Home விமர்சனம் பாலன் சினிமா விமர்சனம்

பாலன் சினிமா விமர்சனம்

பாலன் சிறு வயதில் தன்னைப் பிரிந்த தாயை வாலிப வயது வரை தேடிக் கொண்டேயிருக்கிறான். தாயுடன் மீண்டும் சேரவும் செய்கிறான்.

பாலன் தாயைப் பிரிந்தது ஏன், பிரிந்தபின் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறான், எப்படி வளர்ந்து வாலிபனாகிறான், என்னவெல்லாம் செய்கிறான், தாயை மீண்டும் எப்படி சந்திக்கிறான் என்பதையெல்லாம் பரபரப்பான காட்சிகளில் பார்க்க முடிகிறது. ‘அவேசம்’ பட இயக்குநர் ஜித்து மாதவனின் கதையை இயக்கியிருக்கிறார் ‘மஞ்சுமல் பாய்ஸ்’ இயக்குநர் சிதம்பரம்.

சிறையில் தண்டனைக் கைதியாக இருந்து விடுதலையாகி வருவது, மகனை ஊர் ஊராக கூட்டிக் கொண்டு போவது, ஒவ்வொரு இடத்திலும் தங்கள் பெயரை மாற்றிக் கொண்டு கிடைத்த வேலையை செய்து நாட்களை கடத்துவது என ஆரம்பக் காட்சியிலேயே அடியன்ஸின் முழு கவனத்தையும் தன்னை நோக்கி இழுத்து விடுகிறார் பர்சானா. விபச்சாரத்தில் சிக்கும் அளவுக்கான நெருக்கடியிலிருந்து சிறை தண்டனை பெறுவது வரை வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள், தன்னையும் தன் மகனையும் காப்பாற்றிக் கொள்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பது என நடிப்பில் அத்தனை உயிரோட்டம்.

சிறுவயது பாலனாக ஆதிசேஷன். என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என ஒன்றும் புரியாவிட்டாலும் அமமாவின் தில்லுமுல்லுக்கு ஒத்துழைப்பு தரும் விதம் ரசிக்க வைக்கிறது.

அம்மாவைப் பிரிந்து வாழ்கிற ஏக்கத்தைப் பிரதிபலிப்பது, ரவுடியிஸத்தில் ஊறிப்போய் திமிரும் தெனாவட்டுமாக திரிவது, தனக்கு அடைக்கலம் கொடுத்து வளர்த்து ஆளாக்கியவருக்கு விசுவாசமாய் இருப்பது, போலீஸ் முன் ‘என் அம்மாவை கண்ணில் காட்டும் வரை போகமாட்டேன்’ என கெத்தாக நிற்பது என வாலிப வயது பாலனாக ஜினன் தந்திருப்பது துடிப்பான நடிப்பு!

டொவினோ தாமஸ் கேங்ஸ்டர் லெவலில் ஒரு கம்பீரமான கேரக்டரை ஏற்று முரட்டுத்தனத்தையும் பாலன் மீது பாசத்தையும் பொழியும் அத்தியாயங்களும்,

காவல்துறை அதிகாரியாக வருகிற ஜீன் பால் லாலின் வில்லத்தனம், காவல்துறை பணியில் நேர்மையைக் கடைப்பிடிப்பவராக இயக்குநர் கிரிஷ் ஏ டியின் நடவடிக்கைகள், கதைநாயகியை துப்பாக்கி முன் நிறுத்தி மிரட்டும் டெரர் பாட்டி என பலரது நடிப்பும் படத்துக்கு பலம்.

சுஷின் ஷ்யாம் காட்சிகளின் வேகத்துக்கும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புக்கும் ஏற்றபடி பின்னணி இசையில் சுறுசுறுப்பை ஏற்றியிருக்கிறார். கேரளாவில் எந்த இடத்தில் கேமராவை வைத்தாலும் காட்சிகளை அழகாக சுருட்டிவிடலாம். ஒளிப்பதிவாளர் ஹைஜி காலித் அழகியல் பார்வையுடன் சுருட்டியிருக்கிறார்.

அம்மா மகன் பாசத்தை மையப்படுத்திய இந்த சைகலாஜிகல் திரில்லரில் இருக்கிற நெகிழ்ச்சியான சம்பவங்களும் அதிரடி திருப்பங்களும், படத்தின் சில குறைகளை பெரிதாய் கருதாமல் கடந்து போக வைக்கின்றன.

வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகும் மலையாளப் படங்களை விரும்புவோருக்கு பாலன் இந்த வாரத்துக்கான பெஸ்ட் சாய்ஸ்.

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்