ஆஸ்திரேலியாவின் கடல் எல்லைக் கட்டளை கமாண்டர் ஜஸ்டின் ஜோன்ஸ் இந்தியாவில் (அக்டோபர் 14 முதல் 20 வரை) பயணம் மேற்கொண்டார். டெல்லியில் நடந்த ஆசிய கடலோர காவல்படை அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில் (HACGAM) பங்கேற்றார்.
அப்போது, ஜஸ்டின் ஜோன்ஸ் கடல் வழியிலான சட்டபூர்வமான வர்த்தகம் மற்றும் பயணத்தை எளிதாக்குவதற்கும், கடல்சார் குற்றங்களைத் தடுப்பதில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் உதவும் வகையிலான நல்லுறவுகளை ஆஸ்திரேலியா எவ்வாறு மதிக்கிறது என்கிற விவரங்களை எடுத்துச் சொன்னார்.
அதையடுத்து தமிழ்நாட்டின் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ்,
”கடலில் நடைபெறும் குற்றங்களை எதிர்த்துப் போராடி அவற்றைத் தடுப்பதற்கு அனைத்து நாடுகளுடனும் நெருக்கமாக பணியாற்றுவதில் ஆஸ்திரேலியா உறுதியாக இருக்கிறது. ஆள் கடத்தல் மூலமாக பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பற்றியும் அவர்களது வாழ்க்கை மற்றும் அவர்களது நலனிலும் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு, எந்த அக்கறையும் இல்லை. இது போன்ற குற்றங்களைத் தடுப்பதில் ஆஸ்திரேலியா அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.
ஆஸ்திரேலியா சமீபகாலமாக சிவில் கடல்சார் பாதுகாப்பில் இலங்கையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடல்வழி ஆள் கடத்தல் முயற்சிகளைத் தடுக்க இலங்கை கடற்படை அயராது உழைத்ததால் கடத்தல் மூலமாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற 183 பேரை ஆஸ்திரேலியா பாதுகாப்பாக திருப்பி அனுப்பியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் அரசு மாறியிருந்தாலும், ஆள் மற்றும் மக்கள் கடத்தலுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் வலுவான கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை.
ஆஸ்திரேலியாவை சட்ட விரோதமாக கடல்வழியாக அடைய விரும்பும் கப்பல்களை நாங்கள் தடுத்து நிறுத்துகிறோம். கப்பலில் உள்ளவர்களை அவர்கள் புறப்படும் இடம் அல்லது சொந்த நாட்டிற்குப் பாதுகாப்பாக திருப்பி அனுப்புகிறோம்.
சமீபத்தில் கேரளாவில் இருந்து படகு மூலமாகச் சட்டவிரோதமாக இடம்பெயர முயன்ற பலர் கைது செய்யப்பட்டதை நாங்கள் அறிவோம். நபர்களை கடத்தும் குற்றவியல் வர்த்தகத்தை தடுப்பதற்கான மிக முக்கிய நடவடிக்கையை எடுத்ததற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நான் பாராட்டுகிறேன்.
கடல்சார் பாதுகாப்பு சவால்களில் எங்கள் நட்பு நாடுகளுடன் ஆழமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் நான் உறுதியுடன் இருக்கிறேன்” என்றார்.
ஜஸ்டின் ஜோன்ஸ் (Justin Jones) பதவி விவரம்:
ஆஸ்திரேலியாவின் கடல் எல்லைக் கட்டளை கமாண்டர் / கமாண்டர் ஜாயின்ட் ஏஜென்சி டாஸ்க் ஃபோர்ஸ் (Commander Maritime Border Command / Commander Joint Agency Task Force (COMMBC / CJATF), இறையாண்மை செயல் எல்லைப் பிரிவு அதிகாரி (Operation Sovereign Borders), ராயல் ஆஸ்திரேலியன் நேவி (RAN).

