தமிழ் சினிமாவில் ஏழை எளிய மக்களுக்குள் இருக்கும் கனவுகளையும் அதை அடைய முடியாதபடி குறுக்கே நிற்கும் பிரச்சனைகளையும் எடுத்துக் காட்டிய படைப்புகள் ஏராளம் தாராளம். கார்த்திகேயன் மணி இயக்கத்தில் ‘மெட்ராஸ் மேட்னி’யாய் இன்னொன்று…
கண்ணன் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்துபவர்; எல்லா சாமானிய அப்பாக்களையும்போல ‘தான் படும் கஷ்டம் தன் பிள்ளைகள் படக்கூடாது’ என நினைப்பவர். கடுமையாக கஷ்டப்பட்டு மகளையும் மகனையும் படிக்க வைக்கிறார். வேலைக்குப் போய்க் கொண்டிருக்கும் மகள் ஒரு நபரை விரும்ப அதற்கு சம்மதிக்கிறார். மகன் அவர் மீது பாசமாக இருந்தாலும் சில சிக்கல்களை உருவாக்குகிறான்.
நாட்கள் அப்படியே கடந்தோட கண்ணனின் மகளால் விரும்பியவரை திருமணம் செய்துகொள்ள முடிந்ததா, கண்ணன் தன் மகனால் உருவாகும் சிக்கல்களை எப்படி சமாளிக்கிறார் என்பதெல்லாம் கதையின் மீதி…
கண்ணனாக காளி வெங்கட். அவருக்கு ஏழை எளிய மனிதனாய் நடிப்பது பழகிப்போன விஷயம். செய்யும் வேலையில் பொறுப்பு, பிள்ளைகள் மீது காட்டுகிற பாசம், வறுமைச் சூழலில் தவித்தாலும் அதையெல்லாம் சமாளித்து பிள்ளைகளின் வாழ்க்கையை வளமாக்கிவிட துடிப்பது, தன் மனதைப் புரிந்துகொள்ளும் மகளுக்கு அவள் விரும்பிய மணவாழ்க்கை அமையவேண்டும் என நினைப்பது, தன்னை புரிந்துகொள்ளாத மகனை சமாளிக்க முடியாமல் தவிப்பது, உதவி கேட்டு அலைந்து திரிந்து மனம் கலங்குவது என நீளும் காட்சிகளுக்கு முகபாவங்களாலும் உடல்மொழியாலும் பொருத்தமான உயிரோட்டம் தந்திருக்கிறார்.
மகளாக ரோஷினி ஹரிப்ரியன். சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தந்தை மீது பிரியம், அவர் மனம் நோகும்படி எதையும் செய்துவிடக்கூடாது என்பதில் கவனம், விரும்பிய நபரின் குடும்பத்தார் முன் சுயமரியாதையை விட்டுத்தராத கம்பீரம் என துளியும் அலட்டலில்லாத நடிப்பால் கவர்கிறார்.
டீனேஜ் பருவத்துக்கே உரிய துடிப்பு, யார் எவர் என பார்க்காமல் மனம் நினைப்பதை பேசுகிற துணிச்சல், அதிகாரமிக்க மனிதர்களிடம் அடங்கிப்போக மறுக்கிற தைரியம் என மகனாக வருகிற விஷ்வாவின் நடிப்பு ஏற்றிருக்கும் கதாபாத்திரத்துக்கேற்ற கச்சிதம்.
கணவனின் எளிய வருமானத்தில் குடும்பம் நடத்த வேண்டும்; குடும்பத்தில் யார் எந்த டென்ஷனில் இருந்தாலும் தான் உணர்ச்சிவசப்படாமல் தன்மையாய் நடந்துகொள்ள வேண்டும் என உருவாக்கப்பட்ட தன் கேரக்டரை உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறார் மனைவியாக வருகிற ஷெல்லி.
அரசியல்வாதியாக பச்சோந்தி பிரேமா என்ற பெயரில் வருகிற கீதா கைலாசம், விஜய் டி வி ராமருடன் மின்சார விநியோக மையத்துக்கு சென்று அவர்கள் தரப்பு தவறை சுட்டிக்காட்டி, காரியம் சாதிப்பது கெத்தாகவும் இருக்கிறது; அந்த காட்சி ரசிக்கும்படியும் இருக்கிறது.
ஜார்ஜ் மரியான் காளி வெங்கட்டுக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுப்பது கலகலப்புக்கு உதவுகிறது. சாம்ஸின் கெட்டப் சற்றே வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார்; லேசாக சிரிப்பூட்டுகிறார்.
அடாவடி அரசு ஊழியராக தன் பங்களிப்பை பரபரப்பாக தந்திருக்கிறார் சுனில் சுகாதே. தேனடை அர்ச்சனா, மதுமிதா என இன்னும் சிலர் வந்துபோகிறார்கள்.
கே.சி.பாலசாரங்கன் இசையில் வடிவேலு பாடும் ‘என்னடா பொழப்பு இது’ பாடல் கவனம் பெறுகிறது. ‘உசுரே உன்னைத் தானே’ பாடலில் விஜய் யேசுதாஸ் குரல் தாலாட்டுகிறது. பின்னணி இசை ஒகே ரகம்.
ஒளிப்பதிவாளர் ஆனந்த் ஜீ.கே, எடிட்டர் சதீஷ்குமார் கூட்டணி எளிமையான கதைக்களத்துக்கு போதுமான அளவில் உயிரூட்டியிருக்கிறது.
எழுத்தாளராக வருகிற சத்யராஜ் படம் முழுக்க, நடக்கும் கதை பற்றியும் கதாபாத்திரங்களின் நடவடிக்கைகள் பற்றியும் வாய்ஸ் ஓவரில் சொல்லிக்கொண்டே இருப்பது ஒரு கட்டத்துக்கு மேல் ஓவர் டோஸாகி எரிசசல் உணர்வுக்குள் தள்ளுகிறது.
புதுமையில்லாத கதை, பெரிதாய் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை என ஓடி முடிகிற மெட்ராஸ் மேட்னி, முதன்மை பாத்திரங்களின் உணர்வுபூர்வமான நடிப்பால் ஒருமுறை பார்க்கலாம் என்ற மதிப்பீட்டை வழங்கத் தூண்டுகிறது.
-சு.கணேஷ்குமார் 
