Home சினிமா சென்ட்ரல் சினிமா விமர்சனம்

சென்ட்ரல் சினிமா விமர்சனம்

எளிய தொழிலாளிக்கும், அராஜக முதலாளிக்கும் நடக்கும் மோதலாக ‘சென்ட்ரல்.’

,மாணவன் பாரதி பிளஸ் டூ எக்ஸாம் எழுதி முடித்தபின் விடுமுறையில் குடும்ப வறுமை காரணமாக காட்டன் மில் ஒன்றில் வேலைக்கு சேர்கிறான். அங்கு ஈவிரக்கமற்ற காட்டான் ஒருவன் சூப்பர்வைசராக இருக்கிறான். தொழிலாளிகளை கசக்கிப் பிழிகிறான். அடிக்கவும் செய்கிறான். அவனை எதிர்த்தால் கொலையும் செய்கிறான்.

சூப்பர்வைசரே அப்படியிருக்க முதலாளி அதைவிட கொடூரமானவராக இருந்தால்தானே பொருத்தமாக இருக்கும்? அவரும் நாம் எதிர்பார்த்தபடியே இருக்கிறார்.

அந்த இரு ராட்சசன்கள் நிர்வகிக்கும் நிறுவனத்தில் வேலையில் இணைகிற பாரதிக்கும், மற்ற தொழிலாளர்களுக்கு நடக்கும் கொடுமை நடக்கிறது…

அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பதை எடுத்துக்காட்டி வேகமெடுக்கின்றன அடுத்தடுத்த காட்சிகள்…

பாரதியாக ‘காக்கா முட்டை’ விக்னேஷ். எளிமையாக கதைகளைத் தாங்குகிற ஹீரோவுக்கான முகவெட்டு இயல்பாக அமைந்திருக்க, உடற்கட்டிலும் ஹீரோவுக்கான அம்சங்களை ஏற்றிக்கொண்டு களமிறங்கியிருக்கிறார். வறுமையை நினைத்து கலங்கும்போதும், வலியவர்களை எதிர்க்கத் தயாராகும்போதும் நடிப்பில் தேவையான முகபாவங்களை கொண்டு வருகிறார். காதல் தருணங்களை மெல்லிய புன்னகையுடன் கடந்து செல்கிறார்.

கையில் வைத்திருந்த பொருளை கவனக்குறைவில் தவற விட்டதற்காக பாரதியை அறைந்து ஆத்திரம் தணித்துக் கொள்வதிலிருந்து, தன் அராஜகங்களை போலீஸில் சொன்னவரை பரலோகத்துக்கு அனுப்புவது வரை வில்லத்தனத்தில் தனி ராஜ்ஜியம் நடத்தியிருக்கிறார் இயக்குநர் பேரரசு.

சூப்பர்வைசராக ‘சித்தா’ தர்சன். தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் மீது கருணை காட்டாமல் நடந்து கொள்வதும், எதிர்க்கத் துணிந்தால் கடுமையாக அடித்துக் கொல்வதுமாய் தனது பங்களிப்பை அளவுக்கதிக அலட்டலோடு செய்திருக்கிறார்.

இளமை ததும்ப லட்சணமாக இருக்கும் சோனேஷ்வரி பாரதியின் பள்ளித் தோழியாய், காதலியாய் சில நிமிடங்கள் வந்து போகிறார். அவருக்கு ஒதுக்கப்பட்ட காட்சிகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் கதையில் கதாநாயகி என்று ஒருவர் இருக்கட்டும் என இழுத்துப் போட்டது போலிருக்கிறது.

அப்பாவாக வருகிறவர் வறுமையின் வலியை உணர்த்தும்படி நடித்திருக்க, இன்னபிற நடிகர், நடிகைகள் கதையோட்டத்தில் கலந்திருக்கிறார்கள்.

அசுரனை வதம் செய்வதுபோன்ற ஒரு காட்சியில் கவனம் பெறுகிறார் இந்த படத்தை இயக்கியிருக்கிற பாரதி சிவலிங்கம்.

இளாவின் இசையில் கானா பாலா குரலில் ‘என்னடா உலகம்’ தத்துவப் பாட்டு மனதில் தங்குகிறது. ‘மடங்கி மடங்கி’ பாடலில் காதல் உணர்வு வழிகிறது. கதையோட்டத்துக்கு ஸ்பீடு பிரேக் போடும்படி இன்னும் சில பாடல்களும் இடம்பெற்றிருக்க, பின்னணி இசை ஓகே ரகமாக பயணிக்கிறது.

வினோத் காந்தியின் தரமான ஒளிப்பதிவில் அரியலூரையும் சென்னையையும் கழுகுப் பார்வையில் சுற்றிப் பார்க்க முடிகிறது.

தொழிலாளர்களை வாட்டி வதைக்குமிடத்தில் வேலைக்குச் சேர்ந்த ஹீரோவுக்கு கோபம் கொப்பளிக்கும்போது, பல படங்களில் பார்த்து சலித்ததுபோல் அவன் அவர்களை போட்டுத்தள்ளுவான்; பின்னாளில் ரவுடியாக உருவாகி தாதாவாக மாறி நிற்பான் போலிருக்கிறது என்று சலிப்படைந்தால், அப்படியெல்லாம் இல்லாமல் அவனது எதிர்காலத்தை முன்னுதாரணமாக்கி படத்தை நிறைவு செய்திருப்பதற்காக இயக்குநர் பாரதி சிவலிங்கத்தை கட்டிப்பிடித்துப் பாராட்டலாம்.

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்