மெடிக்கல் கிரைம் பின்னணியில் ‘நிறம்.’
சிட்டியில் பிரபலமான மருத்துவமனை. அதன் சேர்மனின் மகளும், அந்த மருத்துவமனையின் மருத்துவ மாணவியும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் காணாமல் போகிறார்கள்; கடத்தப்படுகிறார்கள் என்றும் சொல்லலாம்.
அதற்கு என்ன காரணம்? காணாமல் போனவர்களுக்கு என்னவானது?
விறுவிறுப்பான விளக்கங்களுடன் விரிகின்றன அடுத்தடுத்த காட்சிகள்…
ரொம்பவே துணிச்சலானவர்; தன்னிடம் யாராவது தவறாக நடந்துகொள்ள முயற்சித்தால் பளீரென ஒரு அறை நிச்சயம். கண்முன் அநியாயங்கள் நடந்தால் வீடியோ எடுத்து வைரலாக்குவது உறுதி. அப்படிப்பட்டவர் மருத்துவமனையில் நடக்கும் குற்றங்களை கண்டுபிடிக்கிறார். அதனால் ஆபத்தைச் சந்திக்கிறார். இப்படியொரு ரோலில் பிரித்தி அஸ்ராணி. எனர்ஜிடிக்கான நடிப்பு கதையோட்டத்துக்கு பலம்.
பிரித்தி அஸ்ராணியின் காதலனாக முகேன் ராவ். காட்சிகள் குறைவாக இருந்தாலும் எப்போது உணர்ச்சிவசப்பட வேண்டும், எப்போது உணர்வுபூர்வமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து பங்களித்திருக்கிறார்.
இரண்டாம் நாயகியாக பளபளப்பும் தளதளப்பும் நிரம்பி தான்யா ஹோப், முக்கியமான சில சீன்களில் சின்சியராக கடமையாற்றியிருக்கிறார். மருத்துவமனை பின்னணியில் குற்றச் செயல்களில் ஈடுபடுகிற நிதின் சத்யாவின் வில்லத்தனம் ஓகே ரகம். சுரேகா வாணி, ஸ்ரீஜித்ரவி உள்ளிட்டோர் கதையில் தங்களது முக்கியத்துவம் புரிந்து நடித்திருக்கிறார்கள்.
டி இமான் பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் வீரியம் கூட்டியிருக்கலாம். சான்டோனியோ டெர்சியோவின் ஒளிப்பதிவு நேர்த்தி.
நாயகன் நாயகிக்குள்ளான காதல் மோதல்களுக்கான காட்சிகளை குறைத்துக் கொண்டு, மருத்துவமனையில் நடக்கும் சம்பவங்களை விரிவாக்கியிருந்தால் பரபரப்பை அதிகரித்திருக்கலாம்.
-சு.கணேஷ்குமார்

