Home சினிமா இம்மார்ட்டல் சினிமா விமர்சனம்

இம்மார்ட்டல் சினிமா விமர்சனம்

வாம்பயர், மான்ஸ்டர், கிரீச்சர் என கலந்து கட்டி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்ட்ரெஸ்டிங்கான அனுபவம் தரும் ‘இம்மார்ட்டல்.’
‘என்னிடம் இருக்கிற பணத்துக்கு இன்னும் 1000 வருஷம் சொகுசா வாழலாம்’ என்று சொல்கிற பெரும் பணக்கார கவர்ச்சியான இளம் பெண் சிந்துவுடன் இனிமையாய் நாட்களைக் கடத்துவதற்கான வாய்ப்பு, எளிமையான பிரிண்டிங் பிரஸில் பணிபுரிகிற கதைநாயகன் மகிக்கு கிடைக்கிறது. பழகும் நாட்கள் பரவசமாக மாற சிந்து, மகிக்காக எதையும் செய்யத் தயாராகிறாள். அப்படி அவள் நடந்து கொள்வது ஒரு கட்டம் வரை மகிக்கு மஜாவாக இருக்கிறது; போகப்போக சிந்து காட்டும் பிரியம் அவனுக்குள் பயம் தருகிறது. சிந்து நார்மலான பெண் இல்லை என்பது புரிகிறது.
புரிந்ததும் மகி அவளிடமிருந்து விலக நினைக்கிறான். அப்படியொரு நினைப்பு அவனுக்கு வந்ததிலிருந்து அவரை ஒரு வினோத விலங்கு துரத்தத் தொடங்க, அதுவரை எரோட்டிக் திரில்லர் ரேஞ்சில் பயணித்த கதையின் போக்கு டிராக் மாறி ஹாரர் திரில்லராக, சர்வைவல் திரில்லராக மாற நடக்கும் சம்பவங்கள் அத்தனையும் பயங்கரம்.
அதில் சிக்கிய மகியின் நிலைமை என்னவாகிறது? சிந்து யார்? அவளது பின்னணி என்ன? என்பதெல்லாம் திரைக்கதையின் சுவாரஸ்யமான பக்கங்கள்… இயக்கம் மாரியப்பன் சின்னா
ஜி.வி. பிரகாஷ் தன்னைச் சுற்றி அமானுஷ்ய சம்பவங்கள் தொடங்கும் வரை ‘அடல்ஸ் ஒன்லி’ பிளேபாய் போல் வலம் வந்து, ‘மனுஷன் வாழ்றான்யா’ என பெருமூச்சு விட வைக்கிறார். அந்தளவுக்கு இருக்கிறது ஹீரோயினுடான நெருக்கம். பின்னர் தன் மூச்சு பறிபோய்விடுமோ என்ற உயிர் காத்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடும்போது பயத்தின் சதவிகிதத்தை பொருத்தமான முகபாவங்களில் காட்டி ஏற்ற பாத்திரத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். மான்ஸ்டரிடம் இருந்து தப்பிக்கும் காட்சிகள் பரபரப்புக்கு கேரண்டி.
அசத்தும் கவர்ச்சி, போதையேற்றுகிற பார்வை, நடை, உடை, பேச்சில் ஆளுமை என படம் முழுக்க அடித்து ஆடியிருக்கிறார் கயாது லோகர். அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் என்பதற்கு உதாரணமாய் மிரட்டலாக நடித்து படத்தை தாங்கியிருக்கும் அவரை எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம்; எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். கிட்டத்தட்ட படம் முழுக்க ஜி வி பி – கயாது ஜோடியையே பார்க்கும்படியான திரைக்கதை. ஆனாலும் சலிப்பு தட்டவில்லை. காரணம், இருவருக்குமிடையிலான கெமிஸ்ட்ரி ஆஹா ரகம்.
வாம்பயரிடம் வம்படியாய் மாட்டி சின்னாபின்னமானவராக டி எம் கார்த்திக் மாறுபட்ட கெட்டப்பில் கவனம் ஈர்க்க, ஆதித்யா கதிர், லொள்ளுசபா மாறன், குமார் நடராஜன் என இன்னபிற கேரக்டர்களில் வருகிறவர்களுக்கு போதுமான முக்கியத்துவம் இருக்கிறது.
மான்ஸ்டர், கிரீச்சர் என மிரட்டும் எபிசோடுகளுக்காக சிஜி, விஎஃப்எக்ஸ் துறையினர் ஒரு வருட காலம் உழைத்தார்களாம். அதன் பலனாக படத்தின் பின்பாதி ஹாலிவுட் தரத்திலான மிரள வைக்கும் விஷுவல்களால் நிரம்பியிருக்கிறது.
அதிரடியான பின்னணி இசையால் காட்சிகளுக்கு சுறுசுறுப்பூட்ட 100% உழைப்பைக் கொட்டியிருக்கிறார் சாம் சி எஸ். பாடல்கள் உற்சாகத்துக்கு உத்தரவாதம். ஒரு பாடலை மனதுக்கு இதமூட்டும்படி பாடியிருக்கிறார் ஜி வி பிரகாஷ்.
அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு மிகமிக தரம்.
இப்படியான படங்களைப் பார்க்கும்போது லாஜிக் பற்றி அதிகமாய் யோசிக்கிற, குறைகளைக் கூர்ந்து கவனிக்கிற மூளைக்கு ஓய்வு கொடுக்கலாம். தியேட்டரில் பார்த்து வித்தியாசமான, மிரட்டலான அனுபவம் பெறலாம். இரண்டாம் பாகத்துக்காக காத்திருக்கலாம்!
-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்