Home பொது சம்ஹாரம் சினிமா விமர்சனம்

சம்ஹாரம் சினிமா விமர்சனம்

ஒரு பெரிய வீடு, அதில் சில அறைகள்; அதற்குள் சில மனிதர்கள்; அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சதித் திட்டத்தோடு வலம்வரும் கதை.

அண்ணன் முடிவு செய்துள்ள நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் இளம் பெண் மித்ரா அந்த பெரிய வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாள். அவளை அவளது அண்ணனும் அண்ணியும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். யாரும் வந்துபோகாதபடி செக்யூரிட்டி ஒருவரும் அலர்ட்டாக இருக்கிறார். அதையெல்லாம் தாண்டி, மித்ரா அவளது காதலனை வீட்டுக்கு வர வைக்கிறாள்.

அவனுடன் வீட்டைவிட்டு ஓடிப் போவதற்காகவா? என்றால், இல்லை.

அதே வீட்டில் இன்னொரு அறையில் தங்கியிருக்கிற, தன்னை கல்யாணம் செய்து கொள்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிற நபரை போட்டுத் தள்ளுவதற்காக.

இப்படி விறுவிறுப்படையும் கதையில், அந்த வீட்டுக்கு ஒரு அப்பாவும் மகளும் ததிடீர் கெஸ்டாக வந்து மற்றொரு அறையில் தங்குகிறார்கள். அப்படியான சூழ்நிலையில் மித்ராவும் அவளது காதலனும் தங்கள் திட்டத்தை நிறைவேற்ற என்னவெல்லாம் செய்கிறார்கள், எப்படியான சவால்களைச் சந்திக்கிறார்கள், திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதெல்லாம் மீதிக்கதை… இயக்கம் ராம் பிரபா

கடந்த சில படங்களில் முகம் மறைக்கும்படி அடர்ந்த தாடியும் மீசையுமாக நடமாடிய பிரஜன் இந்த படத்தில் தாடி, மீசையை சுத்தமாக வழித்தெறிந்து பளபள அவதாரம் எடுத்திருக்கிறார். தன் தங்கைக்கு தான் விரும்பியபடி திருமணம் நடக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கும் கேரக்டரில் அதட்டலும் உருட்டலுமாய் போதுமான வில்லத்தனம் காட்டியிருக்கிறார். ‘தேவைன்னும் சொல்ல முடியாது; அவசியமில்லைன்னும் சொல்ல முடியாது’ என்கிற அளவில் ஒரு சண்டைக் காட்சி இடம்பெற, அதில் அலட்டல் தெறிக்க ஆக்ரோஷ முகம் காட்டியிருக்கிறார்.

பிரஜனின் தங்கையாக, கதாநாயகியாக ஷருமிஸா. செழுமையான வளைவு நெளிவுகளால் கிறங்கடித்தபடி அண்ணன் மீதான பயத்தையும் கோபத்தையும், காதலன் தன் அறைக்குள் வந்தபின் நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்க முடியுமா முடியாதா என்ற பதற்றத்தையும் சரியான மீட்டரில் பிரதிபலித்து அப்ளாஸ் பெறுகிறார்.

பிரஜனுக்கு மனைவியாக வருகிற நியா வர்கீஸ் உடற்கட்டில் ஹீரோயின் மெட்டீரியல் போலிருக்கிறார். கண்களிலும் ஒருவித கவர்ச்சி தெரிகிறது. கணவருக்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும், அவர் தங்கை மீது கரிசனம் காட்ட வேண்டும். கதைக்குத் தேவையான அந்த கடமையைக் கச்சிதமாக செய்திருக்கிறார்.

அக்காவைச் சீரழித்து அடுத்ததாக தங்கைக்கும் குறிவைக்கும் நபராக கங்கேஷ் சவராட்டில். பெயர் வித்தியாசமாக இருக்கிறதே தவிர கேங் ரேப், கொலை சம்பவங்களில் வெளிப்படுத்தும் வில்லத்தனத்தில் வித்தியாசம் ஏதுமில்லை. பாஸ் மார்க் மட்டுமே கொடுக்கலாம்.

செக்யூரிட்டியாக வருபவரின் உடம்பு பிரமாண்டமாக இருக்கிறது; அவரின் பூ விழுந்த கண்களை அடிக்கடி காட்டி பயமுறுத்துகிறார்கள். வில்லனைக் கொன்றது அவராக இருக்கலாம் என சந்தேகம் தட்டும்படி சீன்கள் வேகமெடுக்க, முடிவில் அவர் செய்யும் சம்பவம் எதிர்பாராததாக இருக்கிறது.

‘மிருகங்கள் வாழுமிடம்’ என்ற படத்தில் பிரதான பாத்திரம் ஏற்ற ஃபைன் ஜான், ஹீரோயின் யாரை கொல்ல நினைக்கிறாரோ அவரைக் கொல்ல தீர்மானித்து ஸ்கெட்ச் போடும் கதாபாத்திரத்தில் வந்து போகிறார்.

கதாநாயகியின் காதலனாக வருகிற மனோஜ் பிரபுவோடு ராஜ்குமார்,
தென்றல் ராஜா, இயக்குநர் ராம் பிரபா என இன்னபிறரும் குறையின்றி நடித்திருக்க, வி ஜி ஹரி கிருஷ்ணனின் பின்னணி இசை கதையோட்டத்தின் பரபரப்புக்கு சுறுசுறுப்பூட்டியிருக்கிறது. பாடல்கள் பரவாயில்லை ரகம். சுரேஷ்குமார் சுந்தரத்தின் ஒளிப்பதிவு நேர்த்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்