Home விமர்சனம் குபேரா சினிமா விமர்சனம்

குபேரா சினிமா விமர்சனம்

தனுஷ் நடித்திருக்கும் தெலுங்குப் படம்; பினாமிகள் உருவாக்கப்படுவதன் பின்னணியிலிருக்கும் பயங்கரமும் அதை எதிர்கொள்பவனின் போராட்டமுமாக ‘குபேரா.’

கடலில் குவிந்திருக்கும் எண்ணெய் வளத்தின் உரிமையை லஞ்சம் கொடுத்துப் பெறும் கார்ப்பரேட் முதலாளி நீரஜ், லஞ்சப் பணம் ஒரு லட்சம் கோடியை சம்பந்தப்பட்டவர்களுக்கு பிரித்தளிக்க திட்டமிடுகிறார். அதற்காக, பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் சி.பி.ஐ அதிகாரி தீபக்கை அணுகுகிறார்.

அவரது ஒத்துழைப்போடு லஞ்சப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற, தேவா உள்ளிட்ட பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்ட நான்கு பேரை களமிறக்கிறார்கள். அவர்களைப் பயன்படுத்திக்கொண்டு கொன்று விடுவது நீரஜின் திட்டம். அவர்களிடம் மாட்டிய நான்கு பேரில் இருவர் அவர்களால் ஆக வேண்டிய காரியம் ஆனதும் கொலை செய்யப்பட, அந்த வரிசையில் மூன்றாவதாக நிற்கிற தேவா தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சிக்கிறான். அதில் அவனுக்கு என்னவெல்லாம் நடக்கிறது, எதையெல்லாம் இழக்கிறான், எதையெல்லாம் செய்து முடிக்கிறான் என்பது மீதிக்கதை…

பிச்சைக்காரன், பணக்காரனாக நடிப்பவன், தன் பெயரில் ஆயிரம் கோடி பணம் இருப்பது தெரியும்போது அதை வைத்து என்ன செய்யலாம் என திட்டமிடுபவன் என தேவாவாக வருகிற தனுஷுக்கு ரொம்பவே கனமான கேரக்டர். பரிதாபம், விரக்தி, துணிச்சல், எரிச்சல், ஆவேசம், ஆக்ரோசம், பாசம் என உணர்வில் எத்தனை உண்டோ அத்தனையையும் இறக்கி வைத்திருக்கிறார் அந்த நடிப்பு அசுரன்.

நேர்மையான அதிகாரியாக இருந்ததால் தண்டிக்கப்பட்டவர், குற்றச் செயல்களை குத்தகைக்கு எடுத்துச் செய்கிறவனுக்கு அல்லக்கையாக செயல்படுபவர், அதனால் மனவலியை அனுபவிப்பவர், தானும் குற்றவாளி என்பதை உணர்ந்து வருந்துபவர் என தன் கதாபாத்திரத்தை இயல்பான நடிப்பால் கவனிக்க வைக்கிறார் தீபக் என்ற பாத்திரத்தை சுமந்திருக்கிற நாகார்ஜுனா.

ராஷ்மிகா மந்தனாவுக்கு அப்பாவிப் பெண் வேடம். அதற்கேற்ப அப்படியும் இப்படியும் திரிந்துகொண்டிருப்பவர் கிளைமாக்ஸில் குழந்தையை கையிலேந்தி புட்டிப்பால் புகட்டும்போது நெகிழ வைக்கிறார்.

கார்ப்பரேட் வில்லனாக 100 சதவிகிதம் மனிதாபிமானம் தொலைத்த கொடூரனாக டெம்ப்ளேட் நடிப்பைக் கொடுத்திருக்கிறார் கன்னத்துச் சதையை சுத்தமாகத் தொலைத்த ஜிம் சர்ப்.

கர்ப்பிணியாக வந்து வில்லன்கள் கூட்டத்தில் சிக்கிச் சீரழிகிற திவ்யா, இயக்குநர் கே பாக்யராஜ், சாயாஜி சிண்டே, சுனைனா, ஹரீஷ் பேரடி என இன்னபிறர் ஏற்றுக்கொண்ட கடமையைச் செய்திருப்பது திருப்தி தருகிறது.

திருப்பதி, மும்பை என பரவிப் பாயும் கதையோட்டத்தில் குப்பைக் கிடங்குகளையும் கார்ப்பரேட் உலகத்தையும் கலந்துகட்டிய கதைநிகழ்விடங்களை சுறுசுறுப்பான பார்வையில் பதிவு செய்து படத்தின் பலமாகியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி.

பின்னணி இசையில் காட்டுத் தீ பரவலின் வேகத்தைக் கொண்டு வந்திருக்கும் தேவிஸ்ரீபிரசாத், போய் வா நண்பா’ பாடலில் எனர்ஜியை ஏற்றியிருக்கிறார். கதையின் நீள அகலங்களைப் பரிமாறும் ‘என் மகனே’, ‘எனது எனது’ பாடல்கள் ரசிக்கவைக்கின்றன.

உயிர் காப்பாற்றிகொள்ளப் போராடும் பிச்சைக்காரன் ஒருவன் குபேரனாகிற கதையை பிரமாண்டமாகவும், அட்டகாசமான திரில்லர் அனுபவம் தரும் விதமாகவும் இயக்கியிருக்கிற சேகர் கமூலா, முதல் பாதியிலிருந்த சுவாரஸ்யத்தையும் விறுவிறுப்பையும் இரண்டாம் பாதியில் அவ்வளவாக தக்க வைக்காமல் நாடகத் தனமான காட்சிகளால் நிரப்பியிருக்கிறார்.

குபேரா -வசூலில் குபேரன்!

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்