Home விமர்சனம் மெளன மொழிகள் சினிமா விமர்சனம்

மெளன மொழிகள் சினிமா விமர்சனம்

காதலும் காதல் சார்ந்தும், எளிமையான கமர்ஷியல் பேக்கேஜாக ‘மெளன மொழிகள்.’

ஹீரோவுக்கு வேலைவெட்டி இருக்காது; பொறுக்கியாய் சுற்றிக் கொண்டிருப்பான்; அடிதடி வெட்டுக்குத்து என வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவான். அவனை ஒரு பெண் துரத்தித் துரத்திக் காதலிப்பாள்.

இப்படியான டெம்ப்ளேட்டில் ஏராளமான படங்களைப் பார்த்து விட்டோம். இந்த படமும் காதல் சப்ஜெக்ட்தான். நல்ல விஷயம் என்று பார்த்தால் இந்த படத்தின் ஹீரோ கதிருக்கு வேலைவெட்டி உண்டு. அவன் விளம்பர நிறுவனம் நடத்தி பணம் சம்பாதிப்பதோடு இரத்ததானம் உள்ளிட்ட மனிதாபிமான செயல்களிலும் ஈடுபடுகிறான். அப்படியொரு ஹீரோவை உருவாக்கியதற்காகவே இயக்குநருக்கு முதல் பாராட்டு.

அந்த கதிருக்கு அழகான பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. அதற்கேற்றபடி அவன் பார்வையில் சிக்குகிறாள் அழகான பெண்ணாக பவித்ரா. அவளை தனது நிறுவனத்திற்காக சோப்பு விளம்பரத்தில் நடிக்க அணுகிறான். அவள் மறுக்கிறாள். அதனால் அவன் கோபமடைகிறான். இப்படி அவர்களுக்குள் மோதல் உருவாக, ஒரு கட்டத்தில் அவனுக்கு அவள் மீது காதல் தொற்றிக் கொள்கிறது. காதலுக்கு காரணம் அவளது அழகு.

கதை அப்படி சாதாரணமாக நகர, திடீரென்று ஒரு விபத்து ஏற்பட்டு பவித்ராவின் முகத்தில் பலமாக அடிபட, கதிர் நேசித்த அவளது அழகு பறிபோகிறது. அதன்பிறகு ஏற்படும் கதிர் – பவித்ராவின் மனநிலை மாற்றங்களை சுற்றிச் சுழல்கிறது மீதிக் கதை… காதல் ஜோடி கல்யாண ஜோடியானார்களா இல்லையா என்பது கிளைமாக்ஸ்…

கதிராக பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ. அழகில் மயங்கிக் காதலிப்பது, அழகில்லாதபோதும் காதலை தொடர்வது என நடிப்பு பாஸ்மார்க் போடுகிற அளவிலிருக்கிறது. ஆக்சன் காட்சிகளில் போதுமான ஆவேசம் காட்டுகிறார்.

பவித்ராவாக அர்ச்சனா சிங். லட்சணமாக இருக்கிறார். அவருக்கும் ஷாகிருக்குமான காதல் மோதலை ரசிக்க முடிகிறது.

ஏகப்பட்ட சிம் கார்டுகளைப் பயன்படுத்தி பலரிடமும் கடலை போடுகிறவராக, அதனாலேயே சில பிரச்சனைகளை சந்திப்பவராக ஹீரோயின் திவ்யா நாகேஷ். அவர் ஷாகிரை காதலிப்பது, ஷாகிர் பவித்ராவைக் காதலிப்பது தெரிந்தும் விலகாமல் லவ் டார்ச்சர் கொடுப்பது என துள்ளலாக துடிப்பாக நடித்திருக்கிறார்.

கதையில் இரண்டாவது ஹீரோயின் இருப்பதுபோல் இரண்டாவது ஹீரோவும் இருக்கிறார். பெயர் ஸ்ரீமன். அழுத்தமான கதைகளில் நடித்தால் கவனம் பெறலாம்.

ஷாகிரின் நண்பராக வருகிற அர்ஜுனன் நந்தகுமார் காமெடி கலகலப்புக்கு உதவுகிறார். தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், இளவரசன், அஞ்சலி தேவி உள்ளிட்ட இன்னபிறர் ஏற்ற அப்பா அம்மா கேரக்டர்களில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள்.

கனாபாலா குரலில் ஒன்று, ரிஷாவின் குத்தாட்டத்துடன் ஒன்று, காதல் உணர்வுகளோடு ஒன்றிரண்டு என நள இளந்திரையன் இசையில் பாடல்கள் நிரம்பி வழிகிறது. பின்னணி இசையில் அதிரடி ஆர்ப்பாட்டம் அதிகம். சென்னையின் சுற்று வட்டாரங்கள், பார்க், பீச் என பரபரப்பாய் சுற்றியிருக்கிறது எம் ஜி ராயின் கேமரா.

கதை, திரைக்கதை, காட்சியமைப்புகளால் 20, 30 வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் செல்லும் இந்த படம் எடுத்துச் சொல்கிற ‘காதலுக்கு அழகு முக்கியமில்லை’ என்கிற மெசேஜ் எல்லா காலத்திலும் ஏற்கக்கூடியது.

நம்மிடையே சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்கள் காதலை தொலைத்தவர்களாக இருக்கலாம் என படத்தை நிறைவு செய்திருப்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஃபீலிங் தரலாம்.

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்