள் பொறுத்தவரை கதை என்னதான் வலுவாக இருந்தாலும் திரைக்கதை சில இடங்களிலாவது போரடிக்கவே செய்யும். அதை மாற்றியிருக்கிற படம்.
கணவன் கொலைகாரன் என குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிற்க, வழக்கறிஞரான மனைவி சாவித்திரி அவனை நிரபராதி என வாதிட்டு சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற களமிறங்குகிறாள்.
இந்த ஒன்லைனே அசத்தலாக இருக்க, நீதிமன்றத்தில் அவளது கணவனை கொலைக் குற்றவாளி என நிரூபிக்கத் துடிப்பவர் எடுத்துக்கொண்ட வழக்குகள் அனைத்திலும் வெற்றி பெற்ற பிரபல வழக்கறிஞர் மார்க்கண்டேயன் என்பதும்,
அந்த மார்க்கண்டேயன்தான் சாவித்திரிக்கு வக்கீல் தொழில் கற்றுக் கொடுத்த குரு என்பதும் கதையோட்டத்தின் பரபரப்புக்கு காரணமாகிறது.
அந்த குருவும் சிஷ்யையும் நீதிமன்றத்தில் மோதுவது படு இன்ட்ரஸ்டிங்காக இருக்க, கொலை ஏன் நடந்தது, எதற்காக நடந்தது, யார் செய்தது என்பது யூகிக்க முடியாத கிளைமாக்ஸ்.
சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ். ஆரம்பக் காட்சிகளில் வழக்கமான கெக்கேபிக்கே சிரிப்போடு பார்க்கும்போது, இந்த ஜாலியான பெண் கோர்ட்டில் என்ன செய்யப் போகிறார்? போரடிக்குமோ? என்றெல்லாம் தோன்றத்தான் செய்கிறது. அப்படி தோன்றியதை மொத்தமாக டெலீட் செய்யும்படி நீதித்துறைக்குப் போதுமான ஆதாரங்களுடன் கோர்ட்டில் வாதிடும்போது அலட்டலில்லாத உடல்மொழியில் கம்பீரம் காட்டி கேரக்டருக்கு பலம் தந்திருக்கிறார். அம்மணிக்கு கணவருடன் ரொமான்ஸில் ஈடுபடுகிற வாய்ப்பும் இருக்கிறது.
முறைப்பான பார்வை, திமிரான பார்வை, தெனாவட்டுப் பார்வை கலந்த நக்கலான சிரிப்பு, நக்கலான பார்வை கலந்த தெனாவட்டுச் சிரிப்பு என அடிக்கடி முகபாவத்தில் வெரைட்டி காட்டியபடியே, நான் எடுத்துக்கிட்ட கேஸ்ல ஜெயிக்கிறதுக்கான யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என கர்ஜித்துக் கொண்டிருக்கிற வேலை மார்க்கண்டேயனாக வருகிற மிஷ்கினுக்கு. ரசிக்க முடிகிறது.
கீர்த்தி சுரேஷின் கணவராக, பொருத்தமான ஜோடியாக, மேன்லி லுக்கில் சாருகேசி. கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கும் விதம் ‘ஐயோ, அதட்டலா ஒரு வார்த்தைகூட பேச மாட்டேங்கிறார், அந்தளவுக்கு சாந்தமா இருக்குற மனுசனை கொலைகாரன் அதுஇதுன்னு சொல்றாங்களே’ என நினைக்க வைக்கிறது. அந்த நினைப்புக்கு மாறாக சிலபல தில்லாலங்கடி வேலைகளையும் அசத்தலாய் செய்கிறார்.
கதையின் போக்கிலேயே சிரித்து ரசிக்க சிலபல காட்சிகள் அணிவகுக்க, பாலசரவணன் அவர் பங்கிற்கு கலகலப்பூட்டுகிறார்.
படத்தின் சிறுபகுதியாக இருந்தாலும் ஜி எம் குமார், பிரிகிடா சம்பந்தப்பட்ட சீன்கள் கவனம் சிறப்பானவை.
ஷில்பா மஞ்சுநாத் கவர்ச்சி ததும்பும் வில்லியாக எட்டிப் பார்க்க, நீதிபதிகளாக குமார் நடராஜன், ஒய் ஜி மகேந்திரா, இன்னபிற கேரக்டர்களில் ‘ராஜாராணி’ பாண்டியன் உள்ளிட்டோரின் பங்களிப்பு கச்சிதம்.
அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பைத் தூண்டி கடந்தோடும் திரைக்கதையை தாங்கியிருக்கும் மூன்று தூண்கள் சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை, அருள் வின்சென்டின் ஒளிப்பதிவு, பிரசன்னா ஜி கே’வின் எடிட்டிங்.
‘நீதிமன்றம் எது சரி, எது தவறு என்பதில் கவனம் செலுத்துவதைவிட, சாட்சியங்களையே உற்று நோக்குகிறது’ என்கிற உண்மையை மையப்படுத்தி, அலுப்பு சலிப்பில்லாமல் பார்க்கும் பரபரவிறுவிறு படைப்பாக சத்தியவான் சாவித்திரியைத் தந்திருக்கும் அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் பாராட்டுக்குரியவர்.
-சு.கணேஷ்குமார்

