பிரபல திரைப்பட நடிகை திருமதி ஆஷா பரேக் 2020-ம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருதுக்கு தேர்வாகியுள்ளார். இதனை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “இந்திய சினிமாவிற்கு திருமதி ஆஷா பரேக் வாழ்நாள் முழுவதும் மிகச்சிறந்த பங்களிப்பு செய்ததை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு தாதா சாஹேப் விருதுக்கான அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை அடைகிறேன்.
திருமதி ஆஷா போஸ்லே, திருமதி ஹேமமாலினி, திருமதி பூனம் தில்லான், திரு டி எஸ் நாகாபரணா, திரு உதித் நாராயண் உள்ளிட்ட ஐந்து உறுப்பினர் நடுவர் குழு திருமதி ஆஷாவுக்கு இந்த விருதினை வழங்கும் முடிவை மேற்கொண்டது.
2022 செப்டம்பர் 30 அன்று 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படும். குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு விழாவிற்கு தலைமை தாங்குவார்” என்றார்.
ஆஷா பரேக் பற்றி…
ஆஷா பரேக் புகழ்பெற்ற திரைப்பட நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் இவற்றுடன் இந்திய செவ்வியல் நடனக் கலைஞருமாவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், தில் தேக்கே தேக்கோ என்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியாக விளங்கினார். 95-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1992-ல் பரேக் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். 1998- முதல் 2001 வரை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் தலைவராக அவர் பணியாற்றியுள்ளார்.