Home விமர்சனம் பிளாஸ்ட் சினிமா விமர்சனம்

பிளாஸ்ட் சினிமா விமர்சனம்

ஆக்சன், ஆக்சன், ஆக்சன்… ஆக்சன் தவிர வேறில்லை. அதிரடியான மேக்கிங்கில்  ‘பிளாஸ்ட்.’

கனிமவளக் கொள்ளையன் ஒருவனையும் அவனது நெட்வொர்க்கையும், கராத்தே மாஸ்டர் ஒருவர் அழித்து ஒழிக்கிற கதை. அந்த கொள்ளையனுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு, அவர் அவனை எப்படி சம்பவம் செய்கிறார் என்பது திரைக்கதை.

கராத்தே மாஸ்டராக ஆக்சன் கிங் அர்ஜுன். எளிய குடும்பத் தலைவன், மகளுக்கு கராத்தே கற்றுக் கொடுத்து தப்பு எங்கே நடந்தாலும் தட்டிக் கேட்கணும் என துணிச்சலூட்டி வளர்த்த அப்பா, மனைவி மீது பாசம் பொழிகிற கணவன் என எளிமையான மனிதனாக வரும் அவருக்கு, ஆக்சன் காட்சிகளில் ‘த்தெறிக்க’ விடுகிற வாய்ப்பு அதிகம். அடிக்கிற அடியில் வழக்கம்போல் அனல் பறக்கிறது; குத்துகிற குத்தில், வெட்டுகிற வெட்டில் ரத்தம் தெறிக்கிறது.

அர்ஜுனுக்கு மகளாக வருகிற பிரீத்தி முகுந்தன் அவருக்கு சமமாக ஆக்சனில் அதகளம் செய்கிறார். கண்களில் காந்தம் இருக்கிறது. அவருக்கு ஒரு காதலன், அவனுடன் டூயட் என வழக்கமான மசாலா அம்சங்கள் ஏதுமில்லை. சிங்கப் பெண்ணாக சீறிக் கொண்டிருப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

அபிராமி இளைத்திருக்கிறார்; முகமும் சதைப்பிடிப்பில்லாமல் இருக்கிறது. அவருக்கும் கணவனோடும் மகளோடும் இணைந்து எதிரிகளை வேட்டையாடுகிற வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. அடித்து ஆடியிருக்கிறார்.

ஊரே அழிந்தாலும் கவலையில்லை; தன் புராஜெக்ட் நடைமுறைக்கு வரவேண்டும்; அதற்காக எதையும் செய்யலாம்; யாரையும் அழிக்கலாம். அப்படியொரு மனநிலையில் செயல்படுபவராக ஜான் கொக்கேன். பலரும் பல படங்களில் காட்டிய டெம்ப்ளேட் கார்ப்பரேட் வில்லத்தனம் காட்டி கடந்து போகிறார்.

விவேக் பிரசன்னா, பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் என இன்னபிற கேரக்டர்களை ஏற்றிருப்பவர்கள் படத்தின் பரபரப்பு ஏரியாவில் பங்கு பிரித்து களமாடியிருக்கிறார்கள்.

கே ஜி எப் ரவி பஸ்ரூரின் பின்னணி இசை காட்சிகளுக்கு எனர்ஜி டானிக். பிரமாண்டமான கதைக்களம் அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவில் தரம் உயர்ந்திருக்கிறது.

சில படங்களை லாஜிக் பற்றி யோசிக்காமல் பார்க்க வேண்டியிருக்கும். இந்த ஆக்சன் அதகளமான ‘பிளாஸ்ட்’டை அப்படியான மனநிலையில் பார்த்தால் திருப்தி நிச்சயம்!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்