Home பொது பரிமளா & கோ சினிமா விமர்சனம்

பரிமளா & கோ சினிமா விமர்சனம்

இதை கிரைம் திரில்லராக மட்டுமே எடுத்திருக்கலாமே; எதற்காக காமெடி மசாலா?

இயக்குநரைப் பார்த்து இப்படி கேட்கத் தோன்றுகிறது. அப்படியொரு கதையம்சத்தில் ‘பரிமளா & கோ.’

வர்கீஸ் ஊரில் பெரிய ரவுடி; கொலைகாரன். ஒருநாள் அவன் கொலை செய்யப்பட, அவனைக் கொன்றது பரிமளா குடும்பத்தினராக இருக்கலாம் என போலீஸ் சந்தேகப்படுகிறது. பரிமளா குடும்பத்தில் கணவன், மனைவி, இரண்டு மகள்கள் என நான்கு பேர். அந்த நான்கு பேரில் கணவன், வர்கீஸை தன் மனைவி கொன்றிருக்கலாம் என சந்தேகப்பட, அந்த மனைவி வர்கீஸை தன் கணவன் கொன்றிருக்கலாம் என சந்தேகப்பட, மகள்களில் மூத்தவர் இளையவள் மீது சந்தேகப்பட, இளையவள் மூத்தவள் மீது சந்தேகப்பட, யார் யாரோ யார் மீதெல்லாமோ சந்தேகப்பட உண்மையில் அவனைக் கொன்றது யார் என்பது கிளைமாக்ஸ்… வர்கீஸுக்கும் பரிமளா குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதையெல்லாம் பரபரப்பாக சொல்கிறது பாண்டிராஜின் திரைக்கதை.

பரிமளாவாக ஜெயராம். பெண்களுக்கான பெயரை அவருக்கு வைத்திருப்பதே சுவாரஸ்யமாக இருக்க, மனைவி மீதும் மகள்கள் மீதும் அவர் சந்தேகப்படுவதும் விசாரணை நடத்துவதும், பாபநாசம் கமல்ஹாசன் போல் குடும்பத்தினரை போலீஸிடமிருந்து காப்பாற்ற முயற்சிப்பதுமாக தனது வழக்கமான திருதிரு பார்வையாலும் துறுதுறு உடல்மொழியாலும் கலகலப்பூட்டுகிறார்.

ஜெயராமின் மனைவியாக ஊர்வசி, மூத்த மகளாக சஞ்சனா, இளைய மகளாக அனந்திகா கூட்டணி அடிக்கும் லூட்டி எக்கச்சக்கம். தன் வீட்டை பரிமளா குடும்பத்துக்கு வீட்டை வாடகைக்கு விட்டு படாதபாடு படுபவராக யோகிபாபுவின் பங்களிப்பு வழக்கம்போல் லகலக.

இன்ஸ்பெக்டராக மிஸ்கின். இடுப்பு வரை போலீஸ் உடுப்பு, கீழே லுங்கி என வந்திறங்கும் ஆரம்பக் காட்சியே அதிரிபுதிரியாக இருக்க பஜ்ஜியில் தொடங்கி பானிபூரி வரை காட்சிக்கு காட்சி எதையாவது சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்; டீயில் ஆரம்பித்து கேழ்வரகு கூழ் வரை குடித்துக் கொண்டிருக்கிறார்; அதற்கிடையில் வர்கீஸை கொன்றது யார் என்ற விசாரணையிலும் ஈடுபடுகிறார். அத்தனையும் இன்ட்ரஸ்டிங் எபிசோடுகள். மகனை ரவுடியிஸத்துக்கு பறிகொடுத்த அப்பாவாக சற்றே கண்கலங்கவும் வைக்கிறார்.

வர்கீஸாக சாண்டி மாஸ்டர். பரிமளாவிடமும் அவரது குடும்பத்தினரிடமும் வம்பிழுப்பது கிச்சுகிச்சு மூட்டுவதாக இருக்க, அரிவாள் வீச்சு, கத்திக் குத்து என வன்முறை ஏரியாவில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

‘லைகா புரொடக்சன்ஸ்’ ஜி கே எம் தமிழ்க்குமரன், பூர்ணிமா ரவி, சிங்கம்புலி, பகவதி பெருமாள், காயத்ரி, சென்றாயன் என ஏகப்பட்ட நடிகர் நடிகைகள் முக்கியத்துவமுள்ள கேரக்டர்களில் அட்டனன்ஸ் போட்டிருப்பதை பார்க்க முடிகிறது.

பாக்ஸன் இசையில் ‘வாச்சா உடாத’ பாடல் உற்சாகத்துக்கு கேரண்டி. பின்னணி இசையும், ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவும் நேர்த்தி.

திருஷ்யம் சாயலில் ஒரு கதையை உருவாக்கி, காமெடி களேபரங்களை கலந்து கட்டி பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பஞ்சமில்லாத இந்த படம் போதையால் சீரழியும் சமூகம் பற்றிய கவலையை அழுத்தமாக வெளிப்படுத்தி அதற்கு தீர்வும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

பரிமளா & கோ – சிரிப்பும் சிந்தனையும்!

-சு.கணேஷ்குமார்

 

REVIEW OVERVIEW
Parimala And Co movie review
Previous articleசம்ஹாரம் சினிமா விமர்சனம்
Next articleபெத்தி சினிமா விமர்சனம்
parimala-and-co-movie-reviewஇதை கிரைம் திரில்லராக மட்டுமே எடுத்திருக்கலாமே; எதற்காக காமெடி மசாலா? இயக்குநரைப் பார்த்து இப்படி கேட்கத் தோன்றுகிறது. அப்படியொரு கதையம்சத்தில் 'பரிமளா & கோ.' வர்கீஸ் ஊரில் பெரிய ரவுடி; கொலைகாரன். ஒருநாள் அவன் கொலை செய்யப்பட, அவனைக் கொன்றது பரிமளா குடும்பத்தினராக இருக்கலாம் என போலீஸ் சந்தேகப்படுகிறது. பரிமளா குடும்பத்தில் கணவன், மனைவி, இரண்டு மகள்கள் என நான்கு பேர். அந்த நான்கு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்