டாக்டர் எஸ். ராஜா இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ திரைப்படம் வரும் அக்டோபர் 30-ம் தேதி திரைக்கு வருகிறது.
திரைப்படத் துறையை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல் சமூக விழிப்புணர்வையும் புதிய திறமைகளுக்கான வாய்ப்புகளையும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான வாழ்வாதாரத்தையும் இணைக்கும் உயரிய நோக்குடன் உருவெடுத்துள்ளது ‘ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ்.’
குடும்ப உரையாடலில் உதித்த சமூகக் கனவு
கடந்த 2023ம் ஆண்டு மக்களிடையே நேர்மறை சிந்தனைகளையும் பயனுள்ள கருத்துகளையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் கணவன்-மனைவி இடையே நடந்த ஒரு உரையாடலே இந்நிறுவனத்திற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது. தனது நீண்டகால மருத்துவ அனுபவத்தில் தான் கண்ட மனிதர்களின் உணர்வுகளையும் சிக்கல்களையும், கலை வடிவமான திரைப்படங்கள் மூலம் வெளிப்படுத்த மருத்துவர் டாக்டர் எஸ். ராஜா அவர்கள் முடிவெடுத்தார்.
நிறுவனர்கள் & தயாரிப்புப் பின்னணி
டாக்டர் எஸ். ராஜா, எம்.டி.: நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர். இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இசை மற்றும் இயக்கப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.
சுபலட்சுமி ஜெயராம், B.Sc. (California, USA): நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராகச் செயல்பட்டு படைப்புக்கான முழுத் தயாரிப்புத் துணையையும் வழங்குகிறார்.
“மனிதநேயம் எங்கள் அடித்தளம் திறமை வளர்ப்பு எங்கள் பொறுப்பு தன்னிறைவு வாழ்க்கை எங்கள் இலக்கு” என்பதே இந்நிறுவனத்தின் முதன்மை கொள்கையாகும்.
படக்குழு:
பாடல்: ஹரிணி
படத்தொகுப்பு: ராஜா முகமது
ஒளிப்பதிவு: இராமநாத் வாசு
மக்கள் தொடர்பு : பா. சிவக்குமார்
கிராமத்திலிருந்து சர்வதேச தளம் வரை:
டாக்டர் ராஜாவின் பின்னணி
பேருந்து வசதி கூட இல்லாத ஒரு கிராமத்தில் பிறந்த டாக்டர் ராஜா. சிறுவயதிலேயே உழைப்பையும் குடும்பப் பாசத்தையும் கற்றுக்கொண்டவர். தேவகோட்டையில் பள்ளிப் படிப்பையும், மதுரையில் மருத்துவப் படிப்பையும் முடித்த இவர். மாணவர் பருவத்திலிருந்தே சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு 18 கிராமங்களின் நம்பிக்கைக்குரிய மருத்துவராகத் திகழ்ந்தார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, ட்ரினிடாட் அண்ட் டொபாகோ (Trinidad and Tobago) மற்றும் அமெரிக்கா என உலகளவில் தனது மருத்துவப் பணியை விரிவுபடுத்திய இவர். மருத்துவம், நிர்வாகம் மற்றும் குழந்தை மருத்துவத்துடன் திரைப்பட இயக்கத்திலும் தேர்ச்சி பெற்றார். சுமார் 25 திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்த அனுபவமும், 2018ல் ஹாலிவுட்டில் பெற்ற இயக்கப் பயிற்சியும் இவரது திரைப்பட உருவாக்கத்திற்கு உறுதுணையாக அமைந்தன.
வசதியற்ற மக்களுக்கு இலவச மருத்துவச் சேவைகளை வழங்கியதோடு விளம்பரமின்றி பல எளிய குடும்பங்களுக்கு உதவிய பெருமை இவருக்கு உண்டு.
சமூக நோக்கம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள்
புதிய திறமைகளுக்கான மேடை:
தன் முதல் திரைப்படத்திலேயே பெரும்பாலான புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து நடிகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் சுமார் 10 கதைகள் தயார்நிலையில் உள்ளன.
ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 25 ஏக்கர் வாழ்வாதார வளாகம்:
திரைப்படம் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காகச் சிறப்பு வளாகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த வளாகத்தில் கல்வி, சிகிச்சை, உணர்வுசார் ஆதரவு, தொழிற்பயிற்சி, உற்பத்தி அலகுகள் மற்றும் பாதுகாப்பான தங்குமிட வசதிகள் உருவாக்கப்படவுள்ளன.
சமூகத்திற்கான திரைப்பட வருவாய்:
திரைப்படங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை நிறுவனர்களின் சொந்தப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தாமல் முழுமையாக இச்சமூக மேம்பாட்டுத் திட்டத்திற்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கும் மட்டுமே பயன்படுத்தவுள்ளனர்.
திரைப்பட ரசிகர்களின் ஆதரவு, புதிய கலைஞர்களின் வளர்ச்சிக்கும், சிறப்புப் பராமரிப்புத் தேவைப்படும் குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் பெரும் துணையாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

