Home விமர்சனம் தலைவர் தம்பி தலைமையில் சினிமா விமர்சனம்

தலைவர் தம்பி தலைமையில் சினிமா விமர்சனம்

பொங்கலுக்கு ரிலீஸாயிருக்கிற படங்கள்ல மனசுக்கு ரிலாக்ஸ் தர்ற ஒரே படம்னு உறுதியா சொல்லலாம்.

ஊர்ல எந்தவீட்ல கல்யாணம், காதுகுத்து, சாவுன்னு எது நடந்தாலும் அந்த கிராமத்தோட பஞ்சாயத்து தலைவர் ஜீவரத்தினம் தம்பி போய்டுவாரு; எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வாரு. அப்படி, நாளைக்கு காலையில கல்யாணம் வெச்சிருக்கிற ஒரு வீட்ல தம்பி பரபரப்பா வேலை பார்த்துக்கிட்டிருக்கார். ராத்திரியாகிடுச்சு. அந்த நேரமா பக்கத்து வீட்டுக்காரரோட அப்பா மண்டைய போட்டுடறாரு.

தலைவர் தம்பி, பக்கத்து வீட்டுக்கு போய் நடந்தது நடந்துடுச்சு. பாடிய ஹாஸ்பிடலுக்கு அனுப்பிடலாம்; காலைல பத்தரை மணிக்கு பக்கத்துல கல்யாணம் முடிஞ்சுடும். அதுக்கு அப்புறமா பாடிய கொண்டுவந்து ஆகவேண்டியதை செய்யலாம்’னு ஆலோசனை சொல்றாரு. செத்துப்போனவரோட புள்ளை ‘அதெல்லாம் முடியாது; பக்கத்துல கல்யாணம் நடக்குற அதே பத்தரை மணிக்கு என் அப்பாவோட இறுதி ஊர்வலம் தொடங்கும்’னு அடிச்சு சொல்றாரு. அவரு ஏன் அப்படி மனசாட்சி இல்லாம பேசுறாருன்னு பார்த்தா, கல்யாணம் வெச்சிருக்கிற பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கும் அவருக்கும் அஞ்சாறு வருஷமா பெரிய பகை இருக்கு.

ஒருத்தரு ‘என் வீட்டு வாசல்ல பத்தரை மணிக்கு கல்யாணத்தை நடத்தியே தீருவேன்’ன்னு பிடிவாதமா இருக்க, இன்னொருத்தரு ‘பத்தரை மணிக்கு அப்பாவோட பாடிய தூக்குவேன்’னு மல்லுக்கட்டுறாரு.

கல்யாண வீட்டுக்கும் சரி, சாவு வீட்டுக்கும் சரி அக்கம் பக்கம், சொந்த பந்தம், அங்காளி பங்காளியெல்லாம் வந்துக்கிட்டிருக்காங்க. ராத்திரி முழுக்க ரெண்டு வீட்டுக்காரங்களுக்கு இடையில சண்டை சச்சரவு அதிகமாகி அடிதடியெல்லாம் நடக்குது. இவரும் சரி அவரும் சரி விட்டுத்தர தயாரா இல்ல. ஒரு வழியா பொழுதும் விடியுது. தலைவர் தம்பி அந்த ரெண்டு பேருக்கிட்டேயும் மாட்டிக்கிட்டு தவியா தவிக்கிறாரு.

கல்யாணம் நல்லபடியா நடந்துச்சா? பாடி பக்குவமா பாடையில ஏறுச்சா?ங்கிறதுதான் மிச்சசொச்ச கத.

‘மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்’ங்கிறது மாதிரி ஜாலியா நடிக்கிற கேரக்டர் ஜீவாவுக்கு. மனுசன் சிரிச்ச முகத்தோட ‘நீங்க கொஞ்சம் விட்டுக் கொடுத்து போகக்கூடாதா?’, ‘நீங்க கொஞ்சம் இறங்கி வரக்கூடாதா’ன்னு ரெண்டு பக்கமும் கெஞ்சிக்கூத்தாடி சீரியஸான விஷயத்தை டீல் பண்ற விதம் ரசிக்க வைக்குது. அவருக்கு ஒரு ஜோடி, அந்த பொண்ணுகூட டூயட்டு அது இதுன்னு எதுவுமில்ல. ஆனாலும் அது குறையாவே தெரியல.

கல்யாணப் பெண்ணா வர்றது பிரார்த்தனா நாதன். பார்க்கிங் படத்துல எம் எஸ் பாஸ்கருக்கு மகளா நடிச்ச பொண்ணு. ‘கிளம்பிட்டோம்; வந்துக்கிட்டிருக்கோம்; சட்டை எப்படியிருக்கு, செல்ஃபி நல்லாயிருக்கான்னு போன்ல நச்சரிக்கிற மாப்பிள்ளை ஒரு பக்கம், பக்கத்து வீட்டுக்காரங்க கூட கலவரம் கலாட்டான்னு இன்னொரு பக்கம்… தன்னோட பரிதாபமான நெலமைய இயல்பா காட்டியிருக்க பிரார்த்தனாவோட நடிப்பு பிரமாதம்.

பெரிய மனுசங்களா இருந்துக்கிட்டு சின்ன மனுசங்களா மாறி ‘என்னால விட்டுக்கொடுக்க முடியாது’, ‘என்னால இறங்கி வர முடியாது’ன்னு பிடிவாதம் பிடிக்கிற தம்பி ராமையா _ இளவரசு கூட்டணி கவனிக்க வைக்குது. அதுலயும் அப்பா செத்துப்போன துக்கத்துல எது நல்லது எது கெட்டதுன்னு யோசிக்காம தம்பி ராமையா அடுற சாமியாட்டமெல்லாம் அப்படியொரு ரகளை.

ஜென்சன் திவாகருக்கு அடிச்சுக்கிட்டு சாவுற மனுசங்களை வெச்சு தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும்னு ஸ்கெட்ச் போடுற வேலை. மனுசன் அதை ரொம்ப அசால்ட்டா செஞ்சிருக்காரு. அந்த தெனாவட்டான பாடி லாங்வேஜ் அசத்துது.

சர்ஜின் குமார், ஜெய்வந்த், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், சரத், சாவித்ரி, அமித் மோகன்ன்னு மத்த நடிகர் நடிகைங்க கேரக்டருக்கு தக்கபடி நடிச்சிருக்காங்க.

விஷ்ணு விஜய் மியூஸிக்ல பாட்டெல்லாம் நல்லாவே இருக்கு; பிஜிம்மும் பக்கா. பப்ளு அஜுவோட ஒளிப்பதிவு இருட்டைக்கூட வெளிச்சமா மாத்தியிருக்கு.

கதை சீரியஸ்னாலும் அதுக்கு சிரிச்சு ரசிக்கிற மாதிரி சஞ்சோ ஜோசப், நிதிஷ் சகாதேவ், அனுராஜ்.ஓ.பினு மூணுபேரு சேர்ந்து ஸ்கிரீன்பிளே பண்ணிருக்காங்க.

‘மனுசன்னா மனுசத் தன்மையோட வாழணும்; அப்படி வாழ்ந்து பழகுங்கடா’ன்னு அடிச்சு சொல்றது மாதிரி இருக்குது நித்திஷ் சகாதேவ் இயக்கியிருக்கிற இந்த படத்தோட கிளைமாக்ஸு.

தலைவர் தம்பி தலைமையில் _ தாராளமாய் ரசித்து சிரிக்கலாம் தியேட்டரில்!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்