சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்துக் கொண்டிருக்கும் படம்.
இலங்கையில் நடந்த போரில் உயிரைத் தவிர எல்லாவற்றையும் இழந்த சேதுராமனும் அவரது மகள் தமிழினியும் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்து சேர்கிறார்கள். புதிய இடம், புதிய மனிதர்கள்… ஒரு பேருந்து நிறுத்தத்தை வசிப்பிடமாக்கிக் கொண்டு நம்பிக்கையோடு வாழ்க்கையைத் துவங்கும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சிக்கல்கள், பசி, வேலையின்மை என விரிகின்றன அடுத்தடுத்த காட்சிகள்.
அவர்களின் மனம் எதிர்பார்க்கும் அன்பான மனிதர்கள் கிடைத்தார்களா? சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்ததா? நிம்மதியாக வாழ முடிந்ததா?
இந்த கேள்விகளுக்கான பதில்களே கதையோட்டத்தின் மீதி… இயக்கம் அபிலாஷ் ஜி. தேவன்
சேதுராமனாக மலையாள நடிகர் டாக்டர் அமர் ராமச்சந்திரன். மகள் மீதான பாசம், சொந்த மண்ணையும் மனைவியையும் இழந்த வலி, எதிர்காலம் குறித்த பயம் என பரிமாற வேண்டிய கனமான உணர்வுகளை கண்கள் மூலமே கடத்துகிறார். உடல்மொழியும் பொருத்தம்.
போரின் கொடூரங்களை நேரில் பார்த்த மனநிலையை, கிடைக்கிற சிறுசிறு தருணங்களில் மகிழ்ச்சியைத் தேடுகிற துடிப்பை சிறுமி நேஹா அமர் வெளிப்படுத்தியிருக்கும் விதம் இயல்பாக இருக்கிறது. நிமிஷா நம்பியார், தீபக் பிரபாகரன், சிறுமி குருதன்ஷிகா, சிறுவன் நிஹல் என இன்னபிறர் எண்ணிக்கை அளவில் இணைந்திருக்க, தன்னருகில் ஆதரவற்று வந்து நிற்பவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவிக்கரம் நீட்டுகிறவராக (ஆறேழு வருடங்கள் முன் காலமான) பாலாசிங் மனதில் இடம் பிடிக்கிறார்.
போரின் கோர முகத்தையும், அகதிகளின் அவல நிலையையும் உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறது அவுஸேப்பச்சனின் பின்னணி இசை. தாமரையின் வரிகளில் ‘வாடா என் செல்லக்குட்டி’, ‘ஆகாயம் மேலே’, புரட்சிக் கவிஞரின் வரிகளில் ‘தலைவாரி பூச்சூடி’ என அணிவகுக்கும் பாடல்கள் வலி, நேசம், ஏக்கம், உற்சாகம் என உணர்வுகளின் கலவையாக கடந்து போகின்றன.
பிரசாந்த் பிரணவத்தின் ஒளிப்பதிவு கச்சிதம்.
போரின் வலிகளை குண்டு வெடிப்பு, விமான வழி தாக்குதல், பாலியல் வன்கொடுமைகள் என காட்டுவதிலிருந்து விலகி, சென்சாரில் ‘யூ’ சர்டிஃபிகேட் பெறுகிற அளவில் வேறோரு கோணத்தில் தந்தை – மகள் உறவின் வழியாக மனிதம் பேசும் படைப்பாக்கியிருக்கிறார் அபிலாஷ் ஜி. தேவன்.
இலங்கையிலிருந்து ஒரு தகப்பனும் மகளும் அகதியாக தமிழகம் வந்து எந்தவொரு சட்டசிக்கலுமின்றி வாழ்நாளைக் கடத்திவிட முடியும் என்பதையெல்லாம் எப்படி ஏற்பதென்று புரியவில்லை. தமிழ்நாட்டில் அவர்கள் சந்திக்கிற அத்தனை மனிதர்களும் தங்கமானவர்களாக இருப்பது இயல்புத் தன்மைக்கு மாறாக இருக்கிறது.
நாடகத்தனமான காட்சிகள், பரிதாபத்தைத் தூண்டுவதற்காக வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகள் அதிகம். குறையாய் குறிப்பிட்டுச் சொல்லவும் சிலபல விஷயங்கள் படத்தில் உண்டு.
அவற்றையெல்லாம் தாண்டி ‘தாய்நிலம்’ பறிக்கப்பட்ட வேதனையின் கண்ணீர் சாட்சியான இந்த படைப்பு மனிதாபிமானமிக்க மனிதர்களுக்கானது; உலக சினிமாக்களை தேடித் தேடி பார்ப்பவர்கள் தவறவிடக் கூடாதது!
-சு.கணேஷ்குமார்


