தமிழ் தெரியாத ஹீரோயின் ஹீரோவிடம் ‘எனக்கு தமிழ்ல கெட்ட வார்த்தைகள் சொல்லிக் கொடு’ என்று கேட்க, அவர் மிக பொறுப்பாக ‘–த்த மூடு’ என்பதிலிருந்து துவங்குகிறார். அவர் சொல்வது உவ்வே என்றிருக்க அதை, பளபள பப்பாளி போலிருக்கிற அந்த பெங்காலி ஹீரோயின் சொல்லும் விதம் அசத்துகிறது.
ஆளும் அழகு பேச்சும் அழகு என்றிருக்கிற அவர் பாலியல் தொழிலாளி. தொழில் நிமித்தம் ஹீரோவை சந்திக்கிறார். அந்த சந்திப்பு ஒருமுறையோடு முடியவில்லை; மீண்டும் மீண்டும் சந்திக்க, பேசிப் பழக, அப்புறமென்ன காதல்தான்… காதல் என்றால் மோதல் இல்லாமலா? அதெல்லாம் தாராளமாக ஏராளமாக இருக்கிறது. அதையெல்லாம் கடந்து காதல் ஜோடிக்கு கல்யாணம் நடக்குமா நடக்காதா என்ற எதிர்பார்ப்பைத் தூண்டி பயணிக்கிறது ‘ஏ’ சர்டிஃபிகேட்டுடன் திரைக்கு வந்திருக்கிற இந்த படத்தின் ஸ்க்ரீன்பிளே.
அவனுக்கு எதைப் பத்தியும் கவல கிடையாது; அவன மாதிரி ஜாலியா யாரும் இருக்க முடியாது’ என ஒரு சிலரைப் பார்த்து சொல்வோம். அப்படியொரு ஆள் ஹீரோ ஆண்டனி. படத்தை இயக்கியிருப்பதும் அவரே.
எந்த நேரமும் குடி, பணம் கொடுத்து செக்ஸ் என்றிருப்பவர், பாலியல் தேவையை தீர்க்க வந்தவள் மீது காதல் வயப்பட்டபின் காதலுக்கு உண்மையாக இருக்கிறார். குடிப்பழக்கத்தை விட முடியாமல் வார்த்தைகளை தாறுமாறாய் விடுகிறார். அதனால் காதலியை பிரிந்து தவிக்கிறார். பாடல் காட்சியில் மெல்லமாய் அப்படியும் இப்படியுமாக நடந்து வருகிறார். கிளைமாக்ஸில் மனம் கலங்கி கண்ணீர் சிந்த வேண்டியிருக்கிறது. எல்லாவற்றையும் இயல்பாக செய்திருக்கிறார். ‘இன்னும் கொஞ்சம் பெட்டரா செய்திருக்கலாம் புரோ’ என்று சொல்லத் தோன்றுகிறது.
கதைப்படியும் நிஜத்திலும் ஹீரோயின் மதுமிதா தாஸ் பெங்காலிப் பெண். படத்தை ஒற்றை ஆளாக தாங்கியிருக்கிறார் என ஒரே வாக்கியத்தில் சொல்லி விடலாம். தனக்கு கொடுத்த கனமான கேரக்டருக்கு அந்தளவுக்கு பொருத்தமான நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார்.
அவருக்கு மகளாக வருகிற சிறுமியின் நடிப்பும் கச்சிதம். அந்த மூவர் தவிர ஹீரோவின் தந்தையாக ஜீவா ரவி, நண்பர்கள் குழுவாக ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி என இன்னும் ஒருசிலர் எளிமையான நடிப்பில் அவ்வப்போது தலை காட்டுகிறார்கள்.
ஜவ்ஹர் இன்வால் இசையில் ‘இயலிசையே’ பாடல் இதயம் வருடுகிறது. பின்னணி இசையில் அதிரடி ஆர்ப்பாட்டம் என ஏதுமின்றி மென்முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அது காட்சிகளுக்கு ஏற்றதாகவும் இருக்கிறது.
அழகான பிரேம்களால், கதையின் மூடுக்கு செட்டாகும் வண்ணக் கலவையால் காட்சிகளை மெருக்கேற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பியட்ரோ வில்லானி.
முகம் சுளிக்க வைக்கும் கன்னாபின்னாவென காடசிகள் நிரம்பியிருக்கிற அளவுக்கு கவிதை போல் இதமூட்டுகிற காட்சிகளும் படத்தில் உண்டு.
பொறுமையை சோதிக்கிற முதல் பாதி; சீக்கிரம் முடிங்கப்பா என சொல்ல வைக்கிற இரண்டாம் பாதி… மனம் கனக்கச் செய்யும் கிளைமாக்ஸ்.
ஒரு வழியாக பார்த்து முடித்தால் ‘காதல் யார் மீதும் வரலாம்; அதற்கு காரண காரியம் தேவைப்படாது. மனம் பக்குவப்படாவிட்டால் காதல் வாழாது’ என்ற கருத்து படத்திலிருப்பது பிடிபடுகிறது. குடி எதையெல்லாம் கெடுக்கும் என எடுத்துக் காட்டியிருப்பதை பாராட்டத் தோன்றுகிறது.
-சு.கணேஷ்குமார்

