Home விமர்சனம் மைத்ரி சினிமா விமர்சனம்

மைத்ரி சினிமா விமர்சனம்

சாதியால் சின்னாபின்னமாகும் காதல். ‘அதே டெய்லர்; அதே வாடகை’ டைப்பில் மீண்டும் ஒரு படம்.

கீழ் சாதி இளைஞன் சித்தார்த்தும் உயர்சாதிப் பெண் வைஷுவும் காதலிக்கிறார்கள். காதலுக்கு வைஷு வீட்டில் கடுமையான எதிர்ப்பு. அந்த எதிர்ப்பில் நியாயம் இருப்பதாக உணர்கிறாள். அதனால் அடங்கிப் போகிறாள். வீட்டார் முடிவு செய்யும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டுகிறாள். அந்த கல்யாணத்துக்கு அவளது காதலன் சித்தார்த் போய் வாழ்த்திவிட்டு வருகிறான்.

காதலி கிடைக்காத வேதனையில் அவனது நாட்கள் நரகமாகிறது. அப்படியே நாட்கள் கடந்து கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் வைஷு சித்தார்த்தை போனில் தொடர்பு கொண்டு பேசுகிறாள். அவன் தவிர்க்கிறான். அவள் விடுவதாயில்லை. சில நாட்களில் அவள் அவனை வந்து சந்திக்கிறாள். அதன் விளைவுகள் பரபரப்பு பற்றிக் கொள்கிற மீதிக் கதை…

படத்தை இயக்கி, கதாநாயகனாக நடித்து, படத்தொகுப்பு பணியையும் செய்திருக்கிறார் பரத் ஜே. அவரது கருகரு தேகம், ஒடிசலான உடல்வாகு, ஒடுங்கிய கன்னங்கள் என இயல்பில் அமைந்திருக்கும் தோற்றம் ஏற்றிருக்கும் எளிய மனிதன் கேரக்டருக்கு பொருத்தம்.

காதல் தோல்வி தருகிற வலியை வெளிப்படுத்துகிற விதம், இன்னொருவருக்கு மனைவியான பின் தன்னை தொடர்பு கொள்ளும் காதலியிடம் நடந்து கொள்கிற விதம், காதலி தன் மனைவியானபின் கனிவாக கவனித்துக் கொள்ளும் விதம் என நடிப்பில் வெரைட்டி காட்ட அதிக வாய்ப்புள்ள கதாபாத்திரம். ஹாக்கி பிளேயராகவும் களமாடியிருக்கிறார். நடிப்புப் பங்களிப்பு பாஸ்மார்க் போடலாம் என்கிற அளவிலிருக்கிறது.

வைஷுவாக காயத்ரி ஷான். பளீர் நிறம், தளதள தேகம், உருண்டு திரண்ட கன்னங்கள், சிரித்தால் பல மடங்காகும் அழகு. காதல் காட்சிகளுக்கு தந்திருப்பது எளிமையான நடிப்பு. இன்னொவருக்கு மனைவியானபின் தன் காதலனை சந்திக்கும் போது வெளிப்படுத்துகிற உணர்வாகட்டும், கிளைமாக்ஸின் நெருக்கத்தில் சமூகத்தில் நிலவும் சாதிப் பாகுபாட்டுக்கெதிராக ‘தீ’ பற்ற வைக்கும்போது உணர்ச்சிக் கொந்தளிப்பாகட்டும் நடிப்பு ராட்சசியாக மாறியிருக்கிறார். அழுத்தமான கேரக்டர்களுக்கு இயக்குநர்கள் அவரை தாராளமாக அழைக்கலாம்.

நந்தன், ஷிவாங்கி, ஸ்ரீதர், குட்டி, ரவி ஏழுமலை என முக்கிய கதாபாத்திரங்களில் அணிவகுக்கும் புதுமுகங்களின் நடிப்பில் குறையில்லை.

ஜோயல் ஜோன்ஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்களத்துக்கு உயிரோட்டம் தருகிறது. பெங்களூரின் சாலைகளில், நெருக்கடியான சந்து பொந்துகளில், ஹாக்கிப் போட்டி மைதானத்தில் என புகுந்து புறப்பட்டு காட்சிகளை தரமாக்கியிருக்கிறது விக்னேஷ் மலைச்சாமியின் கேமரா.

பிரமாண்டமான குப்பை மேடு. அதில் காதல் தோல்வி விரக்தியில் நாயகன். அவர் முன் ஒரு பிச்சைக்காரர். அவர் நாயகனிடம், ‘உன் உடம்புல கடைசியா எப்போ ரத்தம் பார்த்த?’ என கேட்க, அவரிடம் பதில் இல்லை. பிச்சைக்காரர், ‘அவங்க மாசாமாசம் ரத்தம் பார்க்கிறவங்க’ என பெண்களைப் பற்றி உயர்வாகச் சொல்கிறார். படத்தில் அதிக கவனம் காட்சிகளில் ஒன்று.

நாயகன் நாயகியின் பள்ளிப் பருவ காதல் தருணங்களில் ஒன்றாக ஜன்னல் வழி, விழிகளின் வழி காதல் பரிமாறும் தருணம் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் நீள்கிறது. அது கவிதை போலிருக்கிறது.  அது போன்ற வெவ்வேறு தருணங்களை மீண்டும் மீண்டும் காண்பித்துக் கொண்டிருப்பது படத்தின் நீளத்தை அதிகரிக்க மட்டுமே உதவுகிறது.

ரவுடியிஸத்தில் எந்த சாதியும் சளைத்ததில்லை என புரிய வைக்கிறது நிறைவுக் காட்சி.

சமூகத்தில் காதலுக்கெதிரான சாதிப் பாகுபாடு தீரும் வரை மைத்ரி மாதிரியான படங்கள் வருவதை தவிர்க்க முடியாது என்றாகிவிட்டது. அப்படி எடுக்கிறவர்கள் பிரச்சனையை மேலோட்டமாக அணுகாமல் தீர்வுகளை அலசி ஆராய்ந்தால் படங்கள் வரவேற்பு பெறும். இந்த படத்தில் சொல்லியிருக்கிற தீர்வு ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது.

அப்படியென்ன தீர்வு? தெரிந்துகொள்ள விரும்பினால் தியேட்டருக்கு கிளம்புங்கள்.

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்