ஆர்யா நடிக்கும் புதிய படத்தை, கிராமத்து பின்னணியில் அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும்படியான, கமர்ஷியல் படங்களை இயக்குகிற முத்தையா இயக்குகிறார்.
சமீபமாக வெற்றிப்படங்களை தந்துகொண்டிருக்கிற ஜீ ஸ்டூடியோஸ் & டிரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ஆர்யா 34′ என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை தயாரிக்கின்றன.
வெந்து தணிந்தது காடு’ படத்தில் கதாநாயகியாக நடித்து கவனம் ஈர்த்த சித்தி இதானி இப்படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார்.
இந்த படத்தின் பூஜை இன்று காலை எளிமையான பூஜையுடன் தொடங்கியது.
படம் குறித்து ஜீ ஸ்டுடியோவின் சவுத் மூவிஸ் தலைவர் அக்ஷய் கெஜ்ரிவால் “ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸுடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. ஆர்யா தொடர்ந்து மாறுப்பட்ட பாத்திரங்களில் வித்தியாசமான படங்கள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறார். இயக்குநர் முத்தையா அனைத்து தரப்பு ரசிகர்களின் நாடித்துடிப்பை நன்கு புரிந்து கொண்டவர். இவர்கள் கூட்டணி பார்வையாளர்களுக்கு ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை வழங்கும் என்பது உறுதி.
சிறந்த உள்ளடக்கங்கள் கொண்ட, பல அற்புதமான படங்களை வழங்கிய ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. நாங்கள் அனைவரும் பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தை தரும் நல்ல படைப்பை வழங்குவோம் என்று நம்புகிறோம்” என்றார்.
இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வீரமணி கலை இயக்கம் செய்கிறார்.



