Home விமர்சனம் படை தலைவன் சினிமா விமர்சனம்

படை தலைவன் சினிமா விமர்சனம்

யானைக்கும் மனிதனுக்குமான பாசப்பிணைப்பில் ஒருசில படங்கள் முன்பே வந்ததுண்டு. இது இப்போது…

சட்டி பானை செய்கிற வெள்ளைச்சாமி (கஸ்தூரி ராஜா) சொந்த மகனைப் போல் பாசம் காட்டி யானையொன்றை வளர்க்கிறார். அவரது மகன் வேலு (சண்முக பாண்டியன்) அந்த யானையை குழந்தைபோல் நேசிக்கிறார்.

ஒடிசாவில் ஒரு பிரமாண்ட காட்டுப் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அங்கு வசிக்கும் மக்களை அடிமையாக நடத்திக் கொண்டிருக்கும் கொடியவன் ஒருவன், தான் வணங்கும் வன பத்ரகாளிக்கு பலியிட வேலுவின் யானையை கடத்திக் கொண்டு போகிறான்.

இனி கதையை சொல்லாமலே வேலு அந்த யானையை தேடி ஒடிசாவுக்கு போவார், கொடியவனுடன் மோதுவார், அடிமை மக்களை மீட்பார் என்பதையெல்லாம் யூகித்துவிட முடியும். யூகித்த அத்தனையும் நடக்கிறது. எப்படி நடக்கிறது என்பதை பரபரப்பான காட்சிகளாக உருவாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் யு அன்பு.

வேலுவாக தே மு தி க அபிமானிகள் ‘சின்ன கேப்டன்’ என அழைக்கத் தொடங்கியிருக்கும் சண்முகபாண்டியன். ஏற்றிருப்பது காதல், டூயட், காமெடி கலாட்டாக்கள் என எதிலும் ஈடுபட வாய்ப்பில்லாத கதாபாத்திரம். யானை மீது பாசம் காட்டும்போது இதமாக நடந்துகொள்பவர், வில்லன்களை பந்தாடும்போது இடியாக மாறியிருக்கிறார். உயரமும் உடற்கட்டும் அசத்துகிறது. உருப்படியான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் தந்தை விஜயகாந்த் போல் மக்களைக் கவரலாம்.

காட்டை வளைத்துப் போட்டு, மக்களைக் கொடுமைப்படுத்தி, ஆடு மாடுகளைப் பலி கொடுத்து, நிறைவாக யானையை பலி கொடுக்கத் தயாராகும் டெரரான வில்லனாக கருடா ராம். ஆன்மிகத்தை தொட்டுக்கொண்டு செய்யும் அநியாய அராஜகங்களால் மிரட்டியிருக்கிறார்.

யானையை பிரியமாக வளர்ப்பது, பிரியும்போது மனம் உடைவது, உறவினரிடம் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமல் அவமானப்படுவது என தனக்கு கொடுக்கப்பட்ட கனமான காட்சிகளுக்கு கச்சிதமான நடிப்பால் நியாயம் செய்திருக்கிறார் கஸ்தூரி ராஜா.

ஹீரோவுடன் ஜோடி போடுகிற வேலையில்லாததால் ஹீரோயின் என்று சொல்ல முடியாது போனாலும், காட்டில் நடமாடும் மனித மிருகத்தை கொன்றழிக்க வேண்டும் என்ற வேகத்தோடு துடிப்பான பங்களிப்பைத் தந்து தனித்துத் தெரிகிறார் யாமினி சந்தர்.

வில்லனின் அடியாளாக ரிஷி ரித்விக், கேடுகெட்ட காட்டிலாக்கா அதிகாரியாக ஸ்ரீஜித் ரவி, முனிஷ்காந்த் உள்ளிட்டோர் அவ்வப்போது ‘உள்ளேன் ஐயா’ என்கிற அளவில் வந்துபோகிறார்கள்.

ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக ‘கேப்டன்’ விஜயகாந்த் ஒருசில நிமிடங்கள் காட்சி தருகிறபோது ரசிகர்கள் உற்சாகமடைகிறார்கள். அவரோடு இணைந்து அட்டனன்ஸ் போட்டிருக்கிறார் யூகிசேது.

அருள்தாஸுக்கு குறிப்பிடத்தக்க வேடம்; ஆனால், அவருக்கு யாரோ குரல் கொடுத்திருப்பதால் கவனம் பெறாமல் போகிறார்.

கால்நடை மருத்துவராக வருகிற ஏ வெங்கடேஷ் தான் ஏன் அந்த பணியைத் தேர்ந்தெடுத்தேன் என சொல்வது நெகிழ்ச்சி.

அப்புறம் அந்த யானை? அப்படியும் இப்படியும் நடமாடியிருப்பதை தவிர பெரிதாய் எந்த கடமையும் அதற்கில்லை.

இளையராஜா இசையில் கொண்டாடும்படி எதுவும் கிடைக்கவில்லை. பொட்டு வைத்த தங்கக்குடம் பாடல் லப்பர் பந்தில் பரவசம் தந்துவிட்டபடியால் இந்த படத்தில் சாதாரணமாக கடந்துபோகிறது.

பரந்த காடு, காட்டுக்குள் வன பத்ரகாளி கோயில், யானைகள் முகாம் என விரியும் கதை நிகழ்விடங்களை எஸ்.ஆர்.சதிஷ்குமாரின் கேமரா கண்கள் கைப்பற்றியிருக்கும் விதம் படத்தின் 75% பலம்.

சில மாதங்கள் முன் ‘பிக் பாஸ்’ ஆரவ் நடிப்பில் வெளிவந்த ‘ராஜபீமா’வில் எதிரிகள் யானையை மதம் பிடிக்க வைத்து தூக்கிக் கொண்டு போவார்கள்; அரசியல்வாதி ஒருவர் அதை பலியிட ஏற்பாடுகளைச் செய்வார். ஹீரோ ஓடிப்போய் காப்பாற்றுவார். அந்த படத்தைப் பார்த்தவர்கள் இந்த படத்தைப் பார்த்தால், இது அதன் மேம்படுத்தப்பட நகலாக தோன்றும்; படை தலைவனை ‘காப்பி’யத் தலைவன் என நினைக்க வைக்கும்.

உங்களிடமிருப்பது லாஜிக் பார்க்கும் மூளையாக இருந்தால் கம்னு கிட என அதட்டிவைத்தபின் படம் பார்ப்பது நல்லது. இல்லாவிட்டால் அது ஏன், இது ஏன், அது எப்படி, இது எப்படி என கேட்டு உங்களை படுத்தி எடுத்துவிடும்.

படை தலைவன் _ கதையம்சத்தால் பலம் குறைந்தவன்!

-சு.கணேஷ்குமார்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்