எல்லா இடங்களுக்கும் ஒரே மாதிரியான மனநிலையோடு போய்விட முடியாது. ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு விதமாக தயாராக வேண்டியிருக்கும். அதேபோல் கார்த்திக் சுப்புராஜின் படங்களைப் பார்ப்பதற்கும் தனி மனநிலை தேவைப்படும். அதுவும் இந்த டோரதியை பார்க்கக் கிளம்பும்முன் வேறொரு வித்தியாசமான உலகத்துக்குள் போகப் போகிறோம் என்கிற உணர்வோடு தயாராவது அவசியத்திலும் அவசியம்.
இந்த படத்தை வேறு எந்த இசையமைப்பாளர்களிடமாவது கொடுத்திருந்தால் அதிரடி கிளப்புகிறேன் என்று சொல்லி காதுகளைப் பஞ்சராக்கி, கதை கடத்த விரும்பும் உணர்வுகளை சிதைத்திருக்க வாய்ப்பு அதிகம். அதை உணர்ந்து உஷாராகி இசைஞானியிடம் தஞ்சமடைந்ததற்காக கார்த்திக் சுப்புராஜுக்கு ஒரு ஹக்! ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள் என வெளியானபோதே தாறுமாறாய் ஹிட்டடித்த கல்யாண விருந்து, முத்துமணிச்சரம் பாடல்களை காட்சிகளோடு பார்க்கும்போது உற்சாகம் பல மடங்காகிறது. பின்னணி இசையில் ராஜாவின் ராஜாங்கம் எப்படியிருக்கும் என்பதை இந்த தலைமுறை ரசித்து ருசிக்க நல்ல சான்ஸ்.
சிறுவயதிலிருந்து நெருங்கிப் பழகிய நண்பனை கொல்ல வேண்டிய கட்டாயத்தில் கார்த்தி. முடிச்சுவிட்டுப் போடா என நண்பனுக்காக உயிரைக் கொடுக்கத் தயாராகும் சுப்பு. கொலை செய்யத் துண்டுகிற அளவுக்கு சுப்பு செய்த தவறு என்ன? கார்த்தியால் சுப்புவை கொல்ல முடிந்ததா இல்லையா?
கதை என்னவோ அம்புட்டுத்தான். அதற்கான திரைக்கதையில்தான் கார்த்திக் சுப்புராஜின் கரடுமுரடான, இருள் அப்பிக் கிடக்கும் உலகத்தைப் பார்க்க முடிகிறது.
கார்த்திக்காக ‘மொதராத்திரி’ ரிஷி. உயிருக்குயிரான நண்பனைக் கொல்ல வேண்டிய நிலைமையில் கொல்லவும் முடியாமல் உயிருடன் விடவும் முடியாமல் தவிக்கிற தவிப்பு கலங்கடிக்கிறது. கல்யாண விருந்து பாட்டுக்கான ஆட்டம் அட்டகாசம்.
பாலியல் மாற்றத்தை உணர்வதிலிருந்து அதை வெளிப்படுத்தி, அதனால் தாங்க முடியாத அவமானங்களைச் சந்தித்து, அடி உதைகளைக் கடந்து, உருமாறி மனுஷனாய் இருந்தவன் மனுஷியாய் ஏறெடுத்துப் பார்க்கும் நிமிடம் வரை சனந்திடமிருந்து அப்படியொரு நடிப்பு. அப்படியொரு உடல்மொழி. உயரிய விருதுகள் கிடைக்கலாம்.
கார்த்திக் – சுப்பு நட்பிலிருக்கும் கெமிஸ்ட்ரி கவனம் ஈர்க்கிறது. அந்தளவு இருவரிடமிருந்தும் உணர்வுபூர்வமான நடிப்பு. அதற்கு தனி மதிப்பெண் கொடுக்க வேண்டும்.
வேட்டை முத்துக்குமாருக்கு மாறுபட்ட வேடம்; விசிலய்யாவாக வருகிற அவரின் ஆணாதிக்க வில்லத்தனம் வீரியம்.
கீர்த்தி சுரேஷுக்கு காட்சிகள் குறைவென்றாலும் கியூட்டான முகபாவங்களுடன், சனந்தின் பாலின மாற்ற உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மனதுடையவராக அசத்தலாய் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. புகுந்து விளையாடியிருக்கிறார்.
இன்னபிறரின் பங்களிப்பு பற்றி பேரா பேராவாக எழுதலாம். அதற்கான தகுதிகள் அத்தனை பேரின் நடிப்பிலும் இருக்கிறது.
வேறு விதமான கதைக்களம், ஊர் விட்டு ஊர், மாநிலம் விட்டு மாநிலங்கள் என இந்தியாவின் பல பகுதிகளுக்கு பயணிக்கும் கதை நாயகர்கள்… அந்தந்த நிலப்பரப்பின் நீள அகலங்களை அத்தனை அழகாய் பதிவு செய்திருக்கிறது எஸ் திரு & எஸ் திருநாவுக்கரசு கூட்டணியின் கேமரா. கடைசி அரைமணி நேரம் பார்க்கக் கிடைக்கிற இடங்கள், பரந்து விரிந்த மலைப் பகுதிகள் கண்களை விட்டு பிரிய மறுக்கிறது.
படபடவென வந்து விழும் வசனங்களில் ‘மனசு கடவுள், புத்தி சாத்தான்’ என்றெல்லாம் கிடைக்கும் நறுக் சுறுக்’குகள் நினைவடுக்குகளில் சென்று சேர்கிறது.
மனிதர்களில் எப்படிப்பட்ட கேடுகெட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை தோலுரித்துக் காட்டும் டோரதி, மாற்றுப் பாலினத்தவரையும் சக மனிதனாக மதிக்க வேண்டும் என வலியுறுத்தி புரட்சிப் பாரதியாய் உயர்ந்து நிற்கிறாள்!
-சு.கணேஷ்குமார்


