Home விமர்சனம் ஹாய் சினிமா விமர்சனம்

ஹாய் சினிமா விமர்சனம்

காதலும் காமெடியும் சரியான விகிதத்தில் மிக்ஸான ‘ஹாய்.’

இளைஞன் மயில்சாமிக்கு காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது ஆசை. அதற்கான முயற்சியில் தொடர்ந்து தோல்வியைச் சந்திக்கிறார். அந்த விரத்தியின் உச்சத்தில் இருக்கும்போது தேவயானி என்ற பெண்ணைச் சந்திக்கிறார். அந்த பெண்ணுக்கு ஹாய் சொல்லும்போதே காதலிக்கத் தொடங்குகிறார். பேசிப் பழகுகிறார்கள். நாட்கள் கடந்தோடுகிறது.

இவர் அவளைக் காதலிக்கிறார்; ஆனால், அவளுக்கு இவர் மீது காதல் உருவாகவில்லை. அவளை எப்படியாவது அடைய வேண்டும் என்பதற்காக விபரிதமான பொய் ஒன்றைச் சொல்கிறார். அந்த பொய்யால் மயில்சாமியும் தேவயானியும், இரண்டு பேரின் குடும்பத்தினரும் சந்திக்கும் பிரச்சனைகள் சீரியஸாகவும் இருக்கிறது. சிரித்து ரசிக்கும்படியும் பயணிக்கிறது.

அதையெல்லாம் கடந்து மயில்சாமியும் தேவயானியும் இணைகிறார்கள். எது அவர்களை சேர்த்து வைக்கிறது என்பது மீதிக்கதை.

மயில்சாமியாக கவின். ஆரம்பக் காட்சிகளில் காதல் தோல்வியில் கண்ணீர் சிந்துவதிலிருந்து, தேவயானியால் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என உளறிக் கொட்டுவது வரை நடிப்புப் பங்களிப்பை சுவாரஸ்யமாக தந்திருக்கிறார்.

தேவயானியாக, கவினுக்கு ஜோடியாக நயன்தாரா. நிஜத்தில் அவருக்கும் கவினுக்கும் வயது வித்தியாசம் முன்னே பின்னே இருக்கலாம். திரையில் அது அவ்வளவாக தெரியவில்லை என்பது ஆறுதல். கிராமத்துப் பெண்ணாக வரும்போது பாதுகாப்புக்காக எந்த நேரமும் கையில் அரிவாளை வைத்துக் கொண்டு திரிவது, சென்னைக்கு வந்தபின் மாடர்ன் கேர்ளாக மாறுவது, கவின் சொன்ன பொய்க்கு ஆதரவு தருவதற்காக தன் மதிப்பை இழப்பது என அழுத்தமான காட்சிகள் கிடைத்திருக்க, அனுபவ நடிப்பால் நிரப்புகிறார்.

இயக்குநர் கே பாக்யராஜின் முருங்கைக்காய் சமாச்சாரத்துக்கு ஏற்றபடியான ரகளையான காட்சியொன்று படத்தில் உண்டு. தியேட்டரில் அப்படியொரு சிரிப்பலை.

நயன்தாராவுக்கு அப்பாவாக இளைய திலகம் பிரபு, கவினுக்கு அம்மாவாக ராதிகா சரத்குமார் இன்னபிற கேரக்டர்களில் சத்யன், ஆதித்யா கதிர், வி.டி.வி கணேஷ், அம்ருதா ஸ்ரீனிவாசன், காவ்யா அறிவுமணி என பரிச்சயமான நடிகர் நடிகைகள் ஏராளம் தாராளம்.

ஜென் மார்ட்டின் இசையில் ஜி.வி. பிரகாஷ் பாடிய ‘கண்ணுக்குழியா’, சத்யநாராயணன் குரலில் ‘பச்சை புள்ள’ பாடல்களில் இதம் அதிகம். அனிருத் குரலில் ‘ரசகுல்லா’ பாடலில் எனர்ஜி எக்கச்சக்கம்.

கலர்ஃபுல்லான காட்சிகளை ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவில் பார்க்கும்போது கண்களுக்கு குளிர்ச்சி; மனதுக்கு புத்துணர்ச்சி.

அழகிய காதல் கதையில் அசத்தலான காமெடி, அளவான சென்டிமென்ட் என கலந்து கட்டி படத்தை ரசிகர்களை திருப்திபடுத்தும் உற்சாக விருந்தாக்கியிருக்கிறார் இயக்குநர் விஷ்ணு எடவன்.

ஹாய் – ஃபுல் என்ஜாய்!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்