காந்தா சினிமா விமர்சனம்

‘மகா நடி’ படத்தின் நாயகன் ‘ஊதித்தள்ள நான் மண்ணு இல்ல; மல’ என பஞ்ச டயலாக் பேசி மகா நடிகனாக பந்தா காட்டியிருக்கும் ‘காந்தா.’

தமிழில் திரைப்படங்கள் வெளியாகத் துவங்கி கால் நூற்றாண்டைத் தாண்டியிருக்கிற காலகட்டம். தன்னை வளர்த்துவிட்ட இயக்குநரின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிற அந்த பிரபல ஹீரோ, ஒரு சில காட்சிகளிலும், கிளைமாக்ஸிலும் மாற்றம் வேண்டும் என்கிறார். இயக்குநர் ‘இது என் படம்; என் விருப்பப்படிதான் எடுப்பேன்’ என்கிறார். ஹீரோ, ‘நான் சொல்லும்படி எடுத்தால்தான் என் ரசிகர்களைத் திருப்திபடுத்த முடியும்’ என்கிறார். அப்படி திரைக் கலைஞர்கள் இருவருக்குள் ஆரம்பிக்கும் பிரச்சனை இருவரையும் ஒரு கொலைக் குற்றத்தில் சிக்கவைக்கும் அளவுக்கு பெரிதாகிறது.

கொலை செய்யப்பட்டது யார்? கொலைக்கான காரணம் என்ன? அதில் இயக்குநரும் நடிகரும் எப்படி சிக்குகிறார்கள்? கொலை செய்தது யார்? படம் யார் நினைத்தபடி எடுக்கப்பட்டது?

இத்தனை கேள்விகளுக்குமான பதில்களாய் விரியும் காட்சிகள் அத்தனையும் பரபரப்பு, விறுவிறுப்பு…

ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநரிடம் பிரபல ஹீரோவுக்கான அலட்டலை காண்பிப்பது, தனக்கு ஜோடியாக நடிப்பவருடன் காதலாகி உற்சாகமாக பொழுதை கழிப்பது, எடுக்கப்படும் காட்சியில் ஊர் உலகம் நடிப்புச் சக்கரவர்த்தி என கொண்டாடும் புகழை தக்கவைக்கும்படி கதைக்கேற்ற உணர்வை பொருத்தமான உடல்மொழியில் வெளிப்படுத்துவது என அந்தக்கால ஹீரோக்களை கண்முன் நிறுத்தும் துடிப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார் துல்கர் சல்மான்.

படத்துக்குள் எடுக்கப்படும் படத்தில் துல்கருக்கு ஜோடியாக நடிக்கும் பாக்யஸ்ரீபோர்ஸுக்கான மேக்கப் பழங்காலத்து ஹீரோயின்கள் நம் முன்னே நடமாடுவது போலிருக்கிறது. உணர்வுபூர்வமான நடிப்புக்கு பெரியளவில் உதவி செய்திருக்கின்றன அவரது விழிகள்.

யாருக்காகவும் எதற்காகவும் தன் முடிவிலிருந்து இறங்கி வரத் தயாராக இல்லாத நபராக, ஈகோவை விட்டுத்தராத இயக்குநராக சமுத்திரகனி காட்டியிருக்கும் கெத்து கதையோட்டத்தில் சேர்ந்திருக்கும் சத்து.

கொலை விவகாரத்தில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க களமிறங்கும் காவல்துறை அதிகாரியாக வருகிற ராணா டகுபதியும் லுக்கிலும் நடிப்பிலும் ஸ்டைல் தூக்கலாக இருக்கிறது.

துல்கரின் மனைவியாக காயத்ரி சங்கர், மாமனாராக நிழல்கள் ரவி இன்னபிற கதாபாத்திரங்களில் ரவீந்திர விஜய், ஆடுகளம் நரேன், பிஜேஷ் நாகேஷ், பக்ஸ் பகவதி பெருமாள், வையாபுரி, ஜாவா சுந்தரேசன், பரதன் உள்ளிட்டோரின் பங்களிப்பு பக்கா.

கிரைம் திரில்லராக வேகமெடுக்கும் கதைக்கேற்ற பின்னணி இசையைத் தந்திருக்கும் ஜானு சந்தர் படத்தின் ஒரு தூண் என்றால், 75 ஆண்டுகள் முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதைக்கேற்ப கதை நிகழ்விடங்களை அமைத்திருக்கும் கலை இயக்குநர் ராமலிங்கத்தின் உழைப்பு மற்றொரு தூணாகியிருக்கிறது.

பிளாக் அன்ட் ஒயிட்டில் பல, வண்ணத்தில் சில என நகரும் காட்சிகளை டேனியின் ஒளிப்பதிவிலிருக்கும் தரம் மெருகூட்டியிருக்கிறது.

இந்த படம் அவரது வாழ்க்கை வரலாறு, இவரது வாழ்க்கை வரலாறு என்றெல்லாம் படம் குறித்து வந்த செய்திகளை மனதில் ஓரத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு,

இயக்குநர் நடிகர் இருவருக்குள் போட்டி பொறாமை சண்டை சச்சரவு வந்தால் ஷூட்டிங் ஸ்பாட் எப்படியிருக்கும் என்பதை தெரிந்துகொள்வதற்காக,

அந்தக் காலத்தில் ஒரே ஸ்டுடியோவில் ஒட்டுமொத்த படமும் எப்படி எடுக்கப்பட்டது என்பதை அறிந்துகொள்வதற்காக,

இன்னும் சில வித்தியாசமான அனுபவம் பெறுவதற்காக காந்தாவுக்கு டிக்கெட் போடலாம். மேக்கிங்கின் தனித்துவத்துக்காக இயக்குநர் செல்வமணி செல்வராஜை பாராட்டலாம்,

-சு. கணேஷ்குமார் 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here