Home விமர்சனம் வானரன் சினிமா விமர்சனம்

வானரன் சினிமா விமர்சனம்

சில கதைகளின் முடிவு ஒரு குறிப்பிட்ட கருத்தை எடுத்துச் சொல்வதாக இருக்கும். சில கதைகளின் முடிவில் ஒன்றுக்கும் மேற்பட்ட கருத்துக்கள் கிடைக்கும். சில கதைகளின் முடிவில் நான்கைந்து கருத்துக்கள் குவிந்திருப்பது போலிருக்கும்; எதை எடுத்துக் கொள்வது, எதை புறக்கணிப்பது என்ற குழப்பத்தை உருவாக்கும். இந்த வானரன் தருகிற முடிவு உங்களை பலவிதமாக யோசிக்க வைக்கும்.

அனுமந்த ராவ் எளிய மனிதன்; மனைவியை இழந்தவன்; மகளை பாசமாக வளர்த்து வருபவன். மகள் ஆசைப்பட்ட செருப்பை வாங்கித்தர முடியாமல் இருக்கும் நிலையில், அந்த மகளை வியாதியிலிருந்து காப்பாற்ற லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிற சூழ்நிலை. அதுவரை அனுமார் வேடமிட்டு யாசகம் பெற்று வாழ்நாளை கழித்து வந்தவன் மகளின் ஆபரேசனுக்காக பலரிடமும் உதவி கேட்டு அலைகிறான்.

உதவி கிடைத்ததா, மகளை வியாதியிலிருந்து மீட்க முடிந்ததா என்பது கதையின் மீதி… கிளைமாக்ஸ் அதிர வைக்கிறது.

அனுமந்த ராவாக வருகிற பிஜேஷ் நாகேஷ் கமர்சியல் ஹீரோவுக்கான இலக்கணங்கள் எதுவுமில்லாத நபராக இருக்கிறார். அதுவே அவரது சாமானிய மனிதன் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கிறது. அனுமன் வேடத்தில் யாசகம் கேட்டு மேகம் போல் அங்குமிங்கும் சுற்றித் திரிவது, மகள் மீது பாசமழை பொழிவது, மகளுக்கு வந்திருக்கும் உடல்நல பிரச்சனை பற்றி அறிந்ததும் இடி தாக்கியது போல் மனம் உடைவது, லட்சக்கணக்கில் பணத்தை தொலைத்துவிட்டு புயலில் சிக்கிய படகாய் அல்லாடுவது என தனது வலி சூழ்ந்த கேரக்டருக்கு அலட்டலில்லாத இயல்பான நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார். ‘ஓம் ஸ்ரீ ஆஞ்சனேயா வித்மஹே’ என அனுமன் துதி பின்னணியில் ஒலிக்க ஆடும் ஆவேச ஆட்டம் அவர் ஆனந்த்பாபுவின் வாரிசென்பதை எடுத்துச் சொல்கிறது.

மகளாக வருகிற சூப்பர் சிங்கர் பேபி வர்ஷினியின் கியூட்டான சிரிப்பில் அவளது தந்தை மட்டுமல்ல; ரசிகர்களும் உற்சாகமாகிறார்கள். அந்த குட்டிச் சுட்டி அப்பாவின் கலங்கிய மனநிலை உணர்ந்து ஆறுதல் வார்த்தை சொல்கிற மெச்சூரிட்டி மனதைக் கவர்கிறது.

பிஜேஷின் காதல் மனைவியாக ஹோம்லி லுக்கில் வருகிற அக்ஷயாவுக்கு காட்சிகள் அதிகமில்லை; நடிப்பில் குறையில்லை.

நடிகர் விஜயகாந்த்தின் தோற்றத்திலிருக்கிற, கலை நிகழ்ச்சிகளில் விஜய்காந்தாக தோன்றி அவரைப் போலவே பேசி நடிக்கிற ஒருவர் கதைநாயகனின் நண்பனாக வருகிறார். உதவி செய்வதில் நிஜ விஜயகாந்த் போலவே நடந்து கொள்கிறார்.

லொள்ளு சபா ஜீவா இஸ்லாமியராக வருகிறார்; தனக்கு செய்வதை விட இல்லாதவர்க்கு செய்வதையே இறைவன் விரும்புவான் என்பது போல் மக்கள் எல்லோரும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டிய கருத்தை சொல்லி நகர்கிறார்.

ரஜினியை தான் இயக்கும் படத்தில் நடிக்க வைக்க அட்வான்ஸ் கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கும் கதாபாத்திரமொன்று படத்திலுண்டு. மனதளவில் 1984 காலகட்டத்தில் வாழ்கிற அந்த நபருக்காக அமைத்திருக்கும் காட்சிகள் படு சுவாரஸ்யம்.

வாழ்நாள் தந்த அனுபவத்திலிருந்து ‘நல்லவனா இருந்தா வேஸ்ட்’ என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டு, ‘சுயநலத்துக்காக எதை செய்தாலும் பெஸ்ட்’ என்ற முடிவுக்கு வந்தவராக ஆதேஷ் பாலா. திருட்டுக் குற்றத்துக்காக போலீஸில் தாறுமாறாக அடிபடுபவர், அந்த வலியின் உணர்வை துளிகூட பிரதிபலிக்காமல் இரும்பாக நின்று, தன் கருத்தை அழுத்தந்திருத்தமான குரலில் வெளிப்படுத்துவது படத்தின் கவனம் பெறும் காட்சிகளில் ஒன்று.

அப்பா மகள் பாசக் கதைக்கேற்ப உணர்வுபூர்வமாக எழுதப்பட்ட ‘நீதானே என் உலகம்’ பாடலுக்கு ஷாஜகான் தந்திருக்கும் இசை சிலிர்ப்பூட்ட, ‘யாரோ என் நெஞ்சில்’ பாடல் இதயத்தை வருடிப் போகிறது. நிரன் சந்தரின் ஒளிப்பதிவு நேர்த்தி.

படத்தின் நீளத்தை அனுமன் வால் போல் நீட்டி முழக்காமல் 92 நிமிடங்களில் அடக்கியிருக்கிறது வித்து ஜீவாவின் படத்தொகுப்பு.

மனிதர்களை சந்தர்ப்பச் சூழ்நிலை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை எடுத்துச் சொல்லியிருக்கும் இயக்குநர் ஸ்ரீராம் பத்மநாபன், ‘எளிய மனிதர்கள் அவசர ஆபத்துக் காலத்தில் உதவி கேட்டு தவிக்கும்போது கைகொடுக்க நம்மிடையே மனிதாபிமானம் கொண்டோர் பலருண்டு’ என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.

வானரன் _ வழங்கிய கருத்தால் வானளவு உயர்ந்தவன்!

-சு.கணேஷ்குமார்

REVIEW OVERVIEW
வானரன் சினிமா விமர்சனம்
Previous articleகூலி பட கவுண்டவுன் கூலி அன்லீஷ்ட் பிரிவியூவுடன் Sun NXT -ல் தொடங்குகிறது!
Next articleநாளை நமதே சினிமா விமர்சனம்
vaanaran-movie-reviewசில கதைகளின் முடிவு ஒரு குறிப்பிட்ட கருத்தை எடுத்துச் சொல்வதாக இருக்கும். சில கதைகளின் முடிவில் ஒன்றுக்கும் மேற்பட்ட கருத்துக்கள் கிடைக்கும். சில கதைகளின் முடிவில் நான்கைந்து கருத்துக்கள் குவிந்திருப்பது போலிருக்கும்; எதை எடுத்துக் கொள்வது, எதை புறக்கணிப்பது என்ற குழப்பத்தை உருவாக்கும். இந்த வானரன் தருகிற முடிவு உங்களை பலவிதமாக யோசிக்க வைக்கும். அனுமந்த ராவ் எளிய மனிதன்; மனைவியை இழந்தவன்;...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்