Home விமர்சனம் பெத்தி சினிமா விமர்சனம்

பெத்தி சினிமா விமர்சனம்

‘லாஜிக்க பத்தி கவலையில்ல; மனம்போன போக்குல ஸ்க்ரீன்பிளே’ என முடிவெடுத்து இயக்குநர் புச்சி பாபு சனா ஷூட்டிங் கிளம்ப, அவரோட கைகோர்த்த ராம்சரண் உடம்ப இரும்பாட்டம் முறுக்கேத்தி வெறித்தனமா களமாடியிருக்கிற ‘பெத்தி.’

பெத்தி வசிக்கிற மலைக் கிராம மக்களுக்கு இந்திய குடிமகன்கிற அடையாளமே இல்ல; இன்னும் சொல்லப் போனா அந்த ஏரியா இந்தியாவோட மேப்புலயே இல்ல. போக்குவரத்து அது இதுன்னு எந்த வசதியும் கிடையாது; அங்க வாழுற மனுஷங்களையெல்லாம் அடிமையா வெச்சி வேலை வாங்கி செழிப்பா இருக்குது அதிகார வர்க்கம்.

அப்படிப்பட்ட மக்களுக்கு விடுதலை கிடைக்கிறதுக்கு, அந்த மலைக் கிராமமும் இந்தியாவோட ஒரு பகுதிதான்கிற அடையாளத்தை உருவாக்குறதுக்கு தன்கிட்டே இருக்கிற விளையாட்டுத் திறமைய பயன்படுத்துறாரு பெத்தி. அது எப்படிங்கிறதை 3 மணி நேரம் தாண்டி ஓடுற மாதிரி எடுத்து வெச்சிருக்காங்க.

ராம்சரண் ஆரம்பத்துல கிரிக்கெட்ல சிக்ஸரா அடிச்சு விளாசுறாரு; அடுத்து குஸ்தில சிறுத்தையா சீறிப் பாயுறாரு; ஒரு காலுல பாதிய நறுக்கி வீசிட்டு ரன்னிங் ரேஸ்ல ஹார்ஸ் பவர் காட்டுறாரு. எதுல ஈடுபடுறாரோ அதுக்கேத்த உடற்கட்டுல அவரைப் பாக்குறப்போ கேரக்டருக்காக எந்தளவு ஈடுபாட்டோட தயாராகியிருக்கார்னு புரிஞ்சிக்க முடியுது. நடிப்ப எடுத்துக்கிட்டா உணர்ச்சிக் கொந்தளிப்பாகட்டும் உணர்வுபூர்வமாகட்டும் பெர்ஃபாமென்ஸ் பக்கா. மனுஷன் இடையில் லவ்ஸ் ஏரியாவுலயும் அட்டகாசமா அட்டனன்ஸ் போடுறாரு.

ஜான்வி கபூருக்கு ஹீரோவை லவ் பண்றதும் அவரோட ஆடுறதும்தான் வேலை. அதை கவர்ச்சியா செஞ்சிருக்காரு.

ஊரு வழியா போற ரயிலு தன்னோட கிராம்த்துல ஒரு நிமிசம் நின்னு போச்சுன்னா மக்களோட வாழ்வாதாரம் மேம்படும்னு பல வருஷமா சிவப்புக் கொடி காட்டி செத்துப்போற கேரக்டர்ல ஜெகபதி பாபு கெட்டப்லயும் நடிப்புலயும் தனிச்சு தெரியுறாரு.

மல்யுத்தம் கத்துக் குடுக்கிற பயிற்சியாளரா சிவராஜ் குமார் பரவாயில்லை’ங்கிற மாதிரி கெத்து காமிச்சிருக்காப்ல. திவ்யந்து, விஜி சந்திரசேகர், போமன் இரானி, ஜான் விஜய்ன்னு நட்சத்திரங்களுக்குப் பஞ்சமில்ல.

ஏ ஆர் ரஹ்மான் மியூஸிக்ல பாட்டெல்லாம் ஓரளவு வைப் தருது; பிஜிஎம்ல கதைக்களத்துக்கேத்த அதிரடி இருக்குது.

ரத்னவேலுவோட ஒளிப்பதிவையும், ஆர்ட் டைரக்டரோட பங்களிப்பையும் எவ்ளோ வேணாலும் பாராட்டலாம். அந்தளவுக்கு எறங்கி வேலை பாத்திருக்காங்க.

அடையாளமற்ற கூட்டத்திலிருந்து விளையாட்டுத் திறமையால் தேசத்தின் அடையாளமாகிற விறுவிறுப்பான கதை. ராம்சரண் உடம்பை ரொம்ப கஷ்டப்படுத்திக்கிட்டு நடிச்சிருக்காரு. அந்த அர்ப்பணிப்பை கொண்டாடலாம். டைரக்டர் பொறுமைய சோதிக்கிற படத்தோட லெங்த்த கொஞ்சம் ட்ரிம் பண்ணிருந்தா ஆடியன்ஸுக்கு கொட்டாவி வர விடாம செஞ்சிருக்கலாம்.

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்