Home Uncategorized அன்பே டயானா சினிமா விமர்சனம்

அன்பே டயானா சினிமா விமர்சனம்

காதல் கதையில் ஃபீல் குட் உணர்வு தருகிற அன்பே டயானா.

நாயகன் சிறுமாமில்லா சீதா கிருஷ்ணா. சுருக்கமாக ஆங்கிலத்தில் சி எஸ் கே. சென்னை பெரம்பூரில் வசிக்கிற தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன், அதே பகுதியில் வசிக்கிற, தன்னுடன் பல வருடங்களாகப் பழகுகிற ஆங்கிலோ இந்திய கிறிஸ்தவக் குடும்பத்துப் பெண் டயானாவை காதலிக்கிறார். டயானாவுக்கு சி எஸ் கே’வை பிடித்திருந்தாலும் அதை அவள் காதலாக நினைக்கவில்லை. அப்படி நினைக்க வைக்க சி எஸ் கே தொடர்ந்து முயற்சிக்கிறான். ஒரு கட்டத்தில் டயானா காதலுக்கு ஓகே சொல்ல, சி எஸ் கே அவளது மதம் சார்ந்த பழக்க வழக்கங்கள் தன் குடும்பத்துக்கு ஒத்து வராது, தன் அம்மாவுக்கு பிடிக்காது என்பதை புரிந்துகொண்டு, அவளை விட்டு விலகுவது நல்லது என்ற முடிவுக்கு வருகிறான். அதன் பின் நடப்பதில் ஒருசில விஷயங்கள் மட்டுமே சீரியஸாக இருக்க மற்ற எல்லாமே காமெடி களேபரம், ரசித்து சிரிக்க உத்தரவாதம்…

‘ஜமா’ படத்தை இயக்கி, நடித்து கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இரண்டாவதாக இயக்கியிருக்கும் படம் இது. அந்த படத்தைப் போலவே இதிலும் அவரே கதாநாயகன். ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு மாதிரி ஒருசில மாஸ் ஹீரோக்களை நினைவுபடுத்தும் விதமாக நடிக்கிறார். ஒரு காட்சியில் சென்னை வட்டார வழக்கில் வசனம் பேசுகிறார்; இன்னொரு காட்சியில் வேறொரு விதமாக பேசுகிறார். நடிப்பும் பேச்சும்தான் முன்னே பின்னே இருக்கிறது என்றால், காதலிப்பதும் அப்படியே. அவள் எனக்கானவள், அவளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று துணிச்சலாக தயாராகாமல் அவளை அம்மாவுக்கு பிடிக்காது, ஆட்டுக்குட்டிக்கு பிடிக்காது என்றெல்லாம் யோசிக்கிறார். ஏடாகூடமான மனநிலை, பெரும்பாலான மனிதர்களின் இயல்பை பிரதிபலிக்கிற கதாபாத்திரம். அப்படியொரு பாத்திரத்தை உருவாக்கி நடித்திருப்பதற்காக பாராட்டலாம்.

டயானாவாக அழகும் இளமையும் ததும்புகிற ரம்யா ரங்கநாதன். ஆங்கிலோ இந்திய கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்தியிருக்கிறார். நான் இப்படித்தான், என் குணம் இப்படித்தான் என மல்லுக்கட்டவும் செய்கிறார்; உனக்காக நான் உன் குடும்ப பழக்க வழக்கங்களை பழகிக் கொள்கிறேன் என்று சொல்லி காதல் நிறைவேற ஒத்துழைப்பு தரவும் செய்கிறார். நடிப்பு உணர்வுபூர்வமாக இருக்கிறது.

பல வருடங்கள் கழித்து வலிமையான கேரக்டரில் ரோஜாவை பார்க்க முடிகிறது. நாயகனின் அம்மாவாக, சாதிப் பற்றுள்ளவராக அவர் தந்திருப்பது ஆளுமையான நடிப்பு.

தமிழ் சினிமாவில் இருக்கிற காமெடி நடிகர் பற்றாக்குறையைப் போக்க சேத்தன் இருக்கிறார் என்று சொல்கிறது இந்த படம். நாயகனின் அப்பாவாக வருகிற அவர் செய்யும் அலப்பரைகள் சிரிக்கவே மாட்டேன் என அடம் பிடிப்பவர்களைக் கூட சிரிக்க வைத்துவிடும். பாசமான தந்தையாக அவரது கேரக்டர் மனதில் இடம் பிடித்து விடும்.

பரிதாபங்கள் கோபி நாயகனின் நண்பனாக வந்து பெங்களூர் தமிழில் பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டம் தாண்டி ரசிக்க முடியவில்லை.

செல் முருகன், நிகிலா சங்கர், இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி என இன்ன பிறரின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெறுகிறது.

பரத் சங்கர் இசையில் தொடுவானத்தில், மச்சான் மாட்டிக்கிட்டான் என அணிவகுக்கும் பாடல்கள் உற்சாகம் தர, ஷெல்லி கேலிஸ்டின் பட்ஜெட்டில் அடங்கியிருக்கும் ஒளிப்பதிவில் சென்னை பெரம்பூரின் முக்கியப் பகுதிகள் தொடங்கி சந்து பொந்துகள் வரை சுற்றிப் பார்க்க முடிகிறது.

சாதி மாறி காதல், மதம் மாறி காதல் என்ற விவகாரங்களில் பெரும்பாலும் காதலன்தான் துணிச்சலாக இருப்பான். இந்த கதையில் காதலி துணிச்சலாக இருக்க, ஆண் என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறுகிறான். ‘கதையில் தனித்துவம் ஏதும் இருக்கிறதா?’ என்று கேட்டால் இதை மட்டும் சொல்லலாம். கடைசி அரை மணி நேரம் கிரேஸி மோகன் – கமல்ஹாசன் கூட்டணியில் வந்த படங்களைப் போல் ரகளை கட்டுகிற காட்சிகளை முழுமையாக ரசிக்கலாம்; மனம் விட்டுச் சிரிக்கலாம்.

அன்பே டயானா – காதலுக்கு மரணமில்லை!

-சு.கணேஷ்குமார்

REVIEW OVERVIEW
அன்பே டயானா சினிமா விமர்சனம்
Previous articleஉற்சாகமாக நடந்த காவலர் மக்கள் செய்தி 2 ஆம் ஆண்டு துவக்க விழா!
anpe-diana-movie-reviewகாதல் கதையில் ஃபீல் குட் உணர்வு தருகிற அன்பே டயானா. நாயகன் சிறுமாமில்லா சீதா கிருஷ்ணா. சுருக்கமாக ஆங்கிலத்தில் சி எஸ் கே. சென்னை பெரம்பூரில் வசிக்கிற தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன், அதே பகுதியில் வசிக்கிற, தன்னுடன் பல வருடங்களாகப் பழகுகிற ஆங்கிலோ இந்திய கிறிஸ்தவக் குடும்பத்துப் பெண் டயானாவை காதலிக்கிறார். டயானாவுக்கு சி எஸ் கே'வை பிடித்திருந்தாலும் அதை அவள்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்