உதயா – அஜ்மல் – யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் நாயகன் உதயா பேசுகையில், ”மூன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அக்யூஸ்ட் ‘ திரைப்படத்தில் நடித்திருக்கிறேன்.
சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று வரை எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஊடகங்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மேடை எனக்கு மிகவும் பிடித்த மேடை. நிறைய போராட்டங்களுக்குப் பிறகு சினிமாவை நிறைய நேசித்ததன் காரணமாக இங்கு நின்று கொண்டிருக்கிறேன். கடந்த மூன்று ஆண்டு காலத்தில் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறேன். அதன் பிறகு மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் பயணிக்க தொடங்கிய போது கேட்ட கதை தான் இந்த அக்யூஸ்ட் படத்தின் கதை.
இன்றைய தமிழ் சினிமாவில் கன்டென்ட் தான் முக்கியம். அதற்காக நல்ல கன்டென்டுக்காக காத்திருந்தேன். நான் இன்று வரை எந்த படமாக இருந்தாலும் தியேட்டருக்கு சென்று பார்த்து ரசிப்பவன். எது ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது, பிடிக்கும் என்பதனை உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் தான் கதையை கேட்கத் தொடங்கினேன்.
இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் முதலில் கன்னடத்தில் வெளியான படம் ஒன்றை தமிழில் ரீமேக் செய்யலாம் என்று சொன்னார். அது டார்க் காமெடி, எனக்கு ஒத்து வராது என்று சொல்லி புதிதாக கன்டென்ட் இருந்தால் அதை சொல்லுங்கள் என்றேன் . அத்துடன் எனக்கான பட்ஜெட் இதுதான் என்றும் சொன்னேன். ஆனால் அவர் சொன்ன அக்யூஸ்ட் கதை பெரிய பட்ஜெட் படம். இதை தயாரிப்பாளரிடம் சொன்னபோது அவர்கள் தான் இதற்கு ஆதரவாக இருந்தார்கள். அதனால் தான் இந்த படம் உருவானது.
இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் கிளாரிட்டியான டைரக்டர். அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் எதிர்காலம் இருக்கிறது. அத்துடன் பிரபு ஸ்ரீநிவாஸ் தயாரிப்பாளர்களின் இயக்குநராகவும் இருக்கிறார்.
இந்தப் படத்தினை பத்திரிகையாளர்களாகிய நீங்கள் பார்த்து பாராட்டு தெரிவித்து விட்டால், தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டு வெற்றி பெற செய்து விடுவார்கள்.
இன்றைய சூழலில் ஒவ்வொரு படத்திற்கும் விமர்சனம் அவசியம் தேவை. சினிமாவிற்கு மூன்று நாட்கள் விமர்சனம் தேவையில்லை என்று சொன்னாலும் கூட சினிமா என்றால் விமர்சனம் வரத்தான் செய்யும். அதனால் ஒவ்வொரு சினிமாவிற்கும் விமர்சனம் அவசியம் தேவை தான். அவை ஆரோக்கியமாக இருந்தால் நன்றாக இருக்கும். சம்பந்தப்பட்ட கலைஞர்கள் தங்களது தவறை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும்.
இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் என் குடும்பத்தை போன்றவர்கள் தான். அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்விற்கு வருகை தந்த எடிட்டர் ஷியாம், எஸ்கியூடிவ் புரொடியூசர் சிவசங்கரன், இயக்குநர் ராஜா, நடிகர்கள் பெங்களூர் டானி, பிரபாகர், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஹீரோ அஜ்மல், ஹீரோயின் ஜான்விகா, தயாரிப்பாளர் – தம்பி பன்னீர்செல்வம், தயாரிப்பாளர் – தம்பி சேது, நடிகை சுபத்ரா, ஒளிப்பதிவாளர் மருதநாயகம், ரங்கோலி படத் தயாரிப்பாளர் சதீஷ், தயாரிப்பாளர் - நடிகர் டி. சிவா ஆகியோருக்கும் நன்றி.
இந்த படத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, யோகி பாபு, எடிட்டர் பிரவீண் , இயக்குநர் பிரபு சாலமன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படம் 2 மணி நேரம் 10 நிமிடம் வரை ரசிகர்களை உற்சாகமாக வைத்திருக்கும். படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நல்ல கன்டென்ட், நல்ல படமாக வழங்கியிருக்கிறோம். நீங்கள் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் பேசுகையில், ”கன்னடத்தில் திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் என்னுடைய திரையுலக வாழ்க்கை தமிழில் தான் தொடங்கியது. சுந்தர் சி – தனுஷ் – அர்ஜுன் – ஆகியோர் நடித்த படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். கிட்டத்தட்ட 400 பாடல்களுக்கு மேல் நடன இயக்குநராக பணியாற்றிவிட்டு, கன்னடத்தில் திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் அங்கு சென்று படத்தை இயக்கினேன். ஒரே தயாரிப்பாளருடன் தொடர்ந்து ஐந்து திரைப்படங்களை இயக்கினேன். அதன் பிறகு சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து இயக்கினேன். இது என்னுடைய இயக்கத்தில் வெளியாகும் ஏழாவது படம். ஆனால் தமிழில் முதல் படம்.
கன்னடத்தில் ஆக்ஷன் ஃபிலிம் டைரக்டர் என்ற பெயரை சம்பாதித்து இருக்கிறேன். தமிழில் அறிமுகமாகும் போது மிக பிரம்மாண்டமான படத்தை இயக்க வேண்டும் என்று தான் எண்ணியிருந்தேன். இதற்காக லாரன்ஸ், விஷால் போன்ற சில ஹீரோக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன். ஆனால் எதுவும் சாத்தியமாகவில்லை. இந்தத் தருணத்தில் என் குடும்ப உறுப்பினர்கள் ‘நீங்கள் அப்படி நினைக்க கூடாது. நீங்கள் கன்னடத்தில் படத்தை இயக்கும் போது சின்ன படமாகத் தான் இருந்தது. ஆனால் அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனால் நீங்கள் இயக்கும் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என நினைத்து உருவாக்குங்கள்’ என ஆலோசனை சொன்னார்கள். அதன் பிறகு ஆறு மாதம் அமெரிக்காவிற்கு சென்று விட்டேன்.
அதன் பிறகு பிஆர்ஓ நிகில் முருகன் தான் இந்த அக்யூஸ்ட் படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டார். அவர்தான் உதயா கதை கேட்டுக் கொண்டிருக்கிறார். அவரை சந்தித்து கதையை சொல்லுங்கள் என்றார். அதன் பிறகு அவரை சந்தித்து கதையைச் சொன்னேன். கதையை முழுவதுமாக கேட்டுவிட்டு, கதை நன்றாக இருக்கிறது. குறிப்பாக என்னுடைய கேரக்டர் நன்றாக இருக்கிறது. நாளை தயாரிப்பாளரை சந்திக்கிறோம் என்றார். அடுத்த நாள் தயாரிப்பாளர்கள் பன்னீர்செல்வம் – தங்கவேல்- உதயா – ஆகியோர் இருந்தனர். தயாரிப்பாளர்களுக்கும் கதை பிடித்திருந்தது. ஆனால் அனைவரும் பட்ஜெட் அதிகம் என சொன்னார்கள். ஆனால் படப்பிடிப்பு நடைபெற்ற 60 நாட்களிலும் எந்த குழப்பமும் இல்லாமல் நான் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து படப்பிடிப்பை நிறைவு செய்தனர். எனக்கு கிடைத்த தொழில்நுட்ப கலைஞர்களும் திறமையானவர்கள். அதனால் படத்தை உருவாக்குவதற்கு எனக்கு முழு சுதந்திரம் இருந்தது. ஒன்றரை கோடி ரூபாய்க்கு பஸ் ஒன்றை விலைக்கு வாங்கி, அதனை படப்பிடிப்புக்கு பயன்படுத்திய பின் ஸ்கிராப்பிற்கு அனுப்பினோம். இதற்கும் உதயா தான் முழு காரணம்.
இந்தக் கதையில் நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் அஜ்மல் நடித்தார். அவருக்கு கதை சொன்ன தருணத்திலிருந்து தற்போது வரை முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
கதையில் இடம்பெறும் மற்றொரு கதாபாத்திரத்திற்கு யோகி பாபு விடம் பேச்சுவார்த்தை நடத்தினோம் கதையைக் கேட்ட அவர் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தொடர்ந்து 14 நாட்கள் கால்ஷீட் கொடுத்து ஒத்துழைப்பு அளித்தார்.
இந்தப் படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். என்னுடைய உறவினர் இசையமைப்பாளராக இருந்தாலும் இந்தப் படத்திற்கு புது இசையமைப்பாளர் வேண்டும் என விரும்பினேன் இதற்காக உதயா அவருடைய ‘உத்தரவு மகாராஜா’ படத்திற்கு இசையமைத்த நரேன் பாலகுமாரை அறிமுகப்படுத்தினார். அவரது பாடலைக் கேட்டவுடன் பிடித்து விட்டது. இந்தப் படத்தில் அவரின் இசையில் உருவான பாடல்கள் எனக்கும் பிடித்தது. என் மகன்களுக்கும் பிடித்தது. ஒரு பாடலை சிறிய வயதில் இருக்கும் பிள்ளைகள் பாடினால் அந்தப் பாட்டு ஹிட் ஆகும். பாடல்களைப் போல் பின்னணி இசையிலும் நரேன் மெஸ்மரைஸ் செய்திருக்கிறார். இந்தப் படத்தைப் பற்றி நான் எதையும் மிகையாக சொல்லவில்லை, நீங்கள் படம் பார்த்தால் புரியும்.
இந்தப் படம் அனைவரையும் மெஸ்மரைஸ் செய்யும். இந்த படத்தைப் பற்றிய ஏதேனும் எதிர்பார்ப்பு இருந்தால் அதைவிட அதிகமாகவே இருக்கும். திரைக்கதையில் யாரும் யூகிக்காத திருப்பங்கள் இருக்கும். படம் தொடக்கம் முதல் இறுதி வரை கண் இமைக்காமல் பார்க்கும் படி இருக்கும்,” என்றார்.
நாயகி ஜான்விகா பேசுகையில், ”இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படம். ‘அக்யூஸ்ட்’ ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகிறது. உங்கள் அனைவரின் ஆதரவும் அன்பும் தேவை.
இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்த தயாரிப்பாளருக்கும் , இயக்குநருக்கும், உதயாவிற்கும் நன்றி.
இந்தப் படத்தில் அழகான காதல் கதை இருக்கிறது. அற்புதமான பாடல்கள் உள்ளன. சில்வா மாஸ்டர் அமைத்த சண்டை காட்சிகளும் உள்ளன. யோகி பாபுவின் காமெடி இருக்கிறது. அத்துடன் இந்தத் திரைப்படம் ஒரு ஃபேமிலி என்டர்டெய்னர். அதனால் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.



