இந்த படத்திற்கு ரிப்பீட்டட் ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவார்கள்! -அந்தகன் சிறப்பு முன்னோட்ட வெளியீட்டு விழாவில் இயக்குநர் தியாகராஜன் உறுதி

‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக நடிக்க, தியாகராஜன் இயக்கியுள்ள ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.

நிகழ்வில் இயக்குநர் தியாகராஜன் பேசியபோது, ”பிரசாந்த் – பியானோ வாசிக்கும் கலைஞர். இந்தத் திரைப்படத்தை வாங்குவதற்கு முக்கிய காரணமே கதையின் நாயகன் பியானோ இசைக்கலைஞர் என்பதால் தான். நான் இந்த திரைப்படத்தின் உரிமையை வாங்கி ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நடிகர்கள் யார் என்பதனை நிதானமாக யோசித்து தேர்வு செய்ய தொடங்கினேன். அதன் பிறகு படத்தின் பணிகளை தொடங்கினோம். இடையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் இரண்டு ஆண்டுகள் சென்றன. அதன் பிறகு எதிர்பாராத சில சிக்கல்கள் ஏற்பட்டது. அதன் பிறகு படத்தை நிறைவு செய்தோம். அதனைத் தொடர்ந்து பிரபுதேவாவை வைத்து ஒரு பாடலை உருவாக்க திட்டமிட்டோம். பிரபுதேவா அதற்கான காட்சிகளை உருவாக்க சாண்டி மாஸ்டர் நடனத்தை அமைத்தார். அந்தப் பாடலை அனிருத்-விஜய் சேதுபதி பாடினர், விஜய் வெளியிட்டார். இப்பாடல் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.‌ இந்தப் பாடலில் பிரசாந்தின் நடனத்தை பலரும் நடனமாடி இணையத்தில் பதிவேற்றி வருகிறார்கள்.

இந்தப் படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக பயணித்த போது பிரசாந்தின் ரசிகர் ஒருவர் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். இதனால் பிரசாந்த் மனவருத்தம் அடைந்தார். உடனே இது தொடர்பாக தமிழகம் முழுவதும் வாகனத்தில் பயணிக்கும் போது தலைகவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏன் ஏற்படுத்தக் கூடாது என சிந்தித்தார். அத்துடன் நில்லாமல் பிரசாந்தின் பிறந்த நாளின் போது தமிழகம் முழுவதும் 5000 தலை கவசங்களை அவரது ரசிகர்களுக்கு வழங்கினார்.

சமுத்திரக்கனி ஆக்ஷன் என்று சொல்லிவிட்டால், நடிப்பில் சிங்கம் தான். இந்த படத்தில் அவர் மிரட்டி இருக்கிறார் அதிலும் சிம்ரனை மிரட்டி இருக்கிறார். வனிதா விஜயகுமாரை மிரட்டி இருக்கிறார்.

அந்த குறிப்பிட்ட காட்சியில் எமோஷன் வேண்டும் என்பதற்காகத்தான் வனிதாவை அழைத்து, ‘உனக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளால் திட்டு’ என சொன்னேன். அந்தத் தருணத்தில் சொல்லத் தகாத வார்த்தைகளை எல்லாம் பேசினார்.‌ இந்தப் படத்தில் வனிதா விஜயகுமாருக்கு குறிப்பிடத்தக்க அளவிலான அங்கீகாரம் கிடைக்கும்.

பிரியா ஆனந்த் அழகான தமிழ் பெண். தமிழ்த் திரையுலகில் பயன்படுத்தவில்லை என்று என்னிடம் சொன்னார். ஆனால் அவர் இங்கு பேசியதெல்லாம் ஆங்கிலத்தில் தான். அதனால் தான் சொல்கிறேன். இனி எந்த நிகழ்வில் கலந்து கொண்டாலும் ஆங்கிலத்தில் பேசு. அப்போதுதான் தமிழ் பெண் என தெரியும்.

இந்தப் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு யாரை தேர்வு செய்வது என்பது குழப்பமாக இருந்தது.‌ அப்போது என்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த பிரியா ஆனந்த் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று தேர்வு செய்தேன்.

முன்னோட்டத்திலும் அவர் அழகாக இருக்கிறார். நடனமாடி இருக்கிறார். தேர்ந்த நடிப்பையும் வழங்கி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் அவருக்கும் பெரிய அங்கீகாரம் கிடைக்கும். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

சிம்ரன், பிரசாந்துடன் இதற்கு முன் ஆறு படங்கள் நடித்திருக்கிறார். இந்த படத்தின் உரிமையை வாங்கிய பிறகு ஏன் இந்த படத்தில் சிம்ரனை நடிக்க வைக்க கூடாது என யோசித்தேன். இது தொடர்பாக நான் அவரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, நான் இந்தி படத்தை பார்த்து விட்டேன். அதனால் நான் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். இந்தப் படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அனுபவமிக்க நடிப்பை வழங்கி இருக்கிறார்.

இந்தப் படத்தில் அவர் சற்று உணர்ச்சி மிகுந்த தொனியில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஏன் இப்படி நடிக்க வேண்டும் என கேட்டார். அப்போது இந்த கதாபாத்திரம் எப்படி நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று நான் சொன்னேன். அதை ஏற்றுக் கொண்டு அவர் ஆக்ரோஷமாக நடித்தார். அவருடைய பேச்சு, வன்முறை எல்லாம் ஒரு ஆணை போல் இருக்கும்.‌ படம் வெளியான பிறகு சிம்ரனுக்கு விருது கிடைக்கும். இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவரையும் விட சிம்ரனுக்கு சிறப்பான பெயரும், புகழும் கிடைக்கும்.

கே. எஸ். ரவிக்குமார் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் சட்டிலான வில்லனிக் கேரக்டரில் நடித்திருப்பார்.

இந்தப் படத்தில் ஒவ்வொரு போர்ஷனுக்கும் ஒரு சஸ்பென்ஸ் இருக்கும். பிறகு மற்றொரு சஸ்பென்ஸ் வரும். இதையெல்லாம் கடந்து என்ன நடக்கிறது? என்ன ஆச்சு? இது உண்மையா? பொய்யா? என பல கேள்விகள் ரசிகர்களிடத்தில் எழும்.

நானே அந்த இந்தி படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன். அதே போன்றதொரு உணர்வு தமிழ் திரைப்படத்தை பார்க்கும் போதும் ரசிகர்களுக்கு வரும். அதனால் இந்த திரைப்படத்திற்கு ரிப்பீட்டட் ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவார்கள்.

பெசன்ட் ரவி- பிரசாந்த் நடிக்கும் படத்தில் அவர் இருக்க வேண்டும் என விரும்புவேன். இந்த திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஊர்வசி- என்னுடன் ‘கொம்பேறி மூக்கன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். நான் தயாரித்து பிரசாந்த் நடித்த ‘மன்னவா’ படத்திலும் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று சொன்னேன். சொன்னவுடன் வந்து நடித்துக் கொடுத்தார். அவரும், யோகி பாபுவும், கே.எஸ். ரவிகுமாரும், பிரசாந்த்தும் இணைந்து தோன்றும் காட்சிகள் அனைத்தும் சிறப்பானதாக இருக்கும். சுவாரசியமானதாகவும் இருக்கும்.

மனோபாலா, ஜெயம் கோபி, விஜேந்தர், பூவையார், லீலா சாம்சன் என பலரும் நடித்திருக்கிறார்கள்.

‘அந்தகன்’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுவே எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்களிடையே ஆரோக்கியமான பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை நானூறு திரையரங்குகளில் ‘அந்தகன்’ திரைப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளோம். இதற்கும் கூடுதலாக வெளியிடுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் விருப்பமுடன் இருக்கிறார்கள்.‌ ‌இது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை என கருதுகிறேன்.

இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகர் பிரசாந்த் பேசுகையில், ”அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள். மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

‘அந்தகன்’ அருமையான படைப்பு.‌ இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்.‌ திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அனைவருடனும் மறக்க இயலாத அனுபவம் இருக்கிறது.

இதில் ஐயா கனி சாரை மறக்க முடியாது. அவரை நான் ஐயா என்று தான் அழைப்பேன். அவரையும் சசிகுமாரையும் அலுவலகத்தில் இருக்கும் போது நான் நேரில் சென்று சந்தித்து இருக்கிறேன்.‌ அந்தத் தருணத்திலிருந்து இருவரையும் பின் தொடர்கிறேன்.

இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய தேர்வு நடைபெறும் போது இயக்குநரின் பட்டியலில் கனி ஐயாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது.‌ அதன் பிறகு இயக்குநர் கனி சாருடன் பேசினார். அவரும் ஒப்புக்கொண்டு படப்பிடிப்புக்கு வருகை தந்தார். அவர் ஒரு நேர்த்தியான தொழில்முறை நடிகர்.‌

இந்தப் படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டவுடன், ‘எனக்கு மூன்று வார கால அவகாசம் கொடுங்கள். நான் தற்போது ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன் அதனை நிறைவு செய்துவிட்டு, உங்கள் படத்தில் நடிக்கிறேன்’ என்றார். அதன் பிறகு அவர் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். இப்படி ஒரு தீவிர பற்றுள்ள நடிகரா என நான் அவரை வியந்து பார்த்தேன்.‌

நான் ஒவ்வொரு நேர்காணலிலும் தவறாது குறிப்பிடும் விஷயம் ஒவ்வொரு படப்பிடிப்பின் போதும் ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வேன், கற்றுக் கொண்டே இருக்கிறேன் எனக் குறிப்பிடுவேன். அந்த வகையில் சமுத்திரக்கனி ஐயாவிடமிருந்து நடிப்பின் மீதான தொழில்முறையிலான பெரு விருப்பத்தை கற்றுக் கொண்டேன்.‌

இந்தப் படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக நான், சிம்ரன், பிரியா, பெசன்ட் ரவி ஆகியோர் இணைந்து பயணித்தோம்.‌ அப்போது என் போனில் ஒரு குரல் ஒலித்தது.‌ எங்கே இருக்கிறீர்கள் எனக் கேட்டார்.‌ நாங்கள் இந்த ஊரில் இருக்கிறோம் என சொன்னேன் நீங்கள் மட்டும் ஏன் தனியாக பயணிக்கிறீர்கள் நானும் உங்களுடன் இணைகிறேன் என சொன்னார் அந்த குரலுக்கு சொந்தக்காரர் சமுத்திரக்கனி. அவருக்கு இந்த தருணத்தில் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இந்த ஆதரவிற்காகவும்,, எங்கள் மீது அன்பு செலுத்துவதற்காகவும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நானும் சிம்ரனும் இதுவரை ஆறு படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். திரையுலகில் எனக்கு கிடைத்த அற்புதமான சக நடிகை. எனக்கு உற்ற நண்பி. அற்புதமான நடனக் கலைஞர். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.‌ என்னுடைய கதாபாத்திரத்திற்கும் அவருடைய கதாபாத்திரத்திற்கும் நிறைய முரண்கள் இருக்கும். அதை நீங்கள் திரையில் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள்.‌

இந்தப் படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும். இதுதான் இந்த படத்தில் சிறப்பம்சம் எனக் குறிப்பிடலாம். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் நடிகர்கள் திறமையாக நடித்திருப்பார்கள். இதை ரசிகர்கள் திரையரங்கில் பார்க்கும் போது நல்லதொரு அனுபவம் கிடைக்கும்.

பிரியா ஆனந்த்- திறமையான சக நடிகை படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் உற்சாகமாக வைத்திருப்பார். படப்பிடிப்பு தளம் முழுவதும் மகிழ்ச்சியை பரவச் செய்வார்.

வனிதா விஜயகுமார்- என் உடன் பிறந்த சகோதரி போன்றவர். எப்போதுமே உற்சாகமாக இருப்பார். இந்த படத்தை எப்படி எல்லாம் விளம்பரப் படுத்த வேண்டும் என்பதில் நிறைய ஆலோசனைகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.‌ அவர் இந்த படத்தில் நடித்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.‌

நடிகர்களை கடந்து ஒளிப்பதிவாளர் ரவி யாதவ், கலை இயக்குநர் செந்தில் ராகவன்… இருவரும் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் அமைதியாகவே இருப்பார்கள் ஆனால் அவர்களது செயல் பேசும்.

யோகி பாபு, மோகன் வைத்யா, ஊர்வசி என பலருடன் இணைந்து நடித்த அனுபவம் மறக்க முடியாதது.‌

அருமையான மனிதரை இந்த படத்தில் சந்தித்தேன்.‌ அவர் என்னுடைய இன்ஸ்பிரேஷன். முழு படத்தையும் அவர்தான் உயர்த்தி பிடித்திருக்கிறார்.‌ அவர்தான் கார்த்திக். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்கிறேன்.‌ அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதற்கும், படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பழகியதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.‌ படப்பிடிப்பு தளத்தில் அவர் வருகை தந்தாலே உற்சாகம் பீறிடும். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.

நான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி. இந்த நண்பர்கள் தினத்தின் எனக்கு கிடைத்த மிகச்சிறந்த நண்பர் என்னுடைய தந்தையார் தியாகராஜன்.‌ மிகச் சிறந்த மனிதர். தயாரிப்பாளர் சாந்தி தியாகராஜனுக்கும், எனது தங்கை பிரீத்தி தியாகராஜனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ரசிகர்களுக்கு இந்தத் திரைப்படம் புதிய அனுபவத்தை வழங்கும், அனைவரும் வருகை தந்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகை சிம்ரன், ”பிரசாந்த்துடன் நான் நடிக்கும் ஏழாவது திரைப்படம் இது. மற்றொரு பிளாக்பஸ்டர் வெற்றிக்காக காத்திருக்கிறேன்” என்றார்.

நடிகர் சமுத்திரக்கனி, படப்பிடிப்பு தளத்தில் வனிதா விஜயகுமார் இதுவரை யாரும் என்னை திட்டிராத வகையில் கெட்ட வார்த்தையால் திட்டினார்.  நான் இயக்குநரை பார்க்கிறேன்.  அதன் பிறகு வனிதா விஜயகுமார் யக்குநர் தான் உங்களை இப்படி எல்லாம் திட்ட சொன்னார் என தியாகராஜனை கை காட்டினார்” என்றார்.

நடிகை வனிதா விஜயகுமார், ‘அந்தகன்’ இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும். நானும் இந்த திரைப்படத்தை ரசிகர்களுடன் திரையரங்கத்தில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

நடிகை பிரியா ஆனந்த், ”படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர் என மூன்று நாட்கள் பயணித்தோம். மிகவும் சந்தோஷமாக இருந்தது. படம் நிச்சயமாக வெற்றி பெறும். வெற்றி விழாவில் சந்திப்போம்” என்றார்.

நிகழ்வில் கே. எஸ். ரவிக்குமார், நடன இயக்குநர் கலா உள்ளிட்டோரும் பேசினார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here