‘நன்‘றாக இருக்கிறது என ஒருசிலர் பாராட்டலாம்; படத்திலிருக்கும் ‘ஏ’டாகூட காட்சிகளைக் கண்டு ‘டைரக்டர் நல்லா வெச்சி செஞ்சிருக்கார்ல’ என ஒருசிலர் கிளுகிளுப்படையலாம். அப்படியொரு எக்குத்தப்பான படம்.
மதச் சடங்குகள், சம்பிரதாயங்கள் சிலவற்றைப் பார்க்கும்போது அதையெல்லாம் மனிதாபிமானமற்றவர்கள் உருவாக்கியது போலவும், முட்டாள்தனமாகவும், பைத்தியக் காரத்தனமாகவும் இருக்கும். அப்படியான சடங்கு சம்பிரதாயங்களை சில இயக்குநர்கள் தங்கள் படங்களில் ஒருசில காட்சிகளின் வழியாக விமர்சிப்பதுண்டு; கேலி கிண்டல் செய்வதுண்டு. இந்த படத்தின் இயக்குநர் முழு படத்தையும் அதற்காகவே எடுத்திருப்பது போல் தோன்றுகிறது.
‘மரியா’ மூலம் கிறிஸ்துவ மதத்தில் கன்னியாஸ்திரிகளுக்கு விதிக்கப்படுகிற கட்டுப்பாடுகளை சுட்டிக் காட்டி, இதெல்லாம் சரியா?’ என கேள்வி கேட்பது இயக்குநரின் நோக்கம். படத்திலிருக்கும் சில காட்சிகளைப் பார்த்தால் இயக்குநரிடம் ‘இதெல்லாம் சரியா?’ என நாம் ஆத்திர ஆவேசப்பட வேண்டியிருக்கும்.
கன்னியாஸ்திரி ஒருவர் கன்னியாஸ்திரியாக இருப்பதிலிருந்து விலகி, சராசரி பெண்களைப் போல் வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறார். துணிச்சலை உருவாக்கிக்கொண்டு விரும்பியதை செய்கிறார். அதனால் அவர் சந்திக்கும் கஷ்ட நஷ்ட அவமானங்களே ஸ்கிரீனில் விரிகிற ஸ்கிரீன்பிளே…
மரியாவாக சாய்ஸ்ரீ பிரபாகரன். மதக் கட்டுப்பாடுகள் தந்திருக்கும் வலியை பிரதிபலிப்பதாகட்டும், மனது கட்டுப்பாட்டைமீற நினைக்க அதற்கு உடல் ஒத்துழைப்பு தந்துவிட செய்தது தவறென்ற குற்றவுணர்ச்சியில் விழுவதாகட்டும், ஒரு ஆணை காம உணர்வுடன் பார்த்து கிளர்சியடைவதாகட்டும், அந்த ஆணை அனுபவிக்கும்போது அது தரும் சுகத்தை முகபாவங்களில் காட்டுவதாகட்டும், கிறிஸ்துவத்திலிருந்து விலகி சாத்தான் வழிபாட்டு முறைக்கு தாவுவதாகட்டும் சர்ச்சையான கதாபாத்திரத்தை ஏற்ற துணிச்சலுக்காகவும், ஏற்றதை சரியாக செய்திருப்பதற்காகவும் பாராட்டலாம்.
மரியாவின் உணர்வை ஆரம்பத்தில் வெறுத்து, பின்னர் அவரது உணர்ச்சியைப் புரிந்து உடல் பசிக்கு உணவளிப்பராக விக்னேஷ் ரவி. தனக்கு கொடுக்கப்பட்டிருப்பது பிளே பாய் கேரக்டர் என்பதை உணர்ந்து குஷி மூடில் களமாடியிருக்கிறார்.
மரியாவின் உறவுக்காரப் பெண்ணாக வருகிற சித்து குமரேசனுக்கு குழப்பம், கோபம், உற்சாகம் என பலவித உணர்வுகளை அதற்கு பொருத்தமான உடல்மொழியில் பிரதிபலிக்கத் தெரிகிறது. இயக்குநர்கள் அழுத்தமான கேரக்டர்களை அவரை நம்பி கொடுக்கலாம்.
சாத்தான் வழிபாட்டுக் குழுவை வழிநடத்துகிறவராக வருகிற பாவல் நவகீதன், சாத்தான் வழிபாடு பற்றி, அதன் பலன்கள் பற்றி ஏகப்பட்ட விஷயங்களை எடுத்துச் சொல்லி கடந்து போகிறார்.
பாலாஜி வேலன், சுதா புஷ்பா, அபிநயா என இன்னபிற நடிகர் நடிகைகள் கதைக்குத் தேவையான பங்களிப்பை கச்சிதமாக செய்திருக்க, ஒளிப்பதிவு பாஸ்மார்க் வழங்குகிற தரத்திலிருக்கிறது.
அரவிந்த் கோபால கிருஷ்ணன், பரத் சுதர்ஷன் கூட்டணியின் இசை காட்சிகளின் தன்மைக்கு உயிரோட்டம் தந்திருககிறது.
படத்தின் மூலம் இயக்குநர் சொல்ல வந்த கருத்து சரியா, தவறா என்பதையெல்லாம் பெரும் விவாதங்களுக்குப் பிறகுதான் தீர்மானிக்க முடியும். இப்போதைக்கு, ‘இது மோசமான படைப்பு’ என்பதுதான் படம் பார்த்த பெரும்பாலானோரின் கருத்து; டிக்கெட்டுக்கு செலவழிச்ச காசு நாட் வொர்த்து.
மரியா _ இதெல்லாம் சரியா?
-சு.கணேஷ்குமார்
