சமூகம் சந்திக்கிற ஒரு பேராபத்தை மையப்படுத்தி, கிரைம் திரில்லர் பாணியில் ‘எக்ஸாம்.’
காவல்துறை உயரதிகாரியான மரமல்லியைக் கடத்தி ஒரு இடத்தில் அடைத்துவிட்டு, அவரது பணியில் அவரது பெயரில் இணைகிறார் ஜான்சி. அப்படியொரு ஆள் மாறாட்டம் எதற்காக? என்ற கேள்வியோடு முதல் அத்தியாயமே பரபரப்புத் தீயை பற்ற வைத்து விடுகிறது.
அடுத்தடுத்த எபிசோடுகளில், அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்காகவும் அதன் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடித்து தண்டிப்பதற்காகவுமே ஜான்சி மரமல்லியாக மாறியிருக்கிறார் என்பது தெரியவருகிறது.
ஜான்சி யார்? அவள் காவல்துறையில் இணைகிற அளவுக்கு தயாரானது எப்படி? அவளுக்கு பின்னே யாரெல்லாம் இருக்கிறார்கள்? என்பதெல்லாம் பரபரப்புக்கு பஞ்சமில்லாத காட்சிகளாக விரிய,
ஜான்சியும் அவரது குழுவும் எடுத்துக் கொண்ட முயற்சியில் என்னவெல்லாம் கஷ்ட நஷ்டங்களைச் சந்திக்கிறார்கள், நினைத்ததை எப்படி செய்து முடிக்கிறார்கள் என்பது சற்குணம் இயக்கியிருக்கும் இந்த சீரிஸின் மிச்சமீதிக் கதை.
ஜான்சியாக துஷாரா விஜயன். கேரக்டரின் பெயரே கெத்தாக இருக்கிறது. போலி போலீஸ் அதிகாரியாக களமாடுகிற அவரது வாட்டசாட்டமான உடல்வாகு போலீஸ் யூனிபார்முக்கான கம்பீரத்தைத் தூக்கலாக்கியிருக்கிறது. போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தோல்வியடைவது, தேர்வே எழுதாமல் தேர்ச்சியடைபவரைப் பார்த்து கொதிப்படைவது, சதிகாரர்களை வேட்டையாட எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயாராவது என பரபரப்பு கூட்டும் காட்சிகளுக்கு பொருத்தமான பாராட்டும்படியான நடிப்பைத் தந்திருக்கிறார்.
குறுக்கு வழியில் முன்னேறி, டி எஸ் பி பதவிக்கு வந்தவராக அதிதி பாலன். ஒரு கட்டம் வரை கெட்டவராகவும் பின்னர் மனம் திருந்தியவராகவும் நடிப்பு கச்சிதம்.
மோசடி மன்னனாக வருகிற நரேன் மணியின் வில்லத்தனம் புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்டிருக்க அதை சரியாக உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறார். சப் இன்ஸ்பெக்டராக வருகிற துரை சுதாகர் திருப்புமுனைக்கு உதவுகிறார்.
முக்கியத்துவமுள்ள கேரக்டரில் கவனம் பெறுகிறது அப்பாஸின் அனுபவ நடிப்பு. மற்ற கேரக்டர்களில் ஏராளமான நடிகர் நடிகைகள் தென்பட, சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை கதையோட்டத்தின் பரபரப்பை பல மடங்காக்குகிறது.
பரந்து விரிந்த மலைப் பகுதி, அடர்ந்த காடுகளின் நடுவில் நெடுஞ்சாலை, பெருக்கெடுத்து ஓடும் நதி என கதை நிகழ்விடங்கள் அருண் அமரேந்திரனின் ஒளிப்பதிவில் கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது.
முதல் சில எபிசோடுகளில் இருந்த விறுவிறுப்பு போகப்போக குறைந்தாலும் அரசுப் பணியில் சேர்வதை ஆசையாக, கனவாக, லட்சியமாக கொண்டு போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் எளிய குடும்பத்துப் பிள்ளைகள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள், பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விரிவாக எடுத்துச் சொன்ன விதம் கண்டிப்பாக பாராட்டுக்குரியது.
எக்ஸாம் – தேர்ச்சி! 

