ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில், மு மாறன் இயக்கியிருக்கும் ’பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகவிருக்கிறது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் மாறன், “கதையை சுவாரஸ்யமாக படமாக்கி உள்ளோம். நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் தயாரிப்பாளர் அமல்ராஜ் இருவருக்கும் நன்றி. இவர்களுடன் பயணித்தது எங்கள் பாக்கியம். படத்தின் தொழில்நுட்பக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. த்ரில்லர் மட்டுமல்லாது செண்டிமெண்ட், காமெடி என ஜனரஞ்சகமாக படம் இருக்கும். நம் வீட்டிலேயே பிளாக்மெயில் உள்ளது. அதுபோல பாதிக்கப்பட்டவர்களின் கதையாக படம் இருக்கும். உங்கள் ஆதரவு தேவை. நன்றி” என்றார்.
நடிகர் ஜீவி பிரகாஷ்குமார், “மாறன் திறமையான இயக்குநர். தயாரிப்பாளராக அறிமுகமாகும் அமல்ராஜ் சாருக்கு வாழ்த்துக்கள். நல்ல கதைகள் நிச்சயம் கவனம் பெறும். அதுபோல, ‘பிளாக்மெயில்’ படமும் பேசப்படும் என நம்புகிறேன். தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்ஸ்டாகிராமில் தேஜூவுடன் நடனம் ஆடியிருந்தேன். வைரல் ஆனது. அங்கிருந்துதான் இந்தப் படத்திற்கு தேஜூ கதாநாயகியாக தேர்வு ஆனார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகை தேஜூ அஸ்வினி, “இந்தப் படம் வெகு சீக்கிரம் நடந்தது. ஜிவி சாருடன் ஒரு நிமிட வீடியோ செய்திருந்தேன். அங்கிருந்துதான் இந்த வாய்ப்பு கிடைத்தது. யங் டேலன்ட்ஸூக்கு இதுபோல தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வரும் ஜிவி பிரகாஷ் சாருக்கு நன்றி” என்றார்.
இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “30 வருடங்களுக்கு முன்னால் ‘பிளாக்மெயில்’ என்ற இந்தி படம் பார்த்தேன். காதலன் வில்லனாக மாறும் கதை அது. அந்தப் படத்தின் ஈர்ப்பு இந்த ‘பிளாக்மெயில்’ படத்தில் பார்த்தேன்” என்றார்.
இசையமைப்பாளர் சாம் சிஎஸ், “’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை அடுத்து மாறனுடன் பணிபுரியும் இரண்டாவது படம் இது. நான்கு பாடல்களில் மூன்று பாடல்கள் மற்றும் பின்னணி இசை நான் செய்திருக்கிறேன். ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் படங்களில் அவரது நடிப்பு இதில் உச்சமாக இருக்கும். படத்திற்கு வில்லன் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். வில்லனை விட துரோகிகள் பயங்கரம். நம் கூட இருப்பவர்கள் துரோகி ஆகும்போது என்னவாகும் என்பதுதான் கதை. இந்த மாதிரியான கதைகள் அதிகம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. வசனம் இல்லாமல் இசை மூலமாக கதை சொல்ல வேண்டும் என்ற இந்த படம் எனக்கு திருப்தியாக அமைந்தது. எல்லோரும் நன்றாக செய்திருக்கிறார்கள். எதாவது ஒரு வகையில் இந்தப் படம் உங்களுக்கு நெருடலையும் எச்சரிக்கையையும் கொடுக்கும்” என்றார்.
தயாரிப்பாளர் அமல்ராஜ், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, நடிகர் லிங்கா, நடிகை சந்திரிகா, நடிகர் முத்துக்குமார், நடிகை பிந்து மாதவி, தயாரிப்பாளர் தனஞ்செயன், தயாரிப்பாளர் கதிரேசன், இயக்குநர் வசந்தபாலன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ’ட்ரீம் வாரியர்ஸ்’ சிஇஓ குகன் உள்ளிட்டோரும் நிகழ்வில் படம் பற்றி பேசினார்கள்.




