சிறுநீரக விழிப்புணர்வுக்காக AINU நடத்திய ஓட்ட நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு! தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர், தென்சென்னை – வடசென்னை எம்பி.க்கள் கலந்துகொண்டு பரிசளிப்பு!

நமது உடலின் முக்கிய உறுப்புகளுள் ஒன்றான சிறுநீரகத்தை ஆரோக்கியமாக பேணி பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு, சென்னையிலிருக்கிற AINU மருத்துவமனை பொதுமக்கள் கலந்துகொள்கிற 5 கி.மீ. ஓட்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தது.மார்ச் 9-ம் தேதியன்று உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி முன்னதாக இன்று நடந்த ஓட்ட நிகழ்வில், சிறுநீரக உடல்நல விழிப்புணர்வு திட்டத்தை ஆதரிப்பதற்காக உடற்தகுதி ஆர்வலர்கள், தொழில்முறை ஓட்ட வீரர்கள், பெருநிறுவனங்களின் பணியாளர்கள், மாணவர்கள், குடும்ப பெண்கள் உட்பட, 1000-க்கும் அதிகமான பொதுமக்கள் இந்நிகழ்வில் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.

சிறுநீரக ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் எடுத்துக்கூறி கற்பிப்பதும், அதுகுறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும் உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுவதன் நோக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமையன்று உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில், இந்த ஆண்டு மார்ச் 9-ம் தேதியன்று, உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக சிறுநீரக தினத்தின் கருப்பொருளாக, “அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியம் -எதிர்பாரா நிகழ்விற்கு தயார் செய்வது, பாதிப்பிற்கு ஆளாகக்கூடிய நபர்களுக்கு ஆதரவளிப்பது என்ற கருத்தாக்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.நமது உடலிலிருந்து கழிவுகளையும், தேவைக்கும் அதிகமான திரவங்களையும் வடிகட்டி வெளியேற்றும் மிக முக்கிய உறுப்புகளாக சிறுநீரகங்கள் செயல்படுகின்றன. இரத்த அழுத்தத்தை ஒழுங்குமுறைப்படுத்தும் பணியையும் கொண்டிருக்கும் சிறுநீரகங்கள், ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன மற்றும் மின்அயனிகளின் (எலெக்ரோலைட்ஸ்) ஆரோக்கியமான சமநிலையை பேணுகின்றன. சிறுநீரக நோய்கள் இந்தியாவில் இலட்சக்கணக்கான நபர்களை பாதிக்கின்ற தீவிரமான உடல்நல பிரச்சனையாக இருக்கிறது. நாட்பட்ட சிறுநீரக நோய்கள் (CKD) என்பது, அறிகுறி வெளிப்படாத ஒரு பாதிப்பு நிலையாக இருக்கிறது. ஆரம்ப நிலையிலேயே அதனை கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில், சிறுநீரக செயலிழப்பு என்ற பேராபத்திற்கு இது வழிவகுத்து விடும். சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான சில இடர் காரணிகளுள் அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு, உடற்பருமன், புகைப்பிடித்தல் மற்றும் சிறுநீரக நோய் குடும்பத்தில் பிறருக்கு இருந்த வரலாறு ஆகியவையும் உள்ளடங்கும்.

சிறுநீரக நோய் வருவதற்கான இடர்காரணிகள் மற்றும் வாய்ப்புகள் பற்றி மக்களுக்கு எடுத்துக்கூறுவதுடன், அந்நோய் பாதிப்பு வராமல் எப்படி தடுப்பது மற்றும் பாதிப்பு ஏற்பட்டிருக்குமானால், சிறுநீரக நோயை எப்படி மேலாண்மை செய்வது என்பது பற்றி கற்பிப்பதை நோக்கமாக கொண்டே சிறுநீரக ஆரோக்கிய விழிப்புணர்வு ஓட்ட நிகழ்வை AINU மருத்துவமனை நடத்தியது. சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும் என்ற கருத்தை முன்னிலைப்படுத்துவதாக இந்த விழிப்புணர்வு ஓட்ட நிகழ்வு அமைந்தது.

சென்னையிலுள்ள ஏஷியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்டு நியூராலஜி (AINU) மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர். அருண் குமார் பாலகிருஷ்ணன் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். சென்னையிலுள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்த பிறகு இவர், யுனைட்டட் கிங்டம் – ல் சிறுநீரக புற்றுநோயியல் துறையில் ஃபெல்லோஷிப் படிப்பை மேற்கொண்டார். சிறுநீரக பாதையியல், ரோபோட்டிக் அறுவைசிகிச்சை மற்றும் சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சை ஆகியவற்றின் மீது சிறப்பு நிபுணத்துவம் கொண்ட டாக்டர். பாலகிருஷ்ணன் சென்னையில், முதுநிலை சிறப்பு நிபுணராக விரிவான அனுபவத்தைக் கொண்டு மருத்துவ சேவையாற்றி வருகிறார். சிறுநீர் பாதையியல் தொடர்பான பல்வேறு சங்கங்களிலும், அமைப்புகளிலும் உறுப்பினராக இருக்கும் இவர், தனது பணி மற்றும் ஆராய்ச்சியின் வழியாக இத்துறையில் மேம்பாடுகளை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, தீவிரமாகவும், அர்ப்பணிப்போடும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். இவரது சிறப்பான கல்வித்தகுதி மற்றும் நிபுணத்துவத்தினால் மருத்துவ சமூகத்தில் பெரிதும் மதிக்கப்படும் டாக்டர். பாலகிருஷ்ணன் தனது நோயாளிகளுக்கு சாத்தியமுள்ள சிறந்த சிகிச்சை பராமரிப்பை வழங்குவதை தனது வாழ்நாள் நோக்கமாகக் கொண்டிருக்கிறார். AINU சிறுநீரக விழிப்புணர்வு ஓட்டம் குறித்துப் பேசிய அவர், “சிறுநீரக ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை அதிகரிக்க இந்த 5 கி.மீ. ஓட்ட நிகழ்வு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதரவளிக்கும் நிகழ்ச்சியாகவும் இது நடத்தப்பட்டது. நாட்பட்ட சிறுநீரக நோய்கள் இருக்கின்ற 10 நபர்களுள் ஏறக்குறைய 9 நபர்களுக்கு இப்பாதிப்பு இருக்கிறது என்று பெரும்பாலானோர் அறிவதில்லை. மற்றும் தீவிர சிறுநீரக பாதிப்பு உள்ள 5 நபர்களுள் 2 நபர்கள் மட்டுமே நோயின் தீவிரத்தை அறிந்திருக்கின்றனர் என்று ஆய்வு தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த சிறப்பான முயற்சியில் பங்கேற்றிருக்கும் நீங்கள் அனைவரும் சிறுநீரக நோய்க்கான இடர்க்காரணிகள் பற்றிய செய்தியினை பரப்பவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை முன்னிலைப்படுத்தவும் எங்களுக்கு உதவியிருக்கிறீர்கள். சிறுநீரக நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறியவும் மற்றும் அதற்கு சிகிச்சைப் பெறவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை தந்து ஊக்குவிக்க உங்களது பங்கு நிச்சயம் உதவும். சிறுநீரக நோய்களைப் பொறுத்தவரை ஆரம்ப நிலை கண்டறிதல் மற்றும் சிகிச்சை என்பது மிக அத்தியாவசியமான தேவையாக இருக்கிறது.”

தமிழ்நாடு மாநிலத்தின் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் அவர்கள், சிறுநீரக விழிப்புணர்விற்கான 5 கி.மீ. ஓட்ட நிகழ்வை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடங்கி வைப்பதற்கு முன்பு அவர் ஆற்றிய உரையில், “சிறுநீரக ஆரோக்கியத்தை வலியுறுத்தி ஊக்குவிப்பதற்கு இந்த முன்னெடுப்பு நடவடிக்கை மிக முக்கியமானது. சிறுநீரக நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சையளிப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்க இந்நிகழ்வு நிச்சயம் உதவும். சிறுநீரக நோய் என்பது, தீவிரமான உடல்நல பிரச்சனை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே, சமுதாயத்தையே முடக்கிப்போடுகின்ற பொது சுகாதார நெருக்கடி நிலையாக இது உருவெடுக்காமல் தடுப்பதற்கு மருத்துவப் பணியாளர்களோடு பொதுமக்களாகிய நாம் அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியம். இதுபோன்ற முன்னெடுப்புகளின் வழியாக, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை, வாழ்க்கையில் பின்பற்றுமாறும், உரிய காலஅளவுகளில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறும் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தன்முனைப்பு நடவடிக்கையை எடுக்கவும் மக்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். இந்த நேர்த்தியான முன்னெடுப்பு நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதில் பங்களிப்பை வழங்கியிருக்கின்ற அனைவரையும் நான் மனமார பாராட்டுகிறேன். நமது சமூகத்தின் மீது இந்நிகழ்வு நேர்மறையான தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here