காதலும் அது சந்திக்கிற எதிர்ப்பும் என பழகிப்போன கதை.
கடத்தல் பிஸினஸ், கோடீஸ்வர வாழ்க்கை என்றிருக்கும் மூர்த்தியின் மகள், ஏழை இளைஞனைக் காதலிக்கிறாள். தன் அந்தஸ்துக்கு பொருத்தமில்லாதவன் என்பதால் மகள் காதலிக்கும் இளைஞன் மீது மூர்த்திக்கு வெறுப்பு உருவாகிறது. அவனை வளைத்துப் பிடித்து தாக்கி, விசைப்படகு ஒன்றில் தூக்கிப் போட்டுக் கொண்டு கடலுக்குள் போகிறார். அவனை கொன்று கடலில் வீசுவது அவரது திட்டம். அதை தெரிந்துகொண்ட அவன், அவரை தாக்கத் தொடங்குகிறான்; அவரும் திருப்பித் தாக்குகிறார். அந்த மோதலின் விளைவுகளே மீதிக் கதை…
மூர்த்தியாக சரத்குமார். வில்லனாக நடித்துப் பழக்கப்பட்டவர். அந்த வில்லத்தனத்தை பணக்கார அப்பாவாக இருந்து, மகளுடைய அப்பாவித்தனமான காதலன் மீது காட்டுகிற வேலை. அந்த வேலையை தனித்துவம் எதுவுமில்லாத மிரட்டலோடு செய்திருக்கிறார்.
காதலனாக இந்திரஜித். பொருளாதாரச் சுமையில் சிக்கித் தவிக்கும் குடும்பத்துப் வாரிசான அவருக்கு காதலிப்பதற்கான தருணங்கள் குறைவாக இருக்க மற்ற நேரம் முழுக்க காதலியின் அப்பாவிடம் தாறுமாறாய் அடிபட்டு ரத்தம் சிந்துகிறார். அவரை கடுமையாக திருப்பித் தாக்கும்போது இடையில் எட்டிப் பார்க்கும் மனிதாபிமானத்தால் அவரது கேரக்டரின் மதிப்பு கூடுகிறது.
இளமையும் அழகும் சரிவிகிதமாக கலந்திருக்கும் தேவிகா சதீஷ், தனக்கு கிடைத்த மிகச்சில காட்சிகளைப் பயன்படுத்தி கல்லூரிப் படிப்புக்கிடையில் காதல் உணர்வில் மிதக்கிற கடமையை கச்சிதமாக செய்திருக்கிறார்.
மூர்த்தி மீது காட்டும் ஆத்திரத்தின் விளைவால் தாக்கப்பட்டு காரிலிருந்து வீசப்படுபவராக திரைப்பட மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன், ஆரம்பக் காட்சியில் பரபரப்புத் தீ பற்ற வைக்கிறார். இன்னும் ஒரு சிலர் அப்படியும் இப்படியும் வந்துபோவதோடு சரி.
கதையின் பெரும்பகுதி நடுக்கடல், அதில் பயணிக்கும் விசை படகில் வெறித்தனமாக தாக்கிக் கொள்ளும் இரண்டு பேர் என குறிப்பிட்ட வட்டத்துக்குள் சுற்றிக்கொண்டிருக்க அந்த காட்சிகளை தன் நேர்த்தியான ஒளிப்பதிவால் தரமாக்கிக் தந்திருக்கிறார் ஆனந்த் என் நாயர்.
ஜாஸி கிஃப்ட் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பரபரப்பான காட்சிகளுக்கேற்ற சுறுசுறுப்பான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் வில்லியம் ஃப்ரான்சிஸ்.
அடிதடி சம்பவங்கள் கடலுக்குள் நடக்கிறது என்பதைத் தவிர கதை, திரைக்கதையில் எந்த புதுமையும் இல்லாததால் மாதவ் ராமதாஸன் இயக்கியிருக்கும் இந்த ‘ஆழி’யால் ஆடியன்ஸுக்கு திருப்தி கிடைப்பது கேள்விக்குறியாகிறது.
-சு.கணேஷ்குமார்
