Home சினிமா கருப்பு சினிமா விமர்சனம்

கருப்பு சினிமா விமர்சனம்

அறிவால் அநியாயம் செய்கிறவர்களை அரிவாள் தூக்கியாடுகிற கருப்பு சாமி சுளுக்கெடுக்கிற கதை.

கோர்ட்டில் நீதிபதி முன் வாதாடும்போது வழக்கறிஞர்களுக்கு பொய் பேச முடியாமல் போய்விட்டால் என்னவாகும்?

நினைத்தாலே சுவாரஸ்யமாக இருக்கிறதுதானே?

சென்னையிலுள்ள ஒரு குறிப்பிட்ட கோர்ட்டில் அப்படியான சுவாரஸ்ய சம்பவங்கள் கருப்பு சாமியின் அருளால் நடக்கிறது.

கோர்ட்டுக்கும் கருப்பு சாமிக்கும் என்ன சம்பந்தம்? வழக்கறிஞர்கள் பொய் பேசாதவர்களாக மாறுவது எப்படி? அந்த மாற்றம் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்?

இந்த கேள்விகளுக்கு பதில்களாய் விரியும் காட்சிகளில் மனம்போன போக்கில் பரபரப்பு கூட்டி, இடையிடையே காமெடி கலாட்டாக்களையும் கலந்திருக்கிறார் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி

படம் 40 நிமிடங்கள் ஓடியபிறகே என்ட்ரீ கொடுக்கிறார் சூர்யா. வக்கீல் ஒருவர் தன்னிடம் வரும் வழக்குகளில் ஜெயிப்பதற்காக விதவிதமான மோசடிகளில் ஈடுபட, அவரால் அப்பாவிகள் பாதிக்கப்பட, நடக்கும் தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கருப்புசாமியான அவர் வழக்கறிஞர் அவதாரமெடுத்து வரும்போது அடடே என்றிருக்கிறது. கோர்ட்டில் கடவுளுக்கான சக்தியைக் காட்டியும் காட்டாமலும் என இருவேறு விதமாக களமாடும்போது ஹீரோயிஸத்தில் தெறிக்கவிடுபவர், கருப்புசாமியாக போடும் ஆட்டத்தில் வெளிப்படுத்தும் உக்கிரம் கூஸ்பம்ஸ் மொமன்ட். ஈஸ்வர சிங்கமாக எட்டிப் பார்க்கும் காட்சியும் உண்டு.

வழக்கறிஞராக வருகிற ஆர் ஜே பாலாஜிக்கு நீதிபதியை கைக்குள் போட்டுக் கொள்வதிலிருந்து வழக்குகளில் வெற்றி பெறுவதற்காக என்னவெல்லாம் அநியாய அக்கிரமம் செய்ய முடியுமோ அதையெல்லாம்  செய்கிற, தான் நினைத்ததை சாதித்துக் காட்ட வன்முறைகளிலும் ஈடுபடுகிற வேலை. ஆரம்பக் காட்சிகளில் கொஞ்சம் கொஞ்சம் ரசிக்க வைத்து, போகப்போக வில்லத்தனத்தில் வீரியம் காட்ட முயற்சித்திருக்கிறார்.

இதைவிட ஒல்லியாக முடியாது என்கிற அளவுக்கு மெலிந்து, முகம் ஒடுங்கிப் போயிருக்கிற திரிஷாவுக்கு ஹீரோவை வளைத்து வளைத்து காதலிக்கவோ, டூயட்’டுக்கு ஆடவோ அவசியமில்லை; கருப்புசாமியின் அவதார நோக்கம் நிறைவேற ஒத்துழைப்பு தருகிற கடமையிருக்கிறது. அதை சரியாக செய்திருக்கிறார்.

ஏராளமான தங்க நகையை திருடர்களிடம் பறி கொடுத்து, காவல்துறையாலும் நீதி மன்றத்தாலும் அலைக்கழிப்பட்டு, மகளையும் இழந்து தவிக்கிற இந்திரன்ஸின் நடிப்பு கவனம் பெறுகிறது.

லஞ்சத்துக்கு வளைந்து கொடுக்கிற நீதிபதியாக நட்டி நட்ராஜ், தனது பாதிப்புக்கான சட்டப் போராட்டத்தில் வலிகளைச் சந்திக்கிற ஷிவதா, வழக்கறிஞர்களாக ஸ்வாசிகா, நமோ நாராயணன், தீபா சங்கர் என திரை முழுக்க ஏகப்பட்ட நடிகர் நடிகைகள் தென்படுகிறார்கள்.

சாண்டி மாஸ்டர் வருகிற ‘லியோ’ காபி சீன் சிரிப்புக்கு கேரண்டி.

கருப்புசாமி அதிரடி சம்பவங்களை அரங்கேறும் தருணங்களுக்கான சாய் அபயங்கரின் பின்னணி இசையில் நேட்டிவிட்டி மிஸ்ஸிங். பாடல்கள் சிலிர்ப்பூட்டுகின்றன.

வதவதவென மக்கள் நிறைந்திருக்கும் கோர்ட் வளாகம், நெடுஞ்சாலைகளில் கார்களின் வெறித்தன துரத்தல், அனல் பறக்கும் சண்டைகள் என அனைத்திலும் ஜி கே விஷ்ணுவின் தரமான ஒளிப்பதிவால் பிரமாண்டம் தூக்கலாக தெரிகிறது.

‘நீதித்துறையிலுள்ள களைகளை பிடுங்கியெறிய வரும் கடவுளும், உன்னால் இங்கு எதையும் பிடுங்க முடியாது என்று கெத்து காட்டும் அட்வகேட்டும்’ என்பது கண்டிப்பாக வித்தியாசமான கதைக்களம்தான் என்றாலும், திரைக்கதை வழக்கமான ஹீரோ – வில்லன் மோதலாக நடந்து முடிவதில் அடியன்ஸுக்கு குறைவாகவே கிடைக்கிறது திருப்தி.

கருப்பு – எதிர்பார்த்த அளவுக்கில்லை நெருப்பு!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்