அருண் பாண்டியன், அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் சவாலான வேடத்தில் நடித்திருக்கும், அறிமுக இயக்குநர் உதய் கே இயக்கியிருக்கும் ‘அஃகேனம்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய அருண் பாண்டியன், ”இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஏன் யாரையும் அழைக்கவில்லை என்றால் அவர்கள் இங்கு வருகை தந்து படத்தைப் பற்றி மிகையாக பேசி விடுவார்களோ என்பதற்காக தான்.
நாங்கள் எங்களுக்கு பிடித்தது போன்ற ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம். ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு ஏற்ற வகையில் தரமுள்ள படத்தை தயாரித்திருக்கிறோம். நீங்கள் கொடுக்கும் காசு வீணாகாது. ஏனெனில் திரைக்கதை அவ்வளவு வலிமையுடன் இருக்கிறது.
இந்த படத்தில் மூன்று சிறப்பம்சங்கள் இருக்கிறது. எல்லாரும் புது தொழில்நுட்ப கலைஞர்கள். கீர்த்தி சொன்ன பிறகு இந்த குழுவினருடன் கதையைக் கேட்டேன். எனக்கு பிடித்திருந்தது. அவர்களிடம் இந்த கதையில் சிறிதளவு இணைந்து பணியாற்ற வேண்டியது இருக்கும். உங்களுக்கு சம்மதமா? எனக் கேட்டேன். அவர்களும் சரியென சம்மதித்தார்கள்.
முதல் கட்ட படப்பிடிப்பு ஒரிசாவில் நடைபெற்ற போது அவர்களின் ஒருங்கிணைப்பு வியப்பை ஏற்படுத்தியது. நான் ஊமை விழிகள் படத்தில் பணியாற்றும்போது இருந்த ஆர்வம் இவர்களிடத்தில் தென்பட்டது. இதனால்தான் என்னுடைய குடும்பத்தார்களை விட இரண்டு வருடங்கள் இவர்களுடன் இணைந்து பணியாற்றினேன். இந்தப் படம் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றார்.
நடிகை கீர்த்தி பாண்டியன் பேசியபோது, ”நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் உதய் என்னை சந்தித்து படத்தின் கதையை சொன்னார். அதற்கு முன் அவர் இயக்கிய ‘யாக்கை திரி’ எனும் குறும்படத்தினை காண்பித்தார். அந்த குறும்படத்தை அவர் இயக்கியிருந்த விதம் அதன் தொழில்நுட்ப தரம் சிறப்பானதாக இருந்தது. அதை பார்த்தவுடன் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நினைத்தேன்.
அதைவிட ஆர்வத்துடன் அப்பா இந்த படத்திற்குள் வருகை தந்தார். ஒரு தயாரிப்பாளராக ஒரு நடிகராக இல்லாமல் அதையும் கடந்து இந்த படத்தின் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டினார். படத்தின் திரைக்கதை அவருடைய பெயரில் தான் இருக்கும்.
அப்பா ‘ஊமை விழிகள்’, ‘இணைந்த கைகள்: ஆகிய படங்களின் பணிகளில் ஈடுபட்டிருந்த போது நான் பிறக்கவில்லை. அவருடைய திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கூட்டத்துடன் இணைந்து எவ்வளவு ஆர்வத்துடன் பணியாற்றி இருப்பாரோ அதே அளவு ஆர்வமும் ஊக்கமும் இந்தப் படத்தின் பணிகளிலும் அவர் காட்டியதாக நான் உணர்ந்தேன்.
நான் இந்த படத்தில் நடிகையாக மட்டும் தான் பங்களிப்பு செய்திருக்கிறேன். நம்மைச் சுற்றி நிறைய விசயங்கள் நடைபெறுகிறது. விபத்து – போர்- இழப்பு – என ஏராளமான விசயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது மிகவும் டிஸ்டர்ப்பாக இருக்கிறது.
இந்த நேரத்தில் எனக்குள் ஒரு கேள்வி எப்போதும் எழுந்து கொண்டே இருக்கும். இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும்? நம்மால் என்ன செய்ய முடியும்? என மனதில் கேள்வி எழுந்துக் கொண்டிருக்கும். இதற்கு எனக்கு கிடைத்த ஒரே பதில்.. எனக்குத் தெரிந்த கலை மூலம், இதற்காக என்ன செய்ய முடியும் என்பது தான். ஒரு சிறிய அளவிலாவது பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். நான் தேர்ந்தெடுக்கும் கதைகளாக இருந்தாலும் சரி தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அந்த வகையில் தான் நான் நடித்து வருகிறேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறேன்.
இந்தத் திரைப்படம் பெண்களை மையப்படுத்திய படமல்ல. இது ஒரு படம். இந்த படத்தில் சில கேரக்டர்களுக்கு சில விசயங்கள் நடக்கிறது. அந்த சூழலை அந்த கதாபாத்திரம் எப்படி எதிர்கொள்கிறார்கள்? எப்படி கடந்து செல்கிறார்கள்? என்பதைத்தான் சொல்லியிருக்கிறோம். அது ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம். அதனால் இதனை பெண்களை மையப்படுத்திய படம் என்று வகைப்படுத்த வேண்டாம்.
இந்தப் படத்தில் வித்தியாசமான ஒலிகளும், ஓசைகளும் இருக்கிறது. இதற்காக இசையமைப்பாளர் பரத் வீரராகவனை வாழ்த்துகிறேன்.
படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக அப்பா எனக்கு எப்போதும் ஆதரவளித்துக் கொண்டிருக்கும் என்னுடைய ஹீரோ சூப்பர் ஹீரோ அப்பா தான்.
இந்தப் படத்தில் நான் இந்திரா எனும் வேடத்தில் ஒரு கேப் டிரைவராக நடித்திருக்கிறேன். எனக்கு டிரைவிங் மிகவும் பிடிக்கும். நடிகையாகி நடிக்க வராவிட்டால் நான் ஒரு கார் பந்தய வீராங்கனை ஆகியிருப்பேன்” என்றார்.
இயக்குநர் உதய்.கே பேசுகையில், ” இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பெண் கதாபாத்திரமாகட்டும் அல்லது இனி என் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களிலாகட்டும். பெண் கதாபாத்திரம் வலிமையாக இருக்கும் . இதற்கு என் அம்மா தான் காரணம்.
அம்மாவிற்கு அடுத்ததாக தயாரிப்பாளர் அருண் பாண்டியனுக்கு நான் நன்றி சொல்கிறேன். என்னை நம்பி என்னுடைய ஒட்டுமொத்த குழுவிற்கு வாய்ப்பளித்திருக்கிறார். இதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும்.
நான் குறும்படத்தை இயக்கி விட்டு நேரடியாக படத்தை இயக்க வந்தவன். பெரிய அனுபவம் எதுவும் இல்லை. அந்த தருணத்தில் 45 வருட கால அனுபவமுள்ள ஒருவருடன் இணைந்து பயணித்ததை எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக நினைக்கிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர், அவருடைய குடும்பத்தார்களை விட எங்களுடன் செலவழித்த நேரம் தான் அதிகம். அவரும் நாங்களும் இணைந்து தான் இப்படத்தினை உருவாக்கி இருக்கிறோம். நிச்சயமாக தரமான படமாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன்.
கீர்த்தியிடம் இருந்துதான் இந்தப் படத்தின் பணிகள் தொடங்கியது. அவர்களிடம் இந்த கதையை குறும்படமாகத்தான் விவரித்தேன். அதில் இந்திரா என்ற கதாபாத்திரம் தான் முக்கியமானது. நான் எதை மனதில் வைத்துக் கொண்டு கீர்த்தியிடம் அந்த இந்திரா கதாபாத்திரத்தை விவரித்தேனோ. அந்த இந்திராவாகத்தான் இந்த படத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார். படம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் அந்த இந்திரா கதாபாத்திரம் மனதில் நிற்கும்.
அருண் பாண்டியனின் வழிகாட்டலால்தான் இந்தப் படத்தை இந்த பட்ஜெட்டிற்குள் தரமாக உருவாக்க முடிந்தது.
அஃகேனம் என்ற டைட்டிலுக்கான காரணம் இதுதான். ஃ என்பது ஆயுத எழுத்தின் வார்த்தை வடிவம். அஃகேனம் என்றால் மூன்று புள்ளி. இதைத் தவிர்த்து இதற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது. அந்த மூன்று புள்ளி என்பது இப்படத்தில் இடம்பெறும் மூன்று கதாபாத்திரத்தினை பிரதிபலிக்கிறது. அந்த மூன்று முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் கதை என்பதால் இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். இதையே தயாரிப்பாளரிடமும் ஆலோசனையாக சொன்னோம். அவரும் இந்த டைட்டில் மீது நம்பிக்கை வைத்து அனுமதி அளித்தார். ஒரு சமயத்தில் இந்த டைட்டில் யாருக்கும் தெரியவில்லை என்றால் நாம் தெரியப்படுத்துவோம் என எங்களுக்கு ஊக்கமளித்தார். இந்தப் படம் வெளியான பிறகு இந்த வார்த்தையும் பிரபலமாகும் என நம்புகிறேன்.
ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு இந்த படம் ஏற்றதாக இருக்கும். ஒரு புது குழுவாக எங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து ஒரு படத்தை வழங்குகிறோம். ஜூலை நான்காம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
பாடலாசிரியர் கார்த்திக் நேதா, பாடலாசிரியர் மோகன் ராஜன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள். இந்த படம் வரும் ஜூலை மாதம் 4-ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



