Home விமர்சனம் ஃபீனிக்ஸ் சினிமா விமர்சனம்

ஃபீனிக்ஸ் சினிமா விமர்சனம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி குழந்தை நட்சத்திரமாக நானும் ரவுடிதான், சிந்துபாத் படங்களில் முன்பே நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்திருக்கும் படம் ‘ஃபீனிக்ஸ்.’

இந்தியா முழுக்க புகழ்பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். எற்கனவே சூர்யா சேதுபதியை சமூக வலைத்தளங்களில் கடுமையாக தாக்கி வருகிறது ஒரு கும்பல். அந்த வன்ம தாக்குதலுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் வெற்றி பெறுமா? சூர்யா சேதுபதி மக்கள் மனதை வெல்வாரா? பார்க்கலாம்…

படத்தின் ஆரம்பத்திலேயே பதின்பருவத்தில் இருக்கும் சூர்யா ஒரு எம் எல் ஏவை பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். ஒரு சிறுவன் அதுவும் 36 வெட்டுகள் வெட்டி கொலை செய்திருக்கிறாரே என அந்த வழக்கு சென்சேஷனல் ஆகிறது. சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருக்கும் சூர்யாவை கொலை செய்ய அடுத்தடுத்து பல முயற்சிகள் நடக்கின்றன. அதில் இருந்து எல்லாம் சூர்யா எப்படி தப்புகிறார்? அவர் ஏன் எம் எல் ஏவை கொலை செய்தார்? என்பதை ஆக்‌ஷன் அதிரடி கலந்து கமர்சியலாக சொல்லியிருக்கிறது திரைக்கதை.

கொஞ்சம் குண்டான தோற்றத்தில் இருந்த சூர்யா சேதுபதி ஆக்‌ஷன் படம் என்பதாலேயே அதற்கேற்ப கடும் உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை கச்சிதமாக உருமாறி இருக்கிறார். முதல் படத்திலேயே தன்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக நிலை நிறுத்தியிருக்கிறார். அதை நம்பும்படி திரையில் கொண்டு வர அவர் போட்ட உழைப்பு அபரிமிதமானது என்பது படம் பார்க்கும்போதே தெரிகிறது. ஆக்‌ஷன் ஹீரோவாக அறிமுகம் ஆனாலும் தனக்கெட தனியாக ஹீரோயின், காதல் காட்சிகள், காமெடி என பயணிக்காமல் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்திருக்கிறார். அதிகம் பேசாமல் ஆக்ஷனில் மட்டுமே பேசியிருக்கிறார். MMA போட்டிகளையும் சிறப்பாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

மற்ற நடிகர்களை பொறுத்தவரையில் படத்தில் நடித்த அத்தனை பேருமே தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். அதிலும் அனுபவமிக்க நடிகர்களான வரலக்‌ஷ்மி, தேவதர்ஷினி, சம்பத் ராம், முத்துக்குமார் என நல்ல நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார். வரலக்‌ஷ்மி ஏற்கனவே சண்டைக்கோழி 2 படத்தில் வந்தது போல ஒரு வில்லத்தனமான கேரக்டரில் கொஞ்ச நேரமே வந்தாலும் மிரட்டுகிறார். திலீபன், காக்கா முட்டை விக்னேஷ், அபி நக்ஷத்ரா, ஹரிஷ் உத்தமன், அஜய் கோஷ், வேல்ராஜ், அருள் தாஸ் என மற்ற நடிகர்களும் பொருத்தம்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு கதைக்களத்தை மிக அழகாக பிரதிபலித்திருக்கிறது. சிறார் கூர்நோக்கு இல்லத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை எடுத்த விதம் சிறப்பு. ஆக்‌ஷன் காட்சிகளும் மிகச்சிறப்பாகவே அமைந்துள்ளது. சாம் சி.எஸ் இசை படத்தின் மிகப்பெரிய பலம். பின்னணி இசையில் படத்தை தூக்கி நிறுத்திருக்கிறார்.

இயக்குனர் அனல் அரசு எடுத்துக் கொண்ட கதைக்களமும், அதை படமாக்கிய விதமும் ஒரு இயக்குனராக அவரை நிரூபணம் செய்திருக்கிறது. பரபரவென நகரும் திரைக்கதை படத்துக்கு பெரும் பலம். ஒரு காட்சி கூட, இது தேவையில்லையே என நினைக்க வைக்காத ஒரு நல்ல கமெர்சியல் திரைக்கதை. நாயகனுக்கு காதல் காட்சிகள் இல்லை என்றாலும் படத்தில் வரும் ஒரு லவ் டிராக் ரசிக்க வைத்தது. முதல் படத்திலேயே நல்ல ஒரு கமெர்சியல் வெற்றிப்படத்தை கொடுத்திருக்கிறார் நடிகர் சூர்யா சேதுபதி. நல்ல ஒரு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது!

 

REVIEW OVERVIEW
ஃபீனிக்ஸ் சினிமா விமர்சனம்
Previous articleநமித் மல்ஹோத்ராவின் ராமாயணம் – உலகின் மிகப்பெரிய காவியத்தின் அறிமுகம்!
Next articleஅனுக்கிரகன் சினிமா விமர்சனம்
phoenix-movie-reviewமக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி குழந்தை நட்சத்திரமாக நானும் ரவுடிதான், சிந்துபாத் படங்களில் முன்பே நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்திருக்கும் படம் 'ஃபீனிக்ஸ்.' இந்தியா முழுக்க புகழ்பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். எற்கனவே சூர்யா சேதுபதியை சமூக வலைத்தளங்களில் கடுமையாக தாக்கி வருகிறது ஒரு கும்பல். அந்த...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்