சில திரைப்படங்கள் அரம்பக் காட்சியிலேயே இந்த கதையில் ஏதோ பெரிதாக இருக்கப் போகிறது என்பதை உணர்த்திவிடும்.
கோர்ட் வளாகத்தில் பெரியவர் ஒருவர் தீக்குளித்து இறப்பதோடு தொடங்கும் இந்த இந்த தொடரின் ஆரம்பக் காட்சியும், கதையின் சம்பவங்களில் அதிர்ச்சி அணுகுண்டுகள் வெடிக்கப்போகின்றன என்பதை சொல்லிவிடுகிறது. அதன்படியே நடக்கிறது…
அதிர்ச்சி 1: பெரியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வது
அதிர்ச்சி 2: அவரது தற்கொலைக்கு காரணம், தன் மகள் காணாமல்போன தகவலை போலீஸில் சொல்லி, அவர்கள் அதை பொருட்படுத்தாமல் விட்டது
அதிர்ச்சி 3: அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர்
அதிர்ச்சி 4: அவருடைய மகள் காணாமல் போனது 20 வருடங்களுக்கு முன்பு
அதிர்ச்சி 5: காணாமல் போனவருக்கு என்னவானது என்பது
அதிர்ச்சி 6: விலைமாது ஒருவர் தன் அப்பாவை அடையாளம் தெரியாமல் தனது ரேட் 5000 என்று சொல்லி படுக்கைக்கு அழைப்பது
பெரியவர் இறந்ததைப் பார்த்து மனம் கலங்கிய வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி (பருத்தி வீரன் சரவணன்) அவரது முடிவுக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து வெளியுலகத்துக்கு சொல்ல நினைக்கிறார். பொது நல வழக்கு போடுகிறார்.
பெரியவர் யார் என்பது தெரியாது, அவரது முகவரி தெரியாது, அவரது மகள் யார் என்பது தெரியாது, அவளுக்கு என்னவானது என்பது தெரியாது. ஒன்றுமே தெரியாமல் போட்ட வழக்கு கோர்ட்டில் என்னவிதமான விளைவுகளை உருவாக்குகிறது, எதையெல்லாம் ஊர் உலகத்துக்கு எடுத்துச் சொல்கிறது என்பது பாலாஜி செல்வராஜ் இயக்கியிருக்கும் இந்த இணைய தொடரின் திரைக்கதை.
வழக்குகளை எடுத்துக்கொண்டு கோர்ட்டுக்குள் வாதாடுகிற வழக்கறிஞராக இல்லாமல், கோர்ட்டுக்கு வெளியிலிருந்து சட்ட ஆவணங்களுக்கு கையெழுத்திடும் பணியைச் செய்கிற நோட்டரி பப்ளிக்’காக பருத்தி வீரன் சரவணன். அவர் அப்படி இருப்பதால் கேலி கிண்டல்களைச் சந்திப்பது, பொதுநல வழக்கு போட்டபின் கோர்ட்டுக்குள் கம்பீரமாக வாதங்களை எடுத்து வைப்பது, தன் வாதங்கள் எடுபடாமல் போனபோது மயங்கி விழுவது, வழக்குக்கு தேவையான ஆதாரங்களை சிரமப்பட்டு சேகரிப்பது என காட்சிக்கு காட்சி இயல்புக்கு துளியும் அதிகரிக்காத நடிப்பை வழங்கி நிறைவு செய்கிறார்.
சரவணனிடம் பயிற்சி பெறும் வழக்கறிஞராக அழகும் இளமையும் சரிசமமாக கலந்திருக்கிற நம்ரிதா. எடுத்துக் கொண்ட வழக்கில் ஜெயித்தே தீர வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆதாரங்களை திரட்டுவதற்காக அலைந்து திரிவதில் காட்டும் சுறுசுறுப்பு அசத்துகிறது.
அரசு தரப்பு வழக்கறிஞராக அருள் டி சங்கரின் நடிப்பில் போதுமான கம்பீரம் தெரிகிறது.
திருச்செல்வம், விஜய்ஸ்ரீ, இனியா ராம், மை சிக்ஸர் விஜய் அனந்த், தற்கொலை செய்து கொள்கிற பெரியவராக சண்முகம் என இன்னபிறரின் நடிப்பு நிறைவு.
அலட்டலற்ற கிரைம் திரில்லர் கதைக்கேற்ற பின்னணி இசையைத் தந்திருக்கிறார் விபின் பாஸ்கர். எஸ்.கோகுல கிருஷ்ணனின் ஒளிப்பதிவு நேர்த்தி.
அழுத்தமான, திருப்பங்கள் நிறைந்த, பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த தொடரின் நீதிமன்ற விவாதங்கள் வளவள கொழகொழ என்றில்லாமல் நறுக் சுறுக்’காக இருப்பதால் சலிப்பில்லாமல் பார்க்க முடிகிறது.
சட்டமும் நீதியும் _ உண்மை உறங்கும்; உயிரை விட்டுவிடாது!
-சு.கணேஷ்குமார்


