சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மையப்படுத்தி மற்றுமொரு படைப்பு.
நாயகன் சிலரை குறிவைத்துக் கொல்கிறார்; இன்னும் பலரை கொல்ல வேண்டுமென்ற எண்ணத்திலும் இருக்கிறார். அவரை போலீஸ் சுற்றி வளைக்கிறது.
கொலைகளுக்கான காரணம் என்ன? என்ற போலீஸ் தரப்பின் கேள்விக்கு கோர்ட்டில் பதில் சொல்கிறார். சொல்லச் சொல்ல, நீதிபதியைப் பார்த்து ‘அவரை கண்டுக்காம விடுங்கய்யா, அந்தாளு மாதிரி ஊருக்கு நாலு பேராச்சும் வேணும்’ என்று உரத்த குரலில் கத்தத் தோன்றுகிறது. அந்தளவு அவர் செய்தது நியாயமாக இருக்கிறது. கிளைமாக்ஸ் அசத்துகிறது. இயக்கம் நட்ராஜ் ஏகாம்பரம்
அநியாயத்தைக் கண்டு கொதிப்படைகிற நாயகன் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார் ஸ்ரீதர். தன் சகோதரியின் மகளைச் சீரழித்தவர்களை களையெடுக்கும் வேள்வியில் வெறித்தனம் காட்டியிருக்கிறார்.
மலைவாழ் மக்களில் நாகரிகம் பரவிப் படர்ந்த குடும்பத்துப் பெண்ணாக ஸ்வேதா. கல்லூரிப் படிப்புக்காக நகரத்துக்கு செல்வது, ஹாஸ்டலில் தங்குவது, உடன் தங்கியிருக்கும் பெண்களால் மாடர்ன் உடைக்கு மாறுவது, அவர்களின் போதைப் பழக்கங்களைப் பார்த்து மிரள்வது, தன்னையும் போதைக்கு பழக்க நினைக்கும் அவர்களின் விருப்பத்துக்கு உடன்பட மறுப்பது என காட்சிக்கு காட்சி வெளிப்படும் வெகுளித்தனம் கேரக்டருக்கு தனி அடையாளம் தருகிறது. அவருக்கு நேரும் முடிவு கலங்கடிக்கிறது.
இரண்டாம் நாயகியாக, மீடியா பர்சனாக வருகிற சினியுதன் நடக்கும் கொலைகளின் பின்னணியை அலசி ஆராய்கிறவராக துறுதுறு நடிப்பால் கவனிக்க வைக்கிறார்.
நாயகனின் நண்பனாக வருகிற பிளாக் பாண்டிக்கு வழக்கமான கெக்கே பிக்கே காமெடிக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், போலீஸின் கவனிப்புக்கு ஆளாகச் செய்திருக்கிறார்கள். ஐயோ பாவம் என்றிருக்கிறது.
பணபலமிக்கவராக, காமவெறியராக ஏ வெங்கடேஷ். அலட்டலில்லாத வில்லத்தனம் காட்டியிருக்கிறார். காவல்துறை உயரதிகாரியாக அருவிமதன், நாயகியின் தந்தையாக பவா, இன்னபிற பாத்திரங்களில் ஜெயந்திமாலா, வெங்கடேஷ் உள்ளிட்டோரின் கச்சிதமான நடிப்பு திரையை ஆக்கிரமிக்கிறது.
கதையோட்டத்துக்குப் போதுமான அளவில் பின்னணி இசையை தந்திருக்கிறார் விக்னேஸ்வரன். எளிமையான ஒளிப்பதிவில் காட்சிகளைச் சுருட்டியிருக்கிறார் நாக அர்ஜுன்.
பெண்களை காமபோதைக்குப் பலியாக்கும் மனித மிருகங்களை ‘பகாசுரன்’ பாணியில் தண்டிக்கலாம் என்பது சட்டப்படி சரியாக இருக்காதுதான். சட்டம் கடமையைச் செய்யத் தவறும்போது வெறென்னதான் செய்வது?
படம் முன்வைக்கிற இந்த கேள்விக்கு பதில் கிடைக்காதவரை ஜெடூசிக்களுக்கு முற்றுப்புள்ளியே கிடையாது.
-சு.கணேஷ்குமார்


