Home விமர்சனம் தாய் கிழவி சினிமா விமர்சனம்

தாய் கிழவி சினிமா விமர்சனம்

காமெடி மசாலாவில் போட்டுப் புரட்டிய கருத்தாழமிக்க படைப்பாக ‘தாய் கிழவி.’

‘யார் யாருக்கோ சாவு வருது; இது போய்ச் சேர மாட்டேங்குதே’ என ஊரில் பலரும் சுடுசொல் வீசுகிற அளவுக்கு அகம்பாவத்துடன் நடந்து கொள்கிறாள் அந்த கிழவி. சொத்துபத்துகளை பிரித்துக் கொடுக்காமல் சர்வாதிகாரி போல் நடந்துகொள்வதால் பிள்ளைகளுக்கும் அவளை அவ்வளவாக பிடிப்பதில்லை. ஓரு கட்டத்தில் அவளுக்கு உடல்நிலை மோசமடைய, படுத்த படுக்கையாகி விடுகிறாள். ‘இனி பிழைக்க வாய்ப்பேயில்லை’ என்கிற நிலைமை.

ஊர் மக்கள் குஷியாக, மகன்களுக்கும் அவளது நிலைமை உற்சாகத்தை தருகிறது. அந்த நேரமாகப் பார்த்து அந்த மகன்களுக்கு, அவளை காப்பாற்றினால் 160 சவரன் தங்கம் கிடைக்கும் என தெரிய வருகிறது. ‘என்ன செலவானாலும் பரவாயில்லை; சிகிச்சையளித்து காப்பாற்றிவிட வேண்டும்’ என்ற முடிவுக்கு வருகிறார்கள். கைவசமுள்ள காஸ்ட்லியான பொருட்களை விற்பது, கடன் வாங்குவது என சிரமப்பட்டு பணம் புரட்டி, லட்ச லட்சமாக ஹாஸ்பிடலுக்கு கொட்டிக் கொடுக்கிறார்கள்.

இது கதையின் தொடக்கமாக இருக்க கிழவியைக் காப்பாற்ற முடிந்ததா, இல்லையா என்பது திரைக்கதை. அதற்குள் 160 சவரன் நகைக்கும் கிழவிக்கும் என்ன தொடர்பு? கிழவியை எல்லோரும் வெறுப்பதற்கு என்ன காரணம்? என்ற பல கேள்விகளுக்கு அடுத்தடுத்த சுவாரஸ்யம் குறையாத காட்சிகள் பதில் தருகின்றன…

கிழவியாக ‘கலையரசி’ ராதிகா. அவருக்கான மேக்கப் கறுத்த தேகம், உடலில் முதுமையின் தளர்ச்சி, சுருங்கிய கண்கள், கறை படிந்த பற்கள், தண்டட்டியால் நீளமாக காதுகள் என மதுரைப் பக்கம் நடமாடுகிற பாட்டிகளில் ஒருவராக மாற்றியிருக்க, நடந்துகொள்ளும் விதத்திலும் பேச்சிலும் திமிரும் தெனாவட்டையும் கலந்து கட்டி வசனங்களை மதுரை வட்டார வழக்கில் பேசி திரையை தன் நடிப்பாளுமையால் நிரப்புகிறார். சேர்த்த பணத்தை தன் சந்தோஷத்திற்காக செலவழித்து குழந்தைபோல் சுற்றித்திரியும் காட்சி ரசிக்க வைக்கிறது. கிளைமாக்ஸில் சேமிப்பின் அவசியம் குறித்து மருமகள்களுக்கும் மகளுக்கும் அவர் தரும் அறிவுரை ஒட்டுமொத்த சமூகத்திற்குமான பாடம்.

சுயநலத்துக்காக தன் அம்மாவை காப்பாற்றத் துடிக்கும் மகன்களாக சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன். கமல்ஹாசன் ரசிகராக சிங்கம்புலி செய்கிற அலப்பறைகள் கலகலப்பூட்ட, பாலசரவணன் கருப்புசாமிகு அணையா விளக்கேற்ற படும்பாடு ரசிக்க வைக்கிறது. ஒரு உயிர் பிரியும் தருணம் எத்தனை வலி தரக்கூடியது என்பதை அதே பாலசரவணன் மூலம் உணர்த்தியிருப்பது கதையோட்டத்தின் கனமான தருணம்.

கிழவியின் மகளாக ரேச்சல் ரெபேக்காவின் நடிப்பில் எதார்த்தம் நிரம்பியிருக்க, அவர் மூலம்  பெண் சமூகத்துக்கு சொல்லப்பட்டிருக்கும் செய்தி அழுத்தமானது; அவசியமானது.

முனீஸ்காந்துக்கு அட்டகாசமான பாத்திரம். அதை அவர் பாணியில் பக்காவாக செய்திருக்கிறார். சிரிப்புக்கு கேரண்டி தருகிறார் ஆசாரியாக வருகிற இளவரசு.

கிழவிக்கு மருமகனாக வருகிற வேட்டை முத்துக்குமாராகட்டும், மருமகள்களாக வருகிற மூன்று பெண்களாகட்டும், மருத்துவமனையின் சீஃப் டாக்டராகட்டும், கருப்பு சாமியின் விளக்கை அணையாமல் பாதுகாக்கும் குடிகாரராகட்டும் படத்தில் ஒரு கதாபாத்திரம் கூட அல்லுசில்லாக இல்லை. அத்தனைப் பேருக்கும் முக்கியத்துவம் இருக்கிறது.

ஜெகன் கவிராஜ்,  கருமாத்தூர் மணிமாறன் இருவரும் தந்துள்ள கதைக்குப் பொருத்தமான பாடல் வரிகள் நிவாஸ் கே பிரசன்னா இசையில் மனதில் தங்குகிறது. ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமாரின் கேமரா கண்கள் மதுரை சுற்றுவட்டாரம், உசிலம்பட்டியின் சந்துபொந்துகள் என சுற்றித் திரிந்ததில் காட்சிகள் தரம் கூடியிருக்கிறது.

பொழுதுபோக்கு அம்சங்களுக்கு குறைவில்லாமல் பார்த்துக் கொண்டு அதில் சுயநல மனிதர்களை எடுத்துக்காட்டி, பெண்களுக்கான சுதந்திரம் பற்றி அலசி ஆராய்ந்து, உயிரின் மதிப்பை உணர்த்தி… இன்னும் பலவற்றை ஒரே படத்தில் அலுப்பு சலிப்பு வராதபடி செய்திருக்கிற இயக்குநர் சிவகுமார் முருகேசன் மெகாஹிட் படங்களை இயக்கியவர்களின் பட்டியலில் இணைகிறார்.

தாய் கிழவி – பார்வைக்கு மோசக்காரி; பக்குவத்தில் பாசக்காரி!

-சு.கணேஷ்குமார்  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்