நடிகர் சத்யதேவ், கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பான் இந்திய க்ரைம் ஆக்ஷன் என்டர்டெயினராக, புதுமையான களத்தில், பரபர திரைக்கதையுடன் உருவாகி, கடந்த அக்டோபர் 22-ம் தேதி வெளியான திரைப்படம் ‘ஜீப்ரா.’
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. அதையடுத்து சென்னையில் படக்குழுவினர் படத்தின் வெற்றிக்கு துணை நின்ற பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
நிகழ்வில் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக், ”இங்குதான் என் பயணம் தொடங்கியது. இங்கு நான் மற்ற படங்களின் விழாக்களை வேடிக்கை பார்த்துள்ளேன். என் முதல் படம் பென்குவின் கொஞ்சம் தவறிவிட்டது. அதன் முழுப்பொறுப்பும் எனக்குத் தான் அதை ஏற்றுக்கொள்கிறேன். அதைத் திருத்திக்கொண்டு தான், இந்தக்கதையைத் துவங்கினோம். பென்குவின் என்னை மைனஸ் 1 க்கு கொண்டு சென்று விட்டது. அதிலிருந்து மீண்டு வர ஒரே ஒரு முறை வேறு ஒரு கதை செய் என எல்லோரும் சொன்னார்கள். சரி செய்வோம் என்று தான் இந்தக்கதை ஆரம்பித்தது.
பாலா சார், தினேஷ் சார் இருவரிடம் கதை சொன்ன போது, எனக்கு ரொம்பப் பயமாக இருந்தது. ஆனால் கதை கேட்டவுடன், உடனே செக் தந்தார்கள் எனக்குக் கனவு மாதிரி இருந்தது. இந்தப்படம் இங்கு தான் செய்வதாக இருந்தது. ஆனால் அப்போது ஃபினான்ஸியலாக முடியவில்லை, அதனால் தெலுங்குக்குப் போனது. அங்கிருக்கும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் செய்தோம். தியேட்டரில் எல்லோரும் கொண்டாடுவதைப் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெற்றி உங்களால் தான் உங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகர் சத்ய தேவ் பேசியபோது, ”தமிழ்நாட்டுடன் எனக்கு ஸ்பெஷல் கனக்சன் இருக்கிறது. தமிழ்ப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் படம் செய்ய வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன். ஜீப்ரா மூலம் அது நடந்தது மகிழ்ச்சி. இப்படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. உங்கள் பாராட்டுக்கள் பெரிய ஊக்கம் தந்துள்ளது. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. சீக்கிரம் தமிழ் கத்துக்கிறேன். இப்படத்தின் முதுகெலும்பாக இருந்த சத்யராஜ் சாருக்கு நன்றி. இயக்குநர் ஈஸ்வர் இந்தப்படத்திற்கு 800 பக்க திரைக்கதை எழுதியிருந்தார். அவர் மியூசிக், ரசிகர்கள் ரியாக்சன் முதற்கொண்டு டீடெயிலாக எழுதியிருந்தார். அவர் எழுதியது அப்படியே தியேட்டரில் நடந்தது. கண்டிப்பாக அவர் மிகப்பெரிய இயக்குநராக வருவார். அனில் எடிட்டிங் குறித்து தனியாகப் பாராட்டுகிறார்கள். ரவி பஸ்ரூர் மியூசிக் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. உங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி” என்றார்.
நடிகர் சத்யராஜ் பேசியபோது, ”நான் இந்தளவு வெற்றியை எதிர்பார்த்து நடிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் பாஸிடிவ் ரிவ்யூஸ் வந்து கொண்டே இருக்கிறது. இந்தியில் ஹவுஸ்புல் ஆகிறது. எல்லாப்பக்கமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சத்யதேவை தமிழுக்கு வரவேற்கிறேன். அவர் தமிழ் கற்றுக்கொள்வதாகச் சொன்னார். நான் 15 ஆண்டுகளாகத் தெலுங்கில் நடிக்கிறேன் ஆனால் இன்னும் தெலுங்கு கற்றுக்கொள்ளவில்லை. இப்படத்தில் சத்ய தேவ் என்னை தெலுங்கில் டப் செய்ய வைத்து விட்டார். அதற்கு அவருக்கு நன்றி. இந்த டீமே அற்புதமான டீம். தமிழில் இப்போது பிஸியான ஆள் அசோக்தான். பான் இந்தியப் படங்கள் அதிகமானவுடன், இவர் வேலை அதிகமாகிவிட்டது. ஒரு படத்தில் எடிட்டர் பற்றிப் பாராட்டுகிறார்கள் என்றால், அவர் உழைப்பு அப்படிப்பட்டது. இயக்குநர் ஈஸ்வர் அற்புதமாகப் படத்தைத் தந்துள்ளார். படத்தின் மேல் சத்யா காட்டிய ஆர்வம், அர்ப்பணிப்பு பெரியது. அவ்வளவு உழைத்திருக்கிறார். படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் வாழ்த்துகள். படத்திற்கு பெரும் ஆதரவு தந்த, உங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.
தயாரிப்பாளர் தினேஷ், விநியோகஸ்தர் ரகுபதி, எடிட்டர் அனில் கிரிஷ், டப்பிங் ரைட்டர் அசோக், திரைக்கதை எழுத்தாளர் யுவா, தயாரிப்பாளர் பாலசுந்தரம் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.