தமிழர் பாரம்பரிய கலைகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வரும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் நிகழ்வு ஒன்று சென்னையில் நடைபெற்றது.
குரோம்பேட்டை பச்சைமலை விளையாட்டுத் திடலில், தமிழ்க்குடிமகன் தலைமையில் புதிய விதைகள் இயக்கம் மூலம் குழந்தைகளுக்கு இலவசமாக சிலம்பாட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சியின் மூலம் உருவான மாணவர்கள் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மொத்தம் 32 மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், 20 மாணவர்கள் தங்கப் பதக்கமும், 10 மாணவர்கள் வெள்ளிப் பதக்கமும், ஒரு மாணவர் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த வெற்றி, தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளின் திறமையையும், குழந்தைகளின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
இந்த வெற்றி பெற்ற மாணவர்களை, தூத்துக்குடி MLA ஶ்ரீநாத் நேரில் சந்தித்து பாராட்டினார். மேலும், முதலமைச்சர் விஜய் அவர்களின் நண்பரான மனோஜ் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் திரைப்பட தயாரிப்பாளர் புவனேஷ் மற்றும் A.R. பிரபு உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதுகுறித்து பேசிய தூத்துக்குடி தவெக MLA ஶ்ரீநாத்,
“குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வார்கள். தேர்தல் நேரத்தில் வீடு வீடாக சென்று எங்களுக்கு ஆதரவு திரட்டியதும் குழந்தைகள்தான். அவர்களுக்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். குழந்தைகளின் வளர்ச்சிக்கும், அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கும் தவெக எப்போதும் கூடுதல் கவனம் செலுத்தும். தமிழர் பாரம்பரியமான சிலம்பாட்டத்தை குழந்தைகளிடம் கொண்டு சென்று, தேசிய அளவிலான வெற்றியை பெறச் செய்த தமிழ்க்குடிமகன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். தவெக சார்பிலும், தலைவர் முதலமைச்சர் விஜய் அவர்களின் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்,” என்று தெரிவித்தார்.
தமிழர் கலாச்சாரத்தையும், இளம் தலைமுறையின் திறமைகளையும் முன்னிறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, தவெக மற்றும் தமிழக அரசின் குழந்தைகள் நலன் மற்றும் பாரம்பரிய கலைகளின் மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.
