கடல் சார்ந்த கதைகளை ஏராளமாய் பார்த்திருக்கிறோம். இது கடல் தருகிற உப்பையும் அதை மையப்படுத்தி ஒரு கும்பல் செய்யும் தப்பையும் கலந்துகட்டிய படைப்பு.
கதைக்களம் நாகை மாவட்டம். உப்பு உற்பத்தி செய்கிற உப்பள தொழிலில் ஈடுபடுகிறவர்களிடமிருந்து உப்பு கடத்துவதை தொழிலாக செய்து வருகிறான் ரவுடிப் பேர்வழி கர்ணா. அவனை எதிர்ப்பவர்களை ஒழித்துக் கட்டுகிறான். இப்படியான சம்பவங்கள் பல காலமாக நடந்து வருகிறது.
ஒரு கட்டத்தில் கதைநாயகன் அழகின் தாய் மாமன், தான் உப்பளத்தில் உற்பத்தி செய்த உப்பை கர்ணாவை தவிர்த்து வேறொரு தரப்புக்கு விற்க முடிவெடுக்கிறான். கொந்தளிக்கும் கர்ணா தாய்மாமனின் மனைவியைக் கொல்கிறான். கர்ணாவின் அடியாட்கள் அழகின் தங்கையிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.
கதை இப்படி பரபரப்புக்கு தாவ, அழகு புயல் நேரத்துக் கடல் போல கொந்தளிக்கிறான். அந்த கொந்தளிப்பின் விளைவுகள் என்னென்ன என்பதே கதையின் மீதி.
கற்பழிப்புச் சம்பவம் பரபரப்பு கூட்டுவது, கருப்பு சாமி திருவிழா விறுவிறுப்பாக நடப்பது என திரைக்கதை சுறுசுறுப்பாக பயணிக்கிறது… இயக்கம் வான்யா
கதாநாயகன் அழகாக, அழகு பிரகாஷ். கிராமத்து இளைஞன் வேடத்துக்கு பொருத்தமான தோற்றத்தில் இருப்பவர், தனது சிறுவயதில் தன் தந்தையை கர்ணா கொலை செய்த தகவலறிந்து மனம் கலங்கி நிற்பது, கருப்பு சாமி அருள் தனக்குள் வந்தபின் எதிராளிகளை அரிவாளால் பழி தீர்ப்பது, கர்ணாவுடனான நேரடி மோதலில் தன் முழு பலத்தையும் காட்டி வீழ்த்துவது, அவனது கதையை முடிக்கும் பொறுப்பை கருப்பு சாமியிடம் ஒப்படைப்பது என தன் பங்களிப்பை பாராட்டும்படி செய்திருக்கிறார். காதல் உணர்வை வெளிப்படுத்துவதில் பாஸ்மார்க் கூட போட முடியாத முகபாவங்களுடன் முடித்துக் கொள்கிறார்.
அழகு பிரகாஷுக்கு ஜோடியாக வருகிற சுகன்யா அழகாகவும் பிரகாசமாகவும் இருக்கிறார். அவரது இதழ்களில் புன்சிரிப்பு நிலையாக ஒட்டிக் கொண்டது போலிருக்கிறது. சாந்தமான அந்த முகத்திலிருந்து கதைக்குத் தேவையான எக்ஸ்பிரஷன்கள் கணிசமாக கிடைத்திருக்கிறது.
ஒடுங்கிய முகமும் காற்றில் அலைபாயும் தாடி மீசையுமாக டெரராக இருக்கிறது கர்ணாவாக வருகிற வான்யாவின் கெட்டப். கடத்தல், அடிதடி, கொலை என குற்றச்செயல்களில் ஈடுபடும்போது காட்டும் வெறித்தனம் மிரட்டலாக இருக்கிறது. இவர்தான் படத்தையும் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.
தீபா சங்கருக்கு கணவனைப் பறிகொடுத்து அழுது அரற்றுகிற, கர்ணாவின் கும்பல் தன் மகன் உயிருக்கு குறிவைத்தபின் கலங்கித் தவிக்கிற, ஏற்கனவே பல படங்களில் பார்த்துப் பழகிய நடிப்பைக் கொடுத்தால் போதும் என்று சொல்கிற கதாபாத்திரம். அதை மனதில் வைத்து போதுமானதைக் கொடுத்திருக்கிறார்.
தாய்மாமாவாக வருகிற நிர்மல் மனைவியை இழந்து பரிதாப முகம் காட்டுவதும், கர்ணாவை தட்டிக் கேட்க அழகு பிரகாஷை தயார்படுத்துவதுமாய் தனது பணியை பக்குவமாக செய்திருக்கிறார்.
ஆரம்பக் காட்சியில் அயோக்கிய போலீஸ் அதிகாரி போல் என்ட்ரி கொடுக்கிற ரஞ்சன்குமார் ஹீரோவை துப்பாக்கி முனையில் மண்டிபோட வைத்து பேசும்போது அடடே என ஆச்சரியப்படுத்துகிறார்.
பிளாஷ்பேக் காட்சியில் ‘விக்ரம் வேதா’ விஜய் சத்யாவின் கம்பீரமான நடிப்புக்கு முக்கியப் பங்கிருக்கிறது. சுமதி, குபேரர், வதிலை வசந்தா, ஈசு, முத்துச் சிற்பி என இன்னபிற நடிகர்களின் நடிப்பு கதைக்கு பக்கபலம்.
‘வீரத்துல நாங்க சிங்கமடா’, ‘கடல் காத்து பாடும் பாட்டு’ பாடல்களை பரபரப்பான இசையிலும், ‘கருடா திருடா’ குத்துப்பாடலை குதூகலமான இசையிலும் தந்திருக்கும் ஜான் பீட்டர், ‘நில்லடி நில்லு கண்ணாடியே’ பாடலில் இளையராஜாவின் ஒருசில பாடல்களை நினைவூட்டுகிறார்.
கடலோரம், உப்பளம், சாலைகள், தெருக்கள், வயல் வெளிகள் என பாய்ந்தோடி மண்மணம் மாறாமல் பதிவு செய்திருக்கிறது ஒளிப்பதிவாளர் பி சாய்நந்தாவின் கேமரா.
கதைக்களம் சற்றே புதிதாக இருப்பதும், கதைநாயகன் வில்லனை பழிவாங்குகிற கதைதான் என்றாலும் அந்த பழிவாங்கல் வெவ்வேறு நபர்களால் நிறைவேற்றப்படுவதும் அதற்கு பாலமாக அவன் இருப்பதும் கதையின் தனித்துவம்.
மாபெரும் பொருட்செலவில் உருவாகிற, முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களே குறைகளின் குடோன்களாக இருக்க இந்த படத்திலிருக்கும் சில குறைகளைப் பொருட்படுத்தாமல் படத்தின் சிறப்பம்சங்களைப் பாராட்டி வரவேற்கலாம்.
ஆக்கிரமிப்பு – அநியாயங்களுக்கு நிச்சயம் உண்டு ஆப்பு!
-சு.கணேஷ்குமார்

