குடியால் எதெல்லாம் கெடும்?
அதையெல்லாம் விரிவாக எடுத்துச் சொல்லி விழிப்புணர்வூட்ட ஏகப்பட்ட படங்கள் வந்தாயிற்று. அந்த வரிசையில் சேர்க்கக்கூடியதுதான் என்றாலும், அரசாங்கம் மதுவை தடை செய்தால் விளைவுகள் எப்படியிருக்கும் என அலசியதில் கூடுதலாய் கவனம் ஈர்க்கிறது ‘நல்ல படம்.’
ஹீரோ எந்த நேரம் பார்த்தாலும் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து போதையில் மிதக்கிறார்; குடிகாரர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக மதுப்பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம் நடத்துகிறார். ஒரு கட்டத்தில் நாடு முழுக்க மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட, அதனால் அவரும் அவரது சங்கத்தினரும் என்னவாகிறார்கள் என்பதே கதை…
ஹீரோவாக ஹரிஷ். குடிப்பதில் குஷி, மதுவுக்கு தடை என்றானபின் கள்ளச் சாராயம் காய்ச்சுவதில் பிஸி என வலம் வருகிறார். காதல், அடிதடி ஆக்சன் என மற்ற விஷயங்களிலும் எட்டிப் பார்க்கிறார். நடிப்பு பரவாயில்லை ரகம்.
இவனை விட்டால் உலகத்தில் வேறு ஆளே கிடையாது என்கிற ரேஞ்சுக்கு குடிகாரனை, பொறுக்கியை, ரவுடியை, கொலைக் குற்றவாளியைக் காதலிக்கிற பெண்களுக்கு பஞ்சமில்லாத நாடு இது. அப்படியொரு பெண்ணாக தனலெஷ்மி. லட்சணமாக இருக்கிறார். காதலனின் குடிப்பழக்கத்தால் சிலபல சங்கடங்களைச் சந்திக்கிறார். அளவான நடிப்பாலும் பாடலுக்கு ஆடும்போது மிதமான கவர்ச்சியாலும் ஈர்க்கிறார்.
வழக்கமான அழுகை, கதறல், ஒப்பாரி இல்லாமல் ரமாவை பார்க்க முடிகிறது.
ஹீரோவின் நண்பனாக கல்கி ராஜா, மனைவி இறந்ததுகூட தெரியாமல் சடலத்தின் அருகிலமர்ந்து குடிக்கிற அளவுக்கு குடி நோயாளியா மாறிப்போனவராக வருகிறவர், இன்னபிற கேரக்டர்களில் கதைக்கு பொருந்துகிற புதுமுகங்கள். பங்களிப்பில் குறையில்லை.
கெஸ்ட் ரோலில் மொட்டை ராஜேந்திரன், பூண்டு தூக்கலாக போட்டு கள்ளச் சாராயம் காய்ச்சுவது கலகலப்புக்கு உதவுகிறது.
அழகழகான கோணங்களில் ராஜபாளையத்தின் சுற்று வட்டாரங்கள், பசுமையான வயல்வெளிகள், சோளக் கொல்லை என சுற்றிக் காட்டுகிறது ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ ஹாரிஸின் கேமரா.


