Home விமர்சனம் தி டார்க் ஹெவன் சினிமா விமர்சனம்

தி டார்க் ஹெவன் சினிமா விமர்சனம்

அமானுஷ்யத்தின் பின்னணியில் கொலைகள் நடப்பதாக பின்னப்படும் கதைகளின் வரிசையில் ‘தி டார்க் ஹெவன்.’

மேக்கரை என்ற கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை ஜூன் மாதத்தில் ஆண்களில் சிலர் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். அதற்கு, அங்கு ஏகப்பட்ட ஆண்டுகள் முன் வாழ்ந்து அரக்க குணம் கொண்ட ஒருவனால் கொலை செய்யப்பட்ட ஒரு இளம்பெண்ணின் சாபம்தான் காரணம் என ஊர் நம்புகிறது. இன்னொரு பக்கம் அந்த ஊரில் மாஸ்க் அணிந்த மர்ம நபர் ஒருவர் அடிக்கடி தென்படுவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நடக்கும் கொலைகளுக்கு அவன்தான் காரணம் என்கிறார்கள். அப்படியான சூழ்நிலையில் அந்த பகுதியின் காவல்துறை உயரதிகாரியாக பொறுப்பேற்கும் இளம்பாரி, நடக்கும் கொலைகளின் பின்னணியை, சைக்கோ யார் என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்குகிறார். அதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள், இழப்புகள், சவால்கள் என வேகமெடுக்கிறது திரைக்கதை…

கிளைமாக்ஸுக்கு பின் இணைத்திருக்கும் லீடு இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டாமல் விடாது.

இளம்பாரியாக சீரியல் நடிகர் சித்து. அறிமுகப் படமே கிரைம் திரில்லர்; அதில் காவல்துறை உயரதிகாரி. நல்ல வாய்ப்பு. முகத்தில் முறைப்பும் நடையில் விரைப்புமாக போலீஸ் கேரக்டருக்கு போதுமான கம்பீரம் சேர்த்து., ஆக்சன் காட்சிகளில் அளவான சீற்றம் காட்டுகிறார். உணர்வுகளை வெளிப்படுத்துவது பாஸ் மார்க் கொடுக்கலா என்ற அளவிலிருக்கிறது.

ஊரில் பலரும் இரவு நேரத்தில் மட்டுமே பார்த்ததாக சொல்லும் சைக்கோ’வை பகலில் பார்த்ததாக சொல்லி கதையில் பதட்டத்தின் சதவிகிதத்தை அதிகரிப்பவராக ரித்விகா. பயந்த சுபாவம் போல் பணிவாக நடந்து கொள்பவர், துணிச்சலாய் செய்யும் சில விஷயங்கள் மிரள வைக்கிறது.

காவல்துறை அதிகாரியாக வருகிற பிரபல யூ டியூபர் ‘பொலிகப்புள்ஸ்’ பிரதீப்பின் வில்லத்தனமும் சண்டைக் காட்சியில் வெறித்தனமும் மிரட்டல் ரகம். அவரது அசத்தலான உடற்கட்டை காட்டுவதற்காகவும் ஒரு காட்சி இருக்கிறது.

சித்துவின் மனைவியாக தர்ஷிகா. நேர்மையான போலீஸ் ஆஃபீஸரின் மனைவி என்றால் பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க முடியாது. அவரும் சந்திக்கிறார். எளிமையான நடிப்பும் ஹோம்லி லுக்கும் கவர்கிறது.

ஊர் நாட்டாமையாக வேல ராமமூர்த்தி, டாக்டராக நிழல்கள் ரவி, போலீஸ் அதிகாரிகளாக ஜெயகுமார், விஜய் சத்யா, மேத்யூ வர்கீஸ் இன்னபிற கேரக்டர்களில் அருள் சங்கர், ஜானகிராமன், சாப்ளின் பாலு, மனோஜ், டேனி தயாள், அலெக்ஸ், சோனி, ஆர்த்தி என பலரை கச்சிதமான நடிப்பில் பார்க்க முடிகிறது.

மர்மங்கள் நிரம்பிய கதை. சம்பவங்களில் 80% சதவிகிதம் இருள் சூழ்ந்த நேரத்தில், காடு மேடு மலைப் பகுதிகளில் பாய்ச்சல் காட்ட அதற்கேற்ப கேமரா கோணங்களை அமைத்து ஒளிப்பதிவை தரமாக்கியிருக்கிறார் மணிகண்டன் பி கே.

அமானுஷ்யம், கொலை, திகில், திரில் என கலந்துகட்டிய திரைக்கதைக்கு எனர்ஜியேற்றுகிறது சக்தி பாலாஜியின் பின்னணி இசை. ‘காடான காடு’, ‘என் சாமி வேட்டையாடும்’ என அணிவகுக்கும் பாடல்களில் சுறுசுறுப்பேற்றிக் கொள்ள உதவும்.

ஒரு புத்தகத்தைச் சுற்றிச் சுழலும் அமானுஷ்யங்கள் தருகிற திக்திக் உணர்வு… கொலையாளி அவராக இருக்கலாம், இவராக இருக்கலாம் என பலர் மீதும் சந்தேகம் உருவாக இறுதியில் எதிர்பாராத ஒருவர் குற்றவாளி என்கிற திருப்பம்… படம் பார்ப்பவர்கள் தன்னைப் பாராட்ட மூளையைக் கசக்கி சிந்தித்திருக்கும் இயக்குநர் பாலாஜி, லாஜிக் பிரேக்கை இன்னும் கொஞ்சம் அழுத்திப் பிடித்திருக்கலாம்.

தி டார்க் ஹெவன் – சஸ்பென்ஸுக்கு பஞ்சமில்லை!

-சு.கணேஷ்குமார்

 

 

 

REVIEW OVERVIEW
தி டார்க் ஹெவன் சினிமா விமர்சனம்
Previous articleஐந்து மொழிகளில் உருவாகி வரும் ஃபீல் மை லவ்’ படத்தின் புதிய போஸ்டர்!
Next articleநல்ல படம் சினிமா விமர்சனம்
the-dark-heaven-movie-reviewஅமானுஷ்யத்தின் பின்னணியில் கொலைகள் நடப்பதாக பின்னப்படும் கதைகளின் வரிசையில் 'தி டார்க் ஹெவன்.' மேக்கரை என்ற கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை ஜூன் மாதத்தில் ஆண்களில் சிலர் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். அதற்கு, அங்கு ஏகப்பட்ட ஆண்டுகள் முன் வாழ்ந்து அரக்க குணம் கொண்ட ஒருவனால் கொலை செய்யப்பட்ட ஒரு இளம்பெண்ணின் சாபம்தான் காரணம் என ஊர் நம்புகிறது. இன்னொரு பக்கம் அந்த...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்