பள்ளிப்பருவத்தில் சக மாணவிகள் மூன்று பேரால் காதலிக்கப்படும் மாணவன் பிரவீன், ஒரு கட்டத்தில் மூன்றுமே வீண் என உணர்கிறான். அது ஏன், எப்படி என்பதை சொல்கிறது அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக களம் கண்டிருக்கும் ‘யூத்.’
பிரவீனாக கென் கருணாஸ். அவர் வயதுக்கேற்ற கதை. படிப்பில் ஆர்வம் காட்டாமல், எந்த பெண் தன்னைக் காதலிப்பாள் என தேடித் திரிகிற, ஒன்று இரண்டு மூன்று என வரிசைகட்டி காதலிப்பவர்களுடன் ஜாலியாக பொழுதைக் கழிக்கிற, அதனால் 11, 12-ம் வகுப்பு படிக்கும்போதே ‘பொம்பள பொறுக்கி’ என பெயரெடுக்கிற, காதல் என்பது என்ன என்பதை புரிந்து கொள்கிற, வாழ்க்கைக்கு எது முக்கியம் என உணர்ந்து புதிய பாதையில் பயணம் துவங்குகிற பல வேலைகள்.
அத்தனை வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டிருப்பவர் எதற்காகவும் அலட்டிக் கொள்ளாமல் தலைமுடி காற்றில் அலைபாய்ந்து கொண்டிருக்க சிரிக்கிறார்; சிரித்தால் அழகாக இருக்கிறார்; அப்போது பாடல் வருகிறது; சிரித்தபடியே ஆடுகிறார். எல்லாவற்றையும் ரசிக்க முடிகிறது.
தலைமுடி காற்றில் அலைபாய்ந்து கொண்டிருக்க சிரிக்கிறார்; சிரித்தால் அழகாக இருக்கிறார்; அப்போது பாடல் வருகிறது; சிரித்தபடியே முன்பு ஆடிய அதே ஸ்டைலில் ஆடுகிறார். அப்போதும் ரசிக்க முடிகிறது. ரீப்பீட்டு…
தலைமுடி காற்றில் அலைபாய்ந்து கொண்டிருக்க சிரிக்கிறார்; சிரித்தால் அழகாக இருக்கிறார்; அப்போது பாடல் வருகிறது; சிரித்தபடியே முன்பு ஆடிய அதே ஸ்டைலில் ஆடுகிறார். ரீப்பீட்டு…
தலைமுடி காற்றில் அலைபாய்ந்து கொண்டிருக்க சிரிக்கிறார்; சிரித்தால் அழகாக இருக்கிறார்; அப்போது பாடல் வருகிறது; சிரித்தபடியே முன்பு ஆடிய அதே ஸ்டைலில் ஆடுகிறார். ரீப்பீட்டு…
‘போதும்ப்பா போதும்’ என்று நாம் பொறுமையிழக்கும்போது கிளைமாக்ஸ் நெருங்கிவிட, அப்பா, அம்மாவின் மனம் புரிந்து நடந்துகொள்ளும்போது கொஞ்சமாய் கண்ணீர் சிந்துகிறார்.
நடிப்பில் தனுஷின் சாயல் எட்டிப்பார்க்க, அதை வைத்து தன்னை யாரும் கண்டபடி விமர்சித்துவிடக் கூடாது என்பதற்காக, தனுஷ் படத்திலிருந்து ஒரு காட்சியை இமிடேட் செய்து அதை திரைக்கதையில் இணைத்துக் கொண்டிருக்கிறார்.
தான் படிப்பில் தோல்வியடைந்து, காதலில் தோல்வியடைந்து, பொருளாதாரத்தில் பின் தங்கி வாழ்வதுபோன்ற நிலைமை தன் மகனுக்கு வந்துவிடக் கூடாது என்ற மனநிலையில் இருப்பவராக, மகன் மீது காட்டவேண்டிய பாசத்தைக் காட்டாமல் அடக்கி வாசிப்பவராக சுராஜ் வெஞ்சாரமூடு தந்திருக்கும் நடிப்புக்கு பாராட்டுக்களை அன்லிமிடெடாக கொட்டிக் கொடுக்கலாம்.
கணவருடைய மனதுக்கு பலமூட்ட வேண்டும்; மகனுடைய மனதுக்கு இதம் தர வேண்டும். இரண்டையும் தேர்ந்த நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார் அம்மாவாக வருகிற தேவதர்ஷினி.
தோற்றப் பொருத்தம் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் காதலிகளாக வருகிற அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் மூவரின் நடிப்பும் ஏற்ற பாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறது.
பள்ளியின் முதல்வராக நளினி, நண்பர்களாக வருகிறவர்கள், இன்னபிற கேரக்டர்களில் சுற்றிக் கொண்டிருப்பவர்களின் நடிப்பில் குறையில்லை.
ஜி வி பிரகாஷ் இசையில் பாடல்கள் ஏராளம் தாராளம். ‘முட்ட கலக்கி’, ‘லவ்வ சொல்லிட்டாளே’ பாடல்கள் தருகிற வைஃப் எக்கச்சக்கம். பின்னணி இசையில் அதிரடி ஆர்ப்பாட்டம் அதிகம் என்றாலும் இன்றைய தலைமுறைக்கு அத்தனையும் உற்சாகம் தரும்.
ஹீரோவின் எளிமையான வீடு, பரந்து விரிந்த பள்ளி வளாகம், கலாட்டாக்கள் நிரம்பிய வகுப்பறை என ஒளிப்பதிவாளர் விக்கியின் கேமரா நேர்த்தியாக சுற்றிச் சுழன்றதில் காட்சிகள் அத்தனையும் கலர்ஃபுல்.
படத்திலிருக்கும் கூத்தும் கும்மாளமுமான சம்பவங்கள், காமெடி கலாட்டாக்கள் ஜென்ஸி தலைமுறைக்கு எனர்ஜி தராமல் விடாது. நிறைய நிறைகளும் குறிப்பிடத்தக்க குறைகளும் ஆக்கிரமித்திருக்கும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் அதே தலைமுறைக்கு எது நல்லது எது கெட்டது என பாடம் நடத்தியிருப்பதால் விமர்சனங்களில் மதிப்பெண்களை வாரிக் குவிப்பதும் படத்தின் வெற்றியும் உறுதியாகிறது.
யூத் – காதலும் கடந்து போகும்!
-சு.கணேஷ்குமார்
