போலீஸ் கதைகளில் கன்னெடுத்து சிங்கமாக சீறிய அனுபவமுள்ள சூர்யாவை அதே களத்தில் ‘கண்ணைக் கட்டி’ இறக்கினால் என்னவாகும்? முழுக்க முழுக்க வித்தியாசமாய் சிந்தித்திருக்கிறார் மலையாளத்தில் ‘ஆவேஷம்’ தந்த ஜித்து மாதவன்
தொடர்ந்து ஒரே விதமாக கொலைகள் செய்து வந்த சைக்கோவை டி எஸ் பி இன்பராஜ் கைது செய்து தண்டனை பெற்றுத் தருகிறார். அந்த சைக்கோ சிறையிலிருக்கும்போது அவன் செய்ததுபோலவே சிட்டியில் தொடர் கொலைகள் நடக்கிறது. அதன் விளைவாக காவல்துறை கொலைகார சைக்கோ வெளியிலிருக்கிறான்; சிறையிலிருப்பது வேறு யாரோ என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
இன்பராஜ் அதை மறுக்கிறார். முன்பு நடந்த கொலைகளுக்கும் இப்போது நடக்கும் கொலைகளுக்கும் சில வித்தியாசங்கள் இருப்பதை நிரூபிக்கிறார். புதிதாக உருவாகியுள்ள சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்க களமிறங்குகிறார்.
அப்போதுதான், இன்பராஜுக்கு சிலபல வருடங்களாகவே கண்பார்வை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சமீபத்தில் 90% வரை பார்வை பறிபோன விவரம் காவல்துறை உயரதிகாரிக்கு தெரிய வருகிறது.
அப்படி பார்வை பறிபோன இன்பராஜ் பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, நடக்கும் சைக்கோ கொலைகளின் பின்னணியை தோண்டித் துருவி, கொலையாளியை எப்படி நெருங்குகிறார் என்பது இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காத சுவாரஸ்யம்…
இன்பராஜாக சூர்யா. ஷார்ட்ஸ் – டீ சர்ட் அணிந்து தெனாவட்டாக சிபிசிஐடி தலைமையிடத்துக்கு என்ட்ரி கொடுக்கும்போதே நம் மனது உற்சாகத்துக்கு தாவிவிடுகிறது. கொலை பின்னணியை அலசி ஆராய தனக்கு துணையாக ஒரு பெண்ணை நியமித்துக் கொள்வதும், காவல்துறை முன்னாள் அதிகாரிகளான அப்பா – அம்மாவின் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வைத்துக் கொண்டு ஸ்டைல், மேனரிசம், ஆக்சன் என அடித்து ஆடும் ஆட்டம் செம ரகளை. தன் அஸிஸ்டண்ட் ‘ஒரு சூர்யா சிரிப்பு சிரி’ என்று சொல்ல, அவர் சிரிப்பதிலிருந்து ரசிக்க எக்கச்சக்க காட்சிகள்.
சூர்யாவுக்கு அஸிஸ்டன்டாக இணைந்து, துப்பு துலக்குவதில் சுறுசுறுப்பு காட்டுகிற நஸ்ரியா ஆக்சனிலும் தெறிக்கவிடுகிறார். மேக்கப் இல்லாமல் நடித்திருக்கும் அவர் சூர்யாவிடம் மெல்ல மெல்ல இதயத்தில் இடம்பிடிக்கும் வேலையை கவிதைபோல் செய்திருக்கிறார்.
சூர்யாவின் அப்பாவாக ஆனந்த்ராஜ், அம்மாவாக ராஜலட்சுமி. இருவரும் கொலைகாரனை கண்டுபிடிப்பதில் மகனுக்கு உதவுகிறார்கள். அப்பா மறதி நோயால் அடிக்கடி குழந்தையாக மாறிவிடுகிற இயல்புடையவர், அம்மா குடிப்பழக்கத்தில் ஊறிப்போனவர் என எழுதப்பட்ட கேரக்டர்களில் கலகலப்பூட்டுகிறார்கள்.
ஒரேயொரு காட்சியில் வந்தாலும் மிரட்டுகிறார் டெவினோ தாமஸ். சைக்கோத்தனத்தை ஸ்டைலாக தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார் நஸ்லென். சிபிசிஐடி உயரதிகாரியாக லால். நடிப்பில் வழக்கம்போல் அலட்டல் அதிகம்.
லுங்கி பாய்ஸ் ராஜ்பிரியனுக்கு அறிமுகப் படம்; சூர்யாவுடன் பல காட்சிகள். அந்த விஷயத்தில் மனிதர் லக்கி. கதையோட்டத்தின் தேவைக்கேற்ப சுறுசுறுப்பாக பங்களித்திருக்கிறார்.


