கண் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சையளித்து வருகிற டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, கண் அழுத்த நோய் (கிளாக்கோமா) குறித்தும் அதற்கான சிகிச்சை குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மனிதச்சங்கிலி நடைப்பயண நிகழ்வை மார்ச் 11; 2023 அன்று நடத்தியது.
உலக கண் அழுத்த நோய் வாரம் (மார்ச் 12-18, 2023) அனுசரிப்பு நிகழ்வையொட்டி சென்னையில் மேற்குறிப்பிட்ட நிகழ்வு நடந்தது. டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 150-க்கும் அதிகமான நபர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வுக்கு தென் சென்னையின் காவல்துறை உதவி ஆணையர் (போக்குவரத்து) ஹிட்லர் தலைமை வகித்தார்.நிகழ்வின்போது டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறையின் பிராந்திய தலைவர் டாக்டர். ஸ்ரீனிவாச ராவ் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது,“மீண்டும் சரிசெய்ய முடியாத பார்வைத்திறனிழப்பிற்கு (குருடாதல்) இட்டுச்செல்லும் கண் கோளாறுகளின் ஒரு தொகுப்பான கண் அழுத்த நோய் (கிளாக்கோமா) மிக அதிக எண்ணிக்கையில் மக்களிடம் காணப்படுவதால், உலகளவில் இந்நோய்க்கான தலைநகரமாக இந்தியாவை குறிப்பிடலாம்.
இந்தியாவில் கண் அழுத்த நோயால் 12 மில்லியன் நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் மற்றும் 1.2 மில்லியன் நபர்கள் பார்வையற்றவர்களாக இதனால் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். பிரைமரி ஆங்கிள் குளோஷர் நோய் (முதன்மை கோண மூடல்) பாதிப்பு தென்னிந்தியாவில் 1.58% என்ற அளவில் இருப்பதாக அறியப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவின் கிராமப்புற மக்களிடையே POAG (முதன்மை திறந்தகோண கண் அழுத்த நோய்) பாதிப்பு 1.62% ஆக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவர்களுள் 98.5% சதவிகித நபர்கள் இந்நோய் பாதிப்பு தங்களுக்கு இருப்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர்.
இதுவே நகர்ப்புற மக்களில் 3.51% என உயர்வான விகிதத்தில் காணப்படுகிறது. இவர்களுள் 90% – க்கும் கூடுதலான நபர்களுக்கு இந்நோய் பாதிப்பு பங்களிப்பு இருப்பது தெரியாது என்ற தரவு வருத்தத்திற்குரியது. கண் அழுத்த நோய் வராமல் முன்கூட்டியே தடுப்பதற்கு இதுவரை அறியப்பட்ட நடவடிக்கைகள் எதுவுமில்லை.
ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளையும் கண் அழுத்த நோய் வெளிப்படுத்துவதில்லை என்பதால், ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பு இருப்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகளை செய்வதும் மற்றும் உகந்த சிகிச்சையைப் பெறுவதுமே பார்வையைப் பறிக்கின்ற இந்த கடுமையான நோயின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறையாகும். கண் அழுத்த நோயின் காரணமாக, பார்வை முற்றிலும் பறிபோகாமல் தடுப்பதற்கு இதுவே ஒரே வழிமுறையாக இருக்கிறது” என்றார்.
டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர் டாக்டர். கே. சுகிபிரியா பேசும்போது, “எந்த வயதிலும் கண் அழுத்த நோய் ஒருவரை பாதிக்கக்கூடும். எனினும் 40 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், கண் அழுத்த நோய் பாதிப்பு வரலாற்றைக் குடும்பத்தில் கொண்டிருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் உயர்ந்த ஒளிவிலகல் குறைபாடுகள் உள்ளவர்கள், ஸ்டீராய்டை உள்ளடக்கிய கண் சொட்டு மருந்து, மாத்திரைகள், இன்ஹேலர்கள் மற்றும் சருமக் க்ரீம்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவோர் கண் அழுத்த நோயால் பாதிப்பிற்கு ஆளாகக்கூடிய இடர்வாய்ப்புள்ள நபர்களாக கருதப்படுகின்றனர். இத்தகைய நபர்கள் கண் அழுத்த நோய் தங்களுக்கு இருக்கிறதா என்று அறிவதற்காக ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
கண் அழுத்த நோய் இருப்பதை கண்டறிவதற்கு ஒரே வழியாக மருத்துவ பரிசோதனை மட்டுமே இருக்கிறது. பார்வைத்திறனிழப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு இப்பாதிப்பின் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதும், சரியான சிகிச்சையை பெறுவதும் அவசியம். இந்த செய்தியினை மக்களிடம் எடுத்துச்சென்று அவர்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் பணியை டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, அதன் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் அடங்கிய மாபெரும் வலையமைப்பின் மூலம் செய்திருக்கிறது. ஆரம்ப சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், இத்தகைய நோயாளிகளை கண்டறிந்து, கண் மருத்துவ நிபுணர்களிடம் உடனடியாக சிகிச்சைக்கு அனுப்புவதும் மற்றும் நோயாளிகள் விழிப்புணர்வுடன் இதற்கான சிகிச்சையைத் தேடுவதும் கண் அழுத்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பெரும் உதவியாக இருக்கும்” என்றார்.